இரண்டு புள்ளி சுழியமும் இரண்டாயிரத்து இருபத்து நான்கும்

இரண்டு புள்ளி சுழியமும் இரண்டாயிரத்து இருபத்து நான்கும்

 காசி தமிழ் சங்கமம் 2.0 - 2023

பயண அனுபவம் -அழகுராஜ்



     காசி தமிழ் சங்கமத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏற்படுத்தியதன் நோக்கம் தமிழ்நாட்டிற்கும் உத்திரப்பிரதேசத்தின் காசி நகர்க்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்பை மக்களுக்கு தெரியப்படுத்துவதும் மீளுருவாக்கம் செய்து புதிப்பிப்பதுமே ஆகும். சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட சங்கமத்தின் வெற்றி இந்த ஆண்டும் சங்கமத்தை நடத்த வைத்துள்ளது என்றே கருத வேண்டியிருக்கிறது. இந்த பயணத்தின் சிறப்பம்சங்களில் முக்கியமானது நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் அரசு அமைப்புகள் அனைத்தும் ஒரே புள்ளியில் சங்கமித்திருப்பது தான். இந்தியக் கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் சென்னை இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், இந்திய இரயில்வே துறை, இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் ஆகியவற்றோடு உத்திரப்பிரதேச அரசும் ஒன்றிணைந்ததன் விளைவு தான் பயணம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படுவதற்கான முக்கிய காரணம். 


     தமிழில் செலவு என்ற சொல்லால் பயணத்தைக் குறிப்பிடுவர். செல்தல், சென்று வருதலை செலவு எனலாம். பயணம் செய்வதற்கு செலவு செய்ய வேண்டியிருப்பதால் இப்படியான பொருள் வந்திருக்குமோ என்று கூட வேடிக்கையாக நமக்குள் கேட்டுக்கொள்ளலாம். காசி தமிழ் சங்கமம் பயணத்தில் சென்று வர செலவு உண்டா? எனக் கேட்டால், தமிழ்நாட்டிலிருந்து தொடர் வண்டியில் ஏறுவது முதல் திரும்பி தொடர்வண்டியிலேயே வந்து சேரும் வரையிலான பயண செலவு அரசினுடையது. இதில் தொடர்வண்டி பயணத்தைக் கடந்து உத்திரப்பிரதேச மாநிலத்திற்குள் குளிரூட்டப்பட்ட, மின்சாரப் பேருந்துகளில் பயணம் செய்வதும் அடக்கம். அது மட்டுமல்லாமல் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் தங்குமிடம் ஆகியன அரசின் பொறுப்பு. இப்படியான எல்லா ஏற்பாடுகளுக்குமான வைப்புத் தொகை 1500ரூபாய். அந்த தொகை திரும்ப அளிக்கப்படும் என்கிற வரைமுறை பயணப்பதிவில் இருக்கிறது. பயணம் செல்வதற்கு பணம் மட்டுமே தடை என இருப்பவர்களுக்கு காசி தமிழ் சங்கமம் பயணம் ஒரு நல்வாய்ப்பு. சங்கமத்தில் பயணிக்கும் ஒரு நபருக்கான செலவு 39,000 என்பதாக தொடர்வண்டியில் சிலர் பேசிக் கொண்டிருந்ததையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.


     காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பண்பாடு மட்டுமே பயணத்தில் வெளிப்படவில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சார்ந்தவர்களை ஓரிடத்தில் இணைக்கும் கண்ணியாகவும் இந்த பயணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் சௌராஷ்டிரர்கள் இருந்தனர். செல்லும் போது இரண்டு நாட்கள் மற்றும் திரும்பி வரும்போது இரண்டு நாட்கள் என மொத்தம் நான்கு நாட்கள் தொடர்வண்டியிலேயே பயணித்தது ஒருவருக்கொருவர் சக பயணிகளிடம் அன்பை பரிமாறுவதற்கும் அளவளாவி பேசுவதற்குமான பெருவாய்ப்பாக அமைந்தது. குறைந்த நாட்களில் நிறைந்த அன்பை பரிமாறிக் கொள்ளும் செயல்பாட்டை தொடர்வண்டியின் மூன்று பெட்டிகள் முழுக்க பார்க்க முடிந்தது. சிலர் கண்ணீர்விட்டு பிரிந்ததையும் பார்த்தேன். எட்டு நாட்கள் மட்டுமே கொண்டுள்ள தொடர்பின் நிமித்தம் வெளிப்படும் கண்ணீரில் அன்பும் அவ்வப்போது காட்டிய அக்கறையும் உதவியும் இணைந்த பயணமும் சில விளையாட்டுகளும் பலவித பேச்சுகளும் பாடலும் நடனமும் என சொல்லிக் கொண்டே செல்லும் அளவுக்கான எத்தனை எத்தனையோ காரணங்கள் ஒளிந்துகிடக்கிறது. கருத்து வேறுபாடுகள், விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தாண்டியதொரு நட்பின் உருவாக்கத்திற்குரிய இடமாக காசி தமிழ் சங்கமம் இருந்தது எனலாம்.


