வாசகர் பகுதி

 ஐயா வணக்கம். 

கூதிர் மின்னிதழைப் படித்தேன். ஆய்வுக் கட்டுரைகள், புதுக்கவிதைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. மரபுக் கவிதைக்கும் வாய்ப்பளித்திருக்கலாம். தமிழின் மேன்மைக்கும், தமிழின் சிறப்பிற்கும் மரபுக் கவிதைகள் தாம் அடிப்படை. தமிழ் இன்றளவும் அழியாமல் இருப்பதற்கு மரபுக் கவிதைகளால் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள் தாம்.

-பாவலர் கருமலைத்தமிழாழன்

இதழ் வடிவமைப்பு, முகப்பு ஓவியம் , ஆசிரியர் பக்கம், கூதிர் தொடர்பான தரவுகள், ஆழமான படைப்புகள் ஆகியன எளிமையாகவும் அதே சமயத்தில் அழகியல் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. மின்னிதழின் பின்னணியில் உள்ள பணித் தன்மைப் போற்றுதலுக்குரியது, அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது உள்ளார்ந்த வாழ்த்துகள் என்றும் உரியது.

-இர.கண்ணதாசன்

“படைப்பாளியை முன் நிறுத்தாமல் படைப்பை முன்னிறுத்துவதே" முதன்மையான‌ அறம் என்பர். அந்த வகையில் கூதிர் மின்னிதழின் முதல்  பருவம் படைப்புகளை முன்னிறுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விதழில் தமிழ் சைவம் வைதீகத்திற்கு எதிரான ஒரு மரபாக வளர்ந்த வரலாற்றைப் பேசுவது என்னை மிகவும்‌ ஈர்த்தது.இவ்விதழை இதழுக்கான கவிதைகள், இலக்கிய மற்றும் அரசியல் சார்ந்த கட்டுரைகள் மற்றும் சினிமா கட்டுரை என‌ ஒரு மரபான‌ இலக்கிய இதழுக்கான பாணியை ஆசிரியர்கள் வடிவமைத்தது பாராட்டுக்குரியது. இளைஞர்களின் முயற்சிக்கு உறுதுணையாக‌ கவிதைகள் தந்த இளம்‌ கவிஞர்கள் றாம் சந்தோஷ் மற்றும் கருவை ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள்.மொத்தமாக, இக்காலகட்டத்தின் அரசியல், சமூகம் மற்றும் இலக்கிய சூழலில் மனிதத்தை முன்னிறுத்தி பன்முகத்தன்மையோடு இயங்கும் கூதிர்‌ இதழுக்கு வாழ்த்துக்கள்.

-கா.கருப்பண்ணா

அப்படியென்ன -அரம்பன்

      பலதரப்பட்ட வாசகர்களுக்கு கூதிர் சென்றிருப்பதாகத் தெரிகிறது. இதழின் தொகுப்பாசிரியர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பது இதில் கவனிக்கத்தக்க அம்சம். கருத்து மாறுபாடுகள் முழுமையடையாத தீவிரத் தன்மையிலிருக்கும் காலத்தில் இப்படியானதொரு செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பது நல்லதொரு அனுபவத்தைத் தரும் என்பதன் அடிப்படையிலேயே இந்த முயற்சி செய்யப்படுவதாக ஆசிரியர் பக்கத்திலிருந்து அறிய முடிகிறது. அதேசமயம் வெறும் ஆர்வம் மட்டுமே இதழை நடத்த போதுமானதல்ல என்பதையும் யோசிப்பது நலம்.

       உள்ளடக்க அடிப்படையில் இலக்கிய சமநிலைத் தன்மை இதழில் இருக்கிறது. பி.டி.எஃப் வடிவத்தில் பல குறைகள் உண்டு. ப்ளாக் வடிவத்தில் அவை செம்மைப்படுத்தப்பட்டிருப்பதால் பேருக்கு இதழ் நடத்தப்படவில்லை ஏதோவொரு கற்றலின் நிமித்தம் நடத்தப்படுகிறது என்பது உறுதியாகிறது. மின்னிதழில் வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதில் கவனம் செலுத்தியாக வேண்டியுள்ளது. எத்தன்மைக்குள்ளும் எளிதாக அடக்கிவிட முடியாததாக இதழ் இருப்பதாக நான் உணர்கிறேன். இதற்கு காரணம் இதழில் இடம்பெற்றிருந்த கட்டுரைகள். சைவ சித்தாந்தத்தின் செயல்பாட்டு வரலாறு, இஸ்லாமியத்தை மையப்படுத்தி நிகழும் பெயர் அரசியல், கல்விப்புல நெடியில் இடம்பெற்றுள்ள தூர்வை நாவல் பற்றிய கட்டுரை என்று இதழில் வெளியாகியுள்ள ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு தளங்களைக் கொண்டது. இதில் திரைப்படத்தைப் பேசும் கண்ணிவெடிகளின் தேசம் கட்டுரை தனித்துப் பார்க்கத்தக்கது. தமிழியல் கல்விப்புலத்தின் ஒழுங்கற்ற வெளிப்பாடாக வெளிவரும் கட்டுரைகளுக்கு நடுவே சமய அரசியலையும் திரைப்படங்களையும் பேசக்கூடிய கட்டுரைகள் இடம்பெற்றிருப்பது நல்லதே. 

