குழந்தைமைகள்… -றாம் சந்தோஷ்
என் தெருவில் பெரிய ஆடுகள் ஈன்ற
சிறு பருவ வெள்ளாடுகள் உண்டு
என் தெருவில் பெரு நாய்கள் போட்ட
சிறு கால நாய்கள் உண்டு
என் தெருவில் பெரிய பெரிய
ஆண்களும் பெண்களும் பெற்ற
சிறு சிறு வயது ஆண்களும் பெண்களும் உண்டு
அவர்களை நான் நண்டே என்பேன்
புன்னகை மலரை முகமேந்தும் போதெல்லாம்
அள்ளி அணைத்து கிள்ளோ கிள்ளென்று
கிள்ளுவேன் சிறு கண்ணங்களை.
லட்டே என்பேன், ஜிலேபி என்பேன்.
அவர்களோ என் தலைமுடியைப் பிடித்து இழுப்பார்கள்.
கழுத்து மேல் அமர்ந்தபடி மேளமடிப்பார்கள்
காதில் கத்தோ கத்தென்று கத்துவார்கள்
நான் சாப்பிடும் போதென்று
பொத் பொத் என்று ஆய் இடுவார்கள்.
நான் பொன்னே என்று வாங்கி வந்த
பொருட்களை எல்லாம் பொருட்டென என்னாது
உடைத்துவிட்டுச் சிரிப்பார்கள்.
போதாக் குறைக்கு அவசரம் வரும்போது
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல்
இருந்த இடத்தில் மூத்திரம் இருப்பவர்களும் உண்டு:
’அந்த இடத்தில் என் கவிதைத் தொகுப்பினை
போட்டு நனைப்பவனைப் பாருங்கள் அங்கே;
அட்டூழியம் யாவும்.
அழகு யாவும்.’
நாம், சின்ன சின்ன வயதின் ஆண்களும், பெண்களும்
பண்ணும் எந்த விசயத்தையும் யாரும் பெரிது பண்ணுவதில்லை.
நான் பெரியவனானப் பின்பு பண்ண எந்தச் சின்ன விசயமும்
சின்னதாகவே யாரும் கருதிய நாளில்லை.
எனவே, நான் ஆவேன் ஒரு சின்னப் பையனாய்,
காய்ந்த அம்மாவின் மலர்ச் சரத்தை மெல்லுவேன்,
வீட்டுப் பெட்டிக் கடையில் அடிக்கி வைக்கப்பட்ட
அனைத்தையும் போட்டுடைப்பேன்,
அப்பாவை தாத்தா என்று அழைத்து,
அன்று கிடைக்காத அனைத்துச் சலுகைகளையும்
திரும்பப் பெற்றுக் கொள்வேன்.
அவர் மடியில் வேண்டுமென்றே மலம் கழிப்பேன்.
தினமும் பட்டதை எல்லாம் வாங்கித் தரச் சொல்லி
அடம்பிடிப்பேன்,
எதையாவது கொண்டு வீட்டை தும்சம் செய்வேன்.
தரையில் சாக் பீஸ் துண்டுகளை வைத்து
அன்னா, ஆவன்னாவுக்குப் பதில்
எ, பி, சி. டி எழுதுவேன்
சாப்பிட அரற்றுவேன்,
மெத்தக் கெஞ்சினால் ஒரு வாய்ச் சாப்பிட்டுவிட்டு
அதையும் உவாக் கென்று துப்புவேன்.
தண்ணீரோ வாளி குடிப்பேன்.
சாதம் பிணைந்து கொண்டு தெருவில்
என் பின்னே அலையச் செய்வேன்.
தெரு நாயினை பயமில்லாமல்
அதட்டுவேன்,
அதன் மேவாயை போட்டுக் கிள்ளுவேன்,
இரவில் என் பெற்றோர் தூங்கும் போது
நான் அழுவேன் வேக வேகமாய்
சட்டைப் போட கெடு பிடிப்பேன்,
அவ்வப்போது ஜுரம் வந்து படுப்பேன்.
வீட்டுப் பாடம் செய்து தரச் சொல்லி கேட்பேன்.
எது கேட்டாலும் தெரியாதென்பேன்;
அதற்கும் பாராட்டு பெறுவேன்.
எண்ணற்ற கேள்வி கேட்பேன்;
வண்டியில் கூட்டிக் கொண்டுப் போகச் சொல்லுவேன்.
அதிகமாய் சாக்கி தின்பேன்.
பால் பற்கள் பாதியை இழப்பேன்.
இந்த முறை
அம்மாவை அடிக்கச் சொல்லுவேன்.
ஒரே ஒருமுறை நானே தந்தையுமாகி
ஒரே ஒருமுறை நானே குழந்தையுமாகி
மடியிலிட்டு, மாரிலிட்டு, தோளிலிட்டு,
மனதிலிட்டு தாலாட்டுவேன்;
போதுமென்றான பின், திரும்புவேன்
என் பிழைப்பிற்கு.
Comments
Post a Comment