     தமிழ்நாட்டிற்குள் இருக்கும் பல ஊர்களைச் சார்ந்தவர்கள் பயணத்தில் இணைந்தது சிறப்பானதொரு திட்டம். அதேசமயம் பல்வேறு கருத்தியல் சார்பு கொண்டவர்களுக்கும் வாய்ப்பளித்திருந்தால் மாணவர்களது சிந்தனை விரிவாக்கத்திற்கு உரமளித்திருக்கலாம். ஒவ்வொருவரும் தங்களது சொந்த ஊரின் சிறப்புகளை பரிமாறிக் கொள்வதன் மூலம் தமிழ்நாட்டின் விரிந்த பரப்புநிலை குறித்த புரிதல் பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன். பண்பாட்டை அறிதல் மற்றும் பகிர்தல் இந்த பயணத்தில் கிடைத்த நண்பர்கள் மூலம் ஓரளவு நிறைவேறியது. கங்கா குழு எனும் காசி தமிழ் சங்கமத்தின் முதல் குழு மாணவர்களுக்கானது. இதில் இடம்பெற்ற மாணவர்கள் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களாகவும் போட்டித்தேர்வுக்கு தயாராகக்கூடியவர்களாகவும் இருந்ததால் பேசுவதற்கு நிறைய காரியங்கள் இருந்தன. மருத்துவம், கலை, அறிவியல், பொறியியல் என்ற பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அறிவுசார்ந்த தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். இந்த இடத்தில் கேளிக்கைகளுக்கும் குறைவில்லை என்பதை மறந்து விடக்கூடாது.


      காசி தமிழ் சங்கம பயணத்திற்கு நண்பர்கள் ஐவருடன் இணைந்தே பதிவு செய்தேன். பயணத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் உச்சத்திலிருந்த நண்பர்களும் வாய்ப்பு கிடைத்தால் செல்வோம் என்ற எண்ணத்தில் இருந்தவர்களும் இதற்குள் அடக்கம். இதில் நான் இரண்டாம் வகை. எனக்கு எப்படியோ பயணம் சென்று வருவதற்குரிய வாய்ப்பு கிடைத்தது. நானும் அதனை பயன்படுத்திக் கொண்டேன். வாய்ப்பு கிடைத்தும் அதனை இழந்தவர்களைக் குறித்து சொல்வதற்கு என்னிடம் ஏதும் இல்லை. இப்போது நேரடியாக காசி தமிழ் சங்கமத்திற்குள் செல்லலாம். பராரிகள் நூலில் நரன் “பயணம் என்பது உலகின் மிக நீண்ட சொல், அதில் தொடக்கமுமில்லை, முடிவுமில்லை.” என்பார். ஆனால், நான் இந்த இடத்தில் பயணத்தின் தொடக்கத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் தான் பயணத் திட்டப்படி தொடக்கமும் முடிவும். உண்மையைச் சொன்னால் பயணம் தொடங்கிய இடம் என்று தொடர்வண்டி நிலையத்தைக் குறிப்பிடுவதைப் போல பயணத்தின் முடிவு என அதனைக் குறிப்பிடுவது பொருந்துவதாகாது. இன்னும் பயணம் முடியவில்லை. வாகனம் ஏதுமற்ற சுற்றித் திரிதலற்ற நட்பு பயணமாக இன்னும் பயணம் பலரது நினைவுகளுக்குள் தொடரவே செய்யும். 


     சென்னை சென்ட்ரலில் தொடரியில் ஏறும் போது பேனா, குடை, தொப்பி ஆகியன அடங்கிய ஒரு பை கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ரோஜா கொடுத்து மாணவர்களிடம் உரையாடினார். அதன்பின் அருகிலிருக்கும் நபர்களுடன் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளும் சடங்கு நடந்தேறியது. அப்போது அறிமுகப்படுத்திக் கொள்ளும் நேரத்தில் எட்டு நாட்கள் பயணத்திற்கு பின்னான பிரிவுணர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதை எவரும் அதிகம் உணர்ந்திருக்கமாட்டார்கள். பயணத்தின் போது கொடுக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் இருந்தன. அப்படியிருந்தும் பலருக்கு அந்த உணவின் மீதான ஆர்வம் குறைந்தே இருந்தது. ஆனால் உத்திரப்பிரதேசம் சென்றபின் அங்கு கொடுக்கப்பட்ட உணவில் ஒரு குறையும் சொல்ல முடியாத அளவு தரமான உணவு கொடுக்கப்பட்டது. சென்ற வருடம் காசி தமிழ் சங்கமம் சென்று வந்தவர்கள் கொடுக்கப்பட்ட சிற்றுண்டிகள் குறித்து விதந்தோதி அனுப்பினர். அதனைக் கேட்டவர்கள் சிற்றுண்டி விவகாரத்தில் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். குளிரூட்டி இல்லை என்றால் இரண்டு நாட்கள் தொடர்வண்டிக்குள் இருந்திருக்க முடியாது. அதேபோல வடக்கே நோக்கி போகக்கூடிய வழியில் குளிர் ஏறிக்கொண்டே போனதையும் உணர முடிந்தது. சூடான தண்ணீர் கிடைப்பதில் பலர் போதாமையை உணர்ந்தனர். ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் சில இடங்களில் தேநீர் கொடுத்தது ஆறுதலளித்த செயல்.


     தொடர்வண்டியில் இருந்து பார்த்தவரையில் ஒரு நிலவியல் வேறுபாடு தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இது பொதுவாக அதிகம் பயணித்து ஆராய்ந்து சொல்லக்கூடிய கருத்தல்ல. ஏதோ நான்கு நாட்கள் தொடர்வண்டிக்குள் இருந்து பார்த்ததை வைத்து சொல்கிறேன். கற்களாலான மலைகள் செல்லும் வழியில் இருந்தன என்றாலும் கூட பல இடங்களில் பாறைகளால் ஆன குன்றுகளே நிரம்பியிருந்தது போன்ற தோற்றம் வெளிப்பட்டது. விஜயவாடா, நாக்பூர், ஜெபால்பூர், மானிக்பூர், வாரணாசி மார்க்கத்தில் தூங்கிய நேரம் மற்றும் புத்தகங்கள் படித்த நேரம் போக மீதி நேரத்தில் தொடர்வண்டிக்குள் இருந்து பார்த்ததை வைத்து மட்டுமே இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். வண்டிக்குள் பயணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் கொடுத்தது நல்லதொரு செயல்பாடு. அந்த புத்தகத்தின் தேர்ந்தெடுப்பு வகைமையும் நன்றாகவே இருந்தது. தமிழ் ஆய்வாளர்களின் வழியே காசியைப் பற்றிய தமிழ் இலக்கியச் செய்திகளை தொகுத்தளித்த வகைமையில் சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரனை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட “தமிழர் மரபில் காசி” என்ற நூலும் காசி தமிழ் சங்கமம் பயணத்தில் இடம்பெற்ற இடங்களைப் பற்றிய சிறப்புகளை பல்வேறு தகவல்களின் ஊடாக பயண அனுபவத்தைச் சேர்த்து அளிக்கும் நிலையில் “காசியும் தமிழகமும் ஒரு பாரம்பரிய சம்பந்தம்” என்ற டி‌.கே.ஹரி, டி.கே‌.ஹேமா ஹரி ஆகியோர் இணைந்து எழுதிய புத்தகமும் படிக்க கொடுக்கப்பட்டது. வாரணாசி சென்று இறங்குவதற்குள் இரண்டு புத்தகங்களையும் படித்து முடிக்குமளவு நேரமும் இருந்தது. 


     துடி இசைக்கும் வழக்கம் தமிழ்நாட்டிற்குள் இருக்கிறதா என்பதை நான் அறியேன். வாரணாசியில் இறங்கியபோதும் ப்ராயாக்ராஜ் நிகழ்ச்சிக்கு சென்ற போதும் இரண்டு புறமும் வழி நெடுக துடி இசைத்து வரவேற்றனர். சென்னையில் கிளம்பிய நேரம் முதற்கொண்டு தோற்கருவிகளின் சத்தத்திற்கு குறைபாடில்லை. சில மாணவர்கள் தோற்கருவிகளை வாங்கி இசைத்ததும் பயணத்தின் நடுவே நிகழ்ந்தது. வாரணாசியில் இறங்கியபோது கொடுக்கப்பட்ட வரவேற்பு எப்படியானது என்றால் மாலை மத்தள வரவேற்பு என்ற தமிழ்த்தொடருக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலான வரவேற்பு. வயதானவர்களும் வழி நெடுக நின்று வணக்கம் வைக்கும் வகையிலானதொரு வரவேற்பை உத்திரப்பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்ததது. இதேநிலை தான் காசி விசுவநாதர் கோயிலிலும் நடந்தது. தமிழ்நாட்டின் தென்பகுதியைச் சார்ந்த திரு. ராஜலிங்கம் ஐ‌.ஏ.எஸ் அவர்கள் தான் வாரணாசி மாவட்டத்தின் ஆட்சியர் என்பது சிறப்பானதொரு தகவல். அவரை காசி விசுவநாதர் கோயிலிலும் நமோகாட் பகுதியிலும் சந்திக்க முடிந்தது. காசி விசுவநாதர் கோயிலில் வைத்து ராஜலிங்கம் ஐ.ஏ.எஸ் அவர்களும் அந்த கோயிலின் தர்மகர்த்தாவாகிய தமிழர்(பெயர் நினைவில்லை) ஒருவரும் உரையாற்றினார்கள். 


      செல்லும் இடங்களில் எல்லாம் பிரதமருடைய விருந்தினர்கள் என்ற முத்திரை கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையின் வழியே இருந்தமையால் அதிக பாதுகாப்பும் வசதிகளும் தரப்பட்டன. இதன் வழியாக விரைவாக பல இடங்களுக்கு சென்று வர முடிந்தது உண்மை என்றாலும் கூட மக்களுடைய பழக்க வழக்கங்கள் பற்றி அதிகம் அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஹனுமன்காட் மட்டுமே இதில் விதிவிலக்கு. ஹனுமன் படித்துறையை ஒட்டியிருந்த வீடுகளில் இருந்தவர்களிடம் உரையாட முடிந்தது. அங்கு தான் பாரதியார் காசியில் வசித்த அவரது அத்தை வீடும் இருக்கிறது. அதன் முற்பகுதியை தமிழ்நாடு அரசு ஒப்பந்த முறையில் குத்தகைக்கு பெற்று நினைவகம் வைத்திருக்கிறது. அந்த வீதியில் பார்த்தவரையில் அனைவருமே தமிழ் பேசக்கூடியவர்களாகவே காணப்பட்டனர். குமரகுருபரருடைய காசிமடம் முதலியன ஹனுமன் படித்துறையின் தமிழ் அடையாளங்கள். 


     கலை அடிப்படையில் நமோ படித்துறை, ப்ரயாக்ராஜ் கலை நிகழ்ச்சி, அயோத்தி கலை நிகழ்ச்சி ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தவை. பல நிலைகளில் தமிழ் நாட்டுப்புறக் கலை வடிவச் சாயல்கள் கொண்டே அவை இருந்தன. இதில் கவனிக்கத்தக்க அம்சம் ஆடை அலங்காரங்கள். அந்த நிலப்பகுதியின் தட்பவெப்பத்திற்கு ஏற்ற உடைகள் அணிந்திருந்தது சில நேரங்களில் கலை நிகழ்த்துதலின் மீதான கவனத்தைத் தாண்டி அவர்களது ஆடை மீது கவனம் குவியும் வகையிலாக மாறியது. இதில் ப்ரயாக்ராஜ் கலை நிகழ்ச்சியில் சமய வேறுபாட்டைக் கடந்து செயின்ட் அந்தோணி இன்டர்காலேஜியேட் மாணவர்களது பாடல் நடனங்கள் இடம்பெற்றிருந்தது. பாடலின் மொழி புரியவில்லை ஆயினும் கிறிஸ்தவ நடன அசைவுகளது மாதிரிகள் இருந்ததை உணர முடிந்தது. உத்திரப்பிரதேச நாட்டுப்புற கலை வடிவங்களது ஒட்டுமொத்த அம்சமாக அயோத்தி கலை நிகழ்ச்சி இருந்தது. இப்படியாக கலை ஒற்றுமை வேற்றுமை நிலைகளை தமிழ் கலை வடிவத்தோடு ஒப்புமை நோக்கில் பார்க்கும் சாத்தியங்கள் பரந்திருந்தன.


      பிரதமர் நரேந்திர மோடியுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மைய உரையோடு கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரிலான தொடர்வண்டியை தொடங்கி வைத்தல் முதலான நிகழ்ச்சிகள் நமோ படித்துறையில் முதல் நாள் நடந்தது. அதில் ஏ.ஐ. மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை பரிசோதனை முறையில் நிகழ்ச்சியில் செயல்படுத்தினார்கள். அந்த இடத்தில் பொருத்தம் கருதி,  “காசிநகர்ப் புலவர் பேசும் உரை காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற பாரதியார் பாடலையும் மேற்கோள் காட்ட தவறவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பு பாரதியார் கவிதைகளை படிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்திலேயே இந்த வரிகளின் உட்கிடையையும் புரிந்து கொண்டேன். ஆனால் அது இப்படியானதொரு விழாவாக திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்தாக பெரிய அளவில் பேசப்படும் நிலைக்கு வரும் என்று நினைத்ததில்லை. பாரதியின் கவிதைகளில் இப்படி இன்னும் பல இடங்கள் பலவற்றை மையப்படுத்தி இருக்கத் தான் செய்கிறது. அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


       சாரநாத் சென்று வந்ததை இந்த பயணத்தின் மிக முக்கியமான பகுதியாகக் கொள்ளலாம். அசோகர் காலத்திய வேர்கள் படிந்த தொல்லியல் தளம் சாரநாத். கன்னியாகுமரியில் நாம் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது போல அங்கு புத்தருக்கு 80அடியில் சிலை வைத்துள்ளனர். மேலும் அங்குள்ள கடைகளில் பலவிதமான கைத்தொழில் பொருட்களும் விற்கப்பட்டன. ப்ரயாக்ராஜ் படகுபயணமும் ஒரு நல்ல அனுபவம். பறவைகள் சூழ் நீரில் படகுபயணம் மேற்கொள்வது எவருக்குத் தான் பிடிக்காமல் இருக்கும். நமோ படித்துறையில் இருந்து கப்பலில் பொழுது சாயும் நேரத்தில் பயணம் செய்ததை எவரும் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள். படகில் இருந்து மணிகர்ணிகாவை பார்ப்பதற்கும் பக்கத்தில் நின்று பார்ப்பதற்கும் இடையிலான ஏதோவொரு வேறுபாட்டை என்னுள் உணர்ந்தேன். பயண சமயத்தில் பேருந்துகள் முக்கிய இடம் பெற்றது. மின்சார பேருந்துகள் மற்றும் உயர்தர குளிரூட்டப்பட்ட சுற்றுலா பேருந்துகளில் பயண வழிகாட்டிகளுடன் சாலைவழிப் பயணம் இருந்தது. பேருந்துக்குள் பாடல், நடனம் என மகிழ்ச்சி ததும்பிய பகுதிகள் இடம்பெற்றிருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி பொறுப்பாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் கனிவுடன் தேவையை நிறைவேற்ற முயற்சி செய்பவர்களாக உடன் பயணித்தனர்.


      தங்கிய நட்சத்திர விடுதியைக் குறித்து சொல்லாமல் விட முடியாது. வாரணாசியின் உயர்தர விடுதிகளில் இரண்டு நாட்கள் இரவு கழிந்தது. விடுதியின் அமைப்பு பணக்காரத்தன்மையை கொடுக்கவல்லதாக இருந்தது. எல்லாவித வசதிகளும் கூடிய அறைகளில் அறைக்கு இருவர் என்பதாக தங்குமிடம் அமைந்தது. அயோத்தி நகர் விடுதியில் இத்தகைய ஆடம்பரம் இல்லை என்றாலும் ஒருநாள் தூங்கி எழுந்து குளித்துவிட்டு செல்வதற்கு அந்த விடுதி ஏற்றது. இதில் இரண்டு நகர்களுடைய வசதி வாய்ப்புகளது பிரதிபலிப்பு இருப்பதாகவே தெரிகிறது. வாரணாசியிலிருந்து அயோத்தி பொருளாதார வளங்கள் அடிப்படையில் எப்படியாக வேறுபாட்டு நிலை கொண்டுள்ளது என்பதன் அடையாளமாக இதனைக் கொள்ளலாம். அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்ததையும் பார்த்தோம். தமிழ்நாட்டு கோயில் அமைப்புகளில் இருந்து உத்திரப்பிரதேச கோயில் அமைப்புகள் அதிக வேறுபாடு கொண்டதாகவே காணப்படுகின்றன. இது பெருங்கோயில்களுக்கு மட்டுமே பொருந்தும். வழி நெடுக இருக்கும் சிறு கோயில்களில் இங்குள்ள அதே அம்சமே இருக்கிறது.  ஒட்டுமொத்தத்தில் இந்த பயணம் பல புதிய அனுபவங்களைத் தந்தது. எதிர்காலத்தில் சில சீர்திருத்தங்களோடு இந்த பயணத்தை செழுமைபடுத்துவது கற்றலுக்கும் பயணத்தின் நோக்கத்திற்கும் மேலும் நன்மை பயக்கும்.


உரையாடல் 

தினேஷ்கண்ணன், அழகுராஜ் 


தினேஷ் கண்ணன்: உங்களின் பயண  நெடுகிலும்  யாசகம் பெறுபவர்களைக்  காண நேர்ந்ததா? அவர்கள் உங்களை அணுகினார்களா? வெவ்வேறு இடங்களில் அவர்களின் ஆடைகளில், கலாச்சார அடையாளங்களில் மாறுபாட்டைக் கவனிக்க முடிந்ததா? அவர்களைப் பார்த்த  அழுத்தமான காட்சி ஏதேனும் நினைவுக்கு வருகிறதா?


அழகுராஜ்: யாசகம் என்பது ஒட்டுமொத்த உலகத்திலும் நிகழும் செயல்பாடு. அதிலும் குறிப்பாக சுற்றுலா தலங்களில் யாசகம் பெறுபவர்கள் இல்லையென்றால் தான் ஆச்சரியம். காசி விஸ்வநாதர் கோயிலில் ஒரு பையன் நெற்றியில் நாமம் போடுமாறு கெஞ்சினான். ஒரு சிறுகுழந்தை அழுக்கு ஆடையோடு வயிற்றில் கைகாட்டி விடாது துரத்தியது. இவையெல்லாம் இங்கும் பார்க்கக்கூடிய நிகழ்வுகளை ஒத்தவை‌. அதனால் சாதாரணமாக விட்டுவிடலாம். அயோத்தி நகரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். நான் கிழிந்த செருப்பை அணிந்தவனாக நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஷீ பாலீஷ் போடும் பையன் ஒருவன் காலையொட்டிக் குனிந்து பாலீஷ் போட்டுக் கொள்ளுமாறு கெஞ்சினான். அந்த செருப்புக்கு பதிலாக புது செருப்பு வாங்க முடியாதிருக்கும் நான் எப்படி பாலீஷ் போட்டுக் கொள்ள முடியும். 


ஆடைகள், அதைக் குறித்து கட்டாயம் பேசியாக வேண்டும். நாங்கள் போன நேரம் கடுமையான குளிர்காலம். அங்குள்ள அனைவருமே ஜர்கின் அணிந்திருந்தார்கள். யாசகம் பெறுபவர்களிடம் அதுகூட இல்லை. யாசகம் பெறுபவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான தேசிய ஆடை தான். மேலும் கோட் ஆடைகள் அங்கு விலைக்குறைவாகவே விற்கப்பட்டன.


தினேஷ் கண்ணன்: வட மாநிலங்களில் ஷூ பாலிஸ் போடும் தொழில் இன்னும் வெகுவாகக் காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் அது வழக்கொழிந்துவிட்டது. இரயில் நிலையங்களில் பணம் செலுத்தி சங்கமாக இயங்கக்கூடிய அளவிற்கு ஷூ பாலிஸ் போடும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதை என்னாலும் கவனிக்க முடிந்தது. சற்றே அந்நியமாகவும் பட்டது


அழகுராஜ்: நான் பார்த்தவரை பெரும்பான்மையாக சிறுவர்களே அந்த தொழிலில் அதிகம் ஈடுபட்டனர்.


தினேஷ் கண்ணன்: விட்டோரியா டி சிக்கா என்ற இத்தாலிய இயக்குனரின் Bicycle thieves என்ற படத்தை அதிகம் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஏழ்மையைக்  குறித்த அவரின் படங்களில் Shoeshine என்ற படம் காத்திரமானது. முழுக்க முழுக்க ஷூ பாலிஸ் போடும் சிறுவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படம். Runner என்ற ஈரானிய திரைப்படமும் ஷூ பாலிஸ் போட்டுக்கொண்டு ஒரு சிதிலடைந்த கைவிடப்பட்ட கப்பலில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறுவனைப் பற்றிய கதையே. 


அழகுராஜ்: நேரம் வாய்க்கும்போது அப்படியான திரைப்படங்களைப் பார்க்க வேண்டும்.


தினேஷ் கண்ணன்: பழைய ரஜினி படங்களில் கூட சிறுவனான ரஜினி அவ்வேலை பார்த்து முன்னேறுவதை நாம் பார்க்கலாம்


அழகுராஜ்: படங்களை அதிகம் பார்க்கும் உங்களைப் போன்றவர்கள் படத்தையும் உண்மைநிலையையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். உண்மை திரையில் காட்சிப்படுத்தப்படுகிறதா என்கிற கேள்வியும் உண்டு. இதற்கு ஆபிரகாம் லிங்கனை உடனே நீங்கள் சொல்வீர்கள் என்பதையும் நான் அறிவேன்.


தினேஷ் கண்ணன்: ரஜினி படங்களில் காண்பிக்கப்பட்டது அப்போதைய சென்னையின் உண்மை நிலையே, கை ரிக்ஸாவையும் இதனோடு சேர்த்துக்கொள்ளலாம். வடக்கில் இன்னும் அது வழக்கிலுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சமயத்தில்  அதைத்  தடை செய்ததாக கேள்வி.


அழகுராஜ்: ஆம். பழைய படங்கள் பலவற்றில் நம்முடைய பண்பாட்டு பழக்க வழக்கத்திற்குரிய சாட்சி இருக்கிறது என்பது உண்மையே. கை ரிக்ஸா கவனிக்கத்தக்க அம்சம். கை ரிக்ஸா இழுப்பவர்கள் இருக்கும் அதே ஊரில்தான் மின்சார வாகனங்களும் அதிகம் ஓடுகிறது. காசியில் ஓடக்கூடிய ஆட்டோக்களில் கூட மின்சாரத்தால் ஓடும் ஆட்டோக்கள் தான் அதிகம் ஓடுகிறது. கை ரிக்ஸா இழுக்கக்கூடிய நபர்களும் மின்சார ஆட்டோ ஓட்டுபவர்களும் ஒரே சாலையில் அருகருகே நின்று கொண்டு தான் இருக்கிறார்கள்.


தினேஷ் கண்ணன்: உங்கள் குழுவில் வடக்கு, தெற்கு என்ற பாகுபாட்டுக் கருத்துடையவர் இருந்தனரா? இருந்தனரெனில் அவர்களின் புரிதல் எத்தன்மையிலிருந்தது? அவர்கள் இக்கருத்தின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்திருந்தனரா? அல்லது பொதுப்படையாக அதை ஏற்றிருந்தனரா? உங்களது பார்வை வடக்கு, தெற்கு பற்றி என்னவாக உள்ளது? 


அழகுராஜ்: நான் மாணவர்கள் குழுவில் பயணித்தேன். வடக்கன்ஸ் என்ற சொல் அங்கும் ஒலித்தது. வட இந்தியர்களை பெரும்பான்மை தமிழர்கள் எப்படி கருதுகிறார்களோ அதேநிலை தான் எங்கள் குழுவிலும் இருந்தது. எனது பார்வையைப் பொருத்தவரை வடக்கு தெற்கு இரண்டும் கலாச்சார அடிப்படையிலும் நில அடிப்படையிலும் வேறு வேறானது. அரசியல் புரிதலிலிருந்து பல காரியங்களில் இரண்டும் மாறுபட்டதே. கோயிற்கலையையும் நாம் இந்த வகைமைக்குள் கொண்டு வரலாம். தென்பகுதியில் இருப்பதைப் போன்ற உயரமான கோபுரங்கள் அங்குள்ள கோயில்களில் காணப்படவில்லை.


தினேஷ் கண்ணன்: குழந்தையை சுமந்தபடி யாசகம் கேட்கும் தாய்மார்கள் காணப்பட்டனரா ?


அழகுராஜ்: எல்லா இடங்களிலும் அதே நிலை தான். மாற்றமில்லை.


தினேஷ் கண்ணன்: பிறகு என்ன தெற்கு வடக்கு, எல்லாம் ஒரு குட்டைக்குள் விழுந்த மட்டை!


அழகுராஜ்: அப்படியும் கொள்ளலாம். ஆனால், எண்ணிக்கை அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் எப்படியானதென தெரியவில்லை.


தினேஷ் கண்ணன்: தமிழ்நாட்டில் வடக்கிலிருந்து வருபவர்களை வெறுக்கும் பொதுச் சூழல் நிலவுகிறது, அதுபோல பிரதமரின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பயணமாக இல்லாமல் சுயமாக பயணம் செய்திருப்பின் அங்குள்ளவர்கள் தெற்கிலுள்ளவர்களை வெறுக்கும் அல்லது பொருட்படுத்தாத தன்மை அவர்களிடம் இருக்கும் என்று கருத முடியுமா? வடக்கிலுள்ள பொதுமக்கள் நம்மை உயர்த்தியே  பார்ப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன், அதை உணரமுடிந்ததா?


அழகுராஜ்: தெற்கில் உள்ளவர்களை அவர்கள் வெறுக்கிறார்கள் என்கிற வாக்கியத்தை நான் வேறொரு கோணத்தில் அணுகலாமென நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் அதிக வசதி படைத்தவர்கள் என்ற எண்ணம் கொண்டு வட இந்திய வியாபாரிகள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அயோத்தியில் ராமர் கோயிலுக்குச்  சென்றபோது கொடுத்த ஒரு அறிவிக்கை, அங்கு எந்த பொருளையும் யாரும் வாங்க வேண்டாம் என்பதே. தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு அதிக விலை சொல்வார்கள் என்று காரணத்தோடு கூறினர். பிரதமரின் விருந்தினர்கள் என்ற அடையாளத்தை நன்மையாகவும் குறையாகவும் இரண்டு நிலைகளில் கருதலாம்.


தினேஷ் கண்ணன்: வெகுதூரப்  பயணத்தின்போது நாடோடித்தனம் தொற்றிக்கொள்வது இயல்பு. ஒரு குழுவாக மத்திய அரசு முத்திரையில் செல்லும்பொழுதும் அந்த நாடோடித்தன்மையை தக்கவைக்க முடிந்ததா? அல்லது அதை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவேனும் குழுவிலுள்ளவர்கள் முயற்சித்தனரா ?


அழகுராஜ்: நாடோடித்தன்மையை இழந்துவிட்டேன். நான் ஏற்கனவே கூறியபடி பிரதமரின் விருந்தினர்கள் என்ற அடையாளம் சொகுசையும் வசதியையும் ஏற்படுத்தித் தந்து நேர மேலாண்மையை சரியாக கடைபிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கலாம். ஆனால், கலாச்சார தொடர்பை அறியும் வழிவகைகளை செய்ய முடியாது. நடனங்களிலும் பாடல்களிலும் மட்டும் ஒரு மக்களது வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியாது. கலை நாட்டுப்புற கலையாகவே இருந்தாலும் நிலை இதுதான். மக்களோடு நெருங்கி உரையாடுவதோ அல்லது சற்று தூரம் உடன் பயணிப்பதோ தான் அவர்கள் யாரென்று நமக்கு காட்டும். வாரணாசியில் அதிகம் காணப்படுவது மின்சார பேருந்துகள் தான் என்ற செய்தியையும் இத்துடன் பதிவு செய்கிறேன். ஆனால், தமிழர்களை உயர்வாக பார்ப்பவர்கள் என்கிற வார்த்தையில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. அது செல்லக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் காட்டிய வரவேற்பிலிருந்து தெரிந்தது.


தினேஷ் கண்ணன்: பயணத்தில் எங்கேனும் அலுப்புத்தட்டக்கூடிய எண்ணம் மேலெழுந்ததா?


அழகுராஜ்: அலுப்புத் தட்டக்கூடிய எண்ணம் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. நமோ படித்துறையில் பிரதமர் வருவதாகக் கூறி பல மணிநேரங்களுக்கு முன்னமே அங்கு கூடச் செய்தனர். ஒரு புகைப்படத்திற்காக தண்ணீர் கூட இல்லாமல் காத்திருந்த நிலை இருந்தது. அது எனக்கு அலுப்பூட்டியது. அநேக வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்தில் பயணம் செய்ததால் பாடல், ஆட்டம் என மகிழ்ச்சிக்கு குறைவில்லை.


தினேஷ் கண்ணன்: அனைத்து நிகழ்வுகளும் முடிந்து சீக்கிரம் ஊர் திரும்ப மாட்டோமா என்று தோன்றியதா? அல்லது இன்னும் கொஞ்ச நாட்கள்  அதிகமாக இருக்கலாம், பயணிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதா? ஊருக்கு வந்த பின் அதில் எந்த எண்ணம் தற்போது மேலோங்குகிறது?


அழகுராஜ்: பயணம் என்னுடைய உடலுக்கும் மனதுக்கும் தேவைப்பட்டது. ஆனால் பயணம் செல்வதற்குரிய உடல்நிலையும் நிதிநிலையும் அப்போது இல்லை. இந்த பயணத்திற்குள் நான் நுழைவதற்கும் சென்று வந்ததற்கும் காரணம் நண்பர்கள் தான். வைப்புத்தொகை, குளிரைத் தாங்கும் ஆடைகள் என பல வகைகளில் நண்பர்கள் உதவி செய்தனர்‌. ஆனால் அவர்கள் தேர்வாகி உடன்வராததில் வருத்தம்தான். காசி தமிழ் சங்கமம் செல்ல இருக்கிறேன் என்ற செய்தியை உங்களிடம் சொன்னபோது எள்ளலான எதிர்வினையைத் தான் பெற்றேன். நான் காசிக்கு சென்றதை அறிந்த நண்பர்கள் அவன் எப்படி போய் இருப்பான்... வாய்ப்பில்லையே.. என்று கூட சொல்லியிருக்கிறார்கள். செல்வதற்கு முன்பு “அங்குபோய் வாயை திறக்காமல் இரு” என்ற அறிவுரைகளையும் அனுபவசாலிகள் சிலர் சொன்னார்கள். சிலவற்றை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது உண்மை தான். அதில் கோஷம் போடுவது முதன்மையானது. தனிப்பட்ட முறையில் நான் நான்கு நாட்கள் நன்கு தூங்கும் வாய்ப்பை பயணம் எனக்கு கொடுத்தது. இன்னும் கொஞ்சநாள் சகித்துக்கொண்டு பயணித்திருக்கலாம் தான். தற்போதைய எண்ணம் என்பது விசித்திரமானது. காசிக்குப் போய் வந்தால் மாற்றம் வரும் என்பார்கள். பாரதியார், பெரியார் ஆகியோர் ஏதோவொரு வகையில் தங்களுக்குள் மாற்றத்தை அடைந்ததையும் வரலாறு நமக்கு காட்டுகிறது. காசிக்குப் போய் வந்தது நானென்றால் மாறியது என்னுடன் இருந்தவர்கள். உத்திரப்பிரதேச பயணம் அதையொட்டி குளிர்கால விடுமுறை என பல நாட்கள் கழித்து நண்பர்களைச் சந்தித்தால் அனைவரும் முழுமையாக மாறிப் போயிருந்தார்கள். சங்கி என நாம் சொல்லி சிரித்தவர்களுக்குள்ளும் நல்ல மனது இருக்கிறது என்பதுதான் நான் இப்போது  எனக்குள் நினைத்துக் கொள்ளக்கூடியது.


தினேஷ் கண்ணன்: எனது எதிர்வினை என்பது உடனடியானது, அதைப்பற்றி தெரியாதிருக்குமோ  என்பதால் தெரியப்படுத்துவதற்காக, ஆனால் அதன்பின் யாரோடு எதற்காக சென்றால் என்ன?பயணத்திற்கும்

இடங்களுக்கும்  நமக்குமான ரிதத்தை வெளியிலுள்ள எதுவாலும் குழைக்கமுடியாது என்றே கருதினேன். ஒரு குழுவிலிருந்து அந்நியப்பட்டு நிற்பது புதிதில்லையே.


அழகுராஜ்: ஆம், அந்நியப்பட்டு நிற்க அதிகம் பழக்கப்பட்டிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பேதும் இல்லை. அதேபோல, நீங்கள் கூறிய ரிதம் எனக்கு சாரநாத்தில் கிடைத்தது. 


தினேஷ் கண்ணன்: குழுவில் ஒருபக்க சார்பு நிலை கொண்டவர்கள் அதிகமா? அல்லது அரசாங்கத்தால் இலவசமாக அழைத்துச் செல்லப்படும் பயணம் என்ற அளவில் மட்டும் பொதுப்படையாக கருத்தற்றவர்கள் (ஏதேனும் ஒரு கருத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களாகவும் இருக்கலாம்) அதிகமா?


அழகுராஜ்: அரசியல் பேசக்கூடாது என்ற அறிவுறுத்தல் பயணத்திற்கு செல்வதற்கு முன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சார்ந்த தன்னார்வலர்களால் கொடுக்கப்பட்டது. அதை முறையாக பின்பற்றிய வெகு சிலரில் நானும் ஒருவன். அப்படியானால் பிறர் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை அனுமானித்துக் கொள்ளவும். அரசியல் பேசக்கூடாது என்று சொன்னவர்கள் எந்த அரசியல் பேசக்கூடாது, எந்த அரசியல் பேச வேண்டும் எனத் தெளிவாக சொல்லி இருந்திருக்கலாம். ஒரு பக்க சார்பு நிலை என்பது வெளிப்படை. இந்திய அரசு நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் இந்திய ஆளுங்கட்சியின் தமிழ்நாடு பிரிவுத் தலைவருக்கு என்ன வேலை இருக்க முடியும். பயணக்குழுவிற்குள் நேரடியாக குறிப்பிட்ட கொள்கையை பரப்புவதற்கும் பிரச்சாரம் செய்வதற்குமான துணிவு அவர்களுக்குள் இருந்தது‌. அதற்கான ஆட்களும் உடன்பயணித்தனர். அதேசமயம் பொதுப்படையான கருத்தியல் சார்பற்றவர்களும் இருக்கவே செய்தனர். அவர்களது இலக்கே பொதுப்படையானவர்களும் இந்திய ஆட்சிப் பணித் தேர்விற்கு தயாராகிக்கொண்டு இருப்பவர்களும் தான்.


தினேஷ் கண்ணன்: ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தயாராகிறவர்களுக்கு சிறிதளவேனும் தெளிவு இருந்ததா? அல்லது புத்தகத்தைத் தாண்டிய புரிதல் இல்லையென்று கொள்ளளாமா ? 


அழகுராஜ்: அவர்களது கொள்கைகளில் அவர்கள் தெளிவாக இருந்தனர் என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய கருத்தியலுக்கு அவர்கள் சொல்வது எல்லாமும் முரணாக மட்டுமே இருக்கும். சிலர் எந்த முடிவும் எடுக்க முடியாத குழப்ப நிலையிலும் இருந்தனர்.


தினேஷ் கண்ணன்: சார்பு நிலை இல்லாவிட்டாலும் பகுத்தறியும் விழிப்பு நிலையேனும் இருந்ததா?


அழகுராஜ்: ஒருவேளை இருந்திருக்கலாம். யாரும் எதையும் வெளிக்காட்டவில்லை.


தினேஷ் கண்ணன்: பிரதமரின் குழு என்பதைத் தாண்டி உங்களால் பொதுமக்களிடமும் காண்போரிடமும் உங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடிந்ததா?


அழகுராஜ்: அதற்கான வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டிலிருந்து உத்திரப்பிரதேசம் சென்ற மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் இங்குள்ள அரசியல் களம் எப்படியானதாக மாறும் என்பதை யோசித்திருப்பார்களோ என்னமோ? மிக அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை யாரென காட்டிக் கொடுத்துவிடும். முழுக்க முழுக்க பாதுகாப்பு வளையத்தினுள் தான் இருந்தோம். கடைக்காரர்கள் மற்றும் அனுமன் படித்துறை அருகில் இருக்கும் தமிழ் குடும்பங்களைத் தாண்டி வேறு எவரிடமும் பேசுவதற்கு வாய்ப்பில்லை.


தினேஷ் கண்ணன்: காசி நகரத்துத் தெருக்கள் மக்களின் அன்றாட வாழ்வியலோடு உயிரோட்டத்துடன் இருப்பதை ஆவணப்படங்களிலும் திரைப்படங்களிலும் கண்டிருக்கிறேன். நேரில்  சென்று பார்க்கும்போது அதை உணர முடிந்ததா?


அழகுராஜ்: ஆம். பரபரப்பாக இயங்குபவர்கள் நிறைந்த இடம். அதிகமான போக்குவரத்து நெரிசல் அங்குண்டு. இடுக்கமான தெருக்கள் தான். மேலும் காசியைச் சுற்றியுள்ள கடைகள் சில விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது‌. அனுமன் படித்துறை மட்டும் தான் இறங்கி நடந்த வீதி. வேறு எங்கும் நடந்து செல்ல முடியவில்லை. எல்லா இடங்களுக்கும் பேருந்து தான். மூங்கில் குடிசைகளை உத்திரப்பிரதேசத்தின் வேறு சில பகுதிகளில் பார்க்க முடிந்தது.


தினேஷ் கண்ணன்: எங்கேனும் வெகுதூரம் நடந்து பயணித்தீர்களா? குளிரான காலை அல்லது மாலைப்பொழுதொன்றில் குறுகலான தெருவிலுள்ள சிறிய டீக்கடையில்  சாயா அருந்தும் பேறு கிடைத்ததா?


அழகுராஜ்: வெகுதூரம் நடந்து பயணிக்கும் வாய்ப்பு இல்லை. எல்லா இடங்களிலும் நேரடியாக சென்று வண்டி நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் குளிரான பொழுதில் வெந்நீர் கிடைப்பதே பெரும்பாடு. எப்படி தேநீர் குடிப்பது. அனுமன் படித்துறையில் காலைப்பொழுதில் சிலர் டீ குடித்தனர். இரயில் அதிகம் நேரம் நிற்கும் ஸ்டேஷன்களில் வெளியில் இருக்கும் கடைகளுக்குப் போய் சிலர் டீ குடித்தனர். அதைத்தாண்டி வெளியே யாரும் சென்றதாக எனக்குத் தெரியவில்லை. காசி கப்பல் சவாரியின் போது கப்பலில் கொடுக்கப்பட்ட டீ, காஃபி, பிஸ்கட், குக்கீஸ் எல்லாம் தரமானதாக இருந்தது.


தினேஷ் கண்ணன்: உங்களது  பயணம் அயோத்தியை முதன்மையாகக் கொண்டது, அருகாமையிலிருந்ததால் காசி உள்ளிட்ட பிற இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளீர்கள் என்று கூறலாமா? அதை பயணத்தின்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதை வைத்து அனுமானிக்க முடிந்ததா?


அழகுராஜ்: அப்படி சொல்லிவிட முடியாது. பிரதமருடைய நிகழ்ச்சி இருந்ததால் பயணத்திட்டம் மாறுதலுக்கு உள்ளானது. அதில் காலபைரவர் கோயில் உட்பட பல கோயில்கள் தவிர்க்கப்பட்டது. பயணத்திட்டம் மாறுதலுக்குட்பட்டது என்பது பயண விதிகளில் ஒன்று என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பயணத்தின் பெயர் காசி தமிழ் சங்கமம், காசியைத் தாண்டிய பிற பகுதிகள் இடம்பெற்றது தான் சிறப்பு.


தினேஷ் கண்ணன்: அயோத்தி ராமர் கோவில் அரசியல் பிம்பமாக முன்னிருத்தப்படுவதை குழுவினர