     இதழில் வெளியான கவிதைகளைப் பார்த்தோமானால், றாம் சந்தோஷ், தமிழ்பாரதன், கருவை ந. ஸ்டாலின் போன்ற தொடர்ந்து செயல்படும் கவிஞர்களது கவிதைகளோடு ஆல்யன், திரமிளன், அரா ஆகியோரது கவிதைகளும் சாந்தி சரவணன் எழுதிய ஹைக்கூவும் இடம்பெற்றுள்ளது. தனிமையின் தழலை வெவ்வேறு பக்கம் நின்று பேசுபவையாக ஸ்டாலினின் கவிதைகளும் குழந்தை மனச் சித்திரத்தை கையாட்டிக் கதை சொல்லும் தன்மையில் றாம் சந்தோஷ் கவிதையும் அமைந்துள்ளது. தமிழ் பாரதன் அசோகமித்திரனை வைத்து எழுதியுள்ள கவிதை மனிதனின் குரங்கு நிலைச் செயலில் உதிரும் வார்த்தைகள். ஆல்யன் கவிதை கொடுக்கும் குரலின் தொனி கவிதைக்கான பலமாக இருக்கிறது.  திரமிளன் என்ற பெயரே அரசியல் குறியீடு. திரமிளனின் கவிதையும் அரசியலைத் தான் முன்வைக்கிறது. தொடர்ந்து திரமிளனின் படைப்புகள் வெளியானால் தான் அவர் முன்வைக்கும் அரசியல் என்னவென்பது தெரிய வரும். கவிதை என்றளவில் திரமிளனின் கவிதை பயன்படுத்தியுள்ள உத்தி பழையது. அரா கவிதைகள் குறித்து அரம்பன் இப்போதைக்கு பேசப்போவதில்லை. இதழில் ஒரு மொழிபெயர்ப்பையும் சேர்த்துள்ளனர். மொழிபெயர்ப்பு மீது இதழ் தொடர்ந்து கவனம் செலுத்துவது கடினமேயானாலும் அதைச் செய்ய வேண்டும். அது இதழுக்கு பலமாக அமையும்.

      சிறுகதை, தொடர்கதை இரண்டு இருக்கிறது. தாயளி உருவம் பெற்ற சிறுகதை என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. வெறுமனே ஒரு நிகழ்வு கதை ஆகுமா? ஒரு நிகழ்வை கதை ஆக்கலாமா? என்றால் ஆகும், ஆக்கலாம். ஆனால் அதை எப்படியாகத் தருவது என்பதில் தான் இலக்கியம் இருக்கிறது. வார்த்தைகளைத் தேவைக்கதிகமாக பயன்படுத்துவது உளறல் தன்மையைக் கொடுத்துவிடும். தொடர்ந்து சிறுகதை பயிற்சியில் பிரகாஷ் ஈடுபடுதல் வேண்டும். அவரிடமிருக்கும் உட்கருத்தை வெளிப்படுத்துவதில் தான் சிக்கலைத் தவிர அவர் கையில் எடுத்துள்ள உட்கருத்தில் குறையேதும் இல்லை. இன்றைய இளைஞர்களில் ஒரு நபரே சத்யா. பால் செயல்பாட்டின் தாக்கம் இந்த கதைகளுக்குள் தொடரும் என எதிர்பார்க்கலாம். சத்யா போன்ற கதைகள் எழுதப்படுவது அவசியம். எடுத்தாளப்பட்ட பகுதியும் புதுமை பெற வேண்டும். நல்லதொரு தொடக்கமே இதழ் இன்னும் மேம்பாட்டு அம்சங்கள் பெற்றுத் தொடரட்டும்.

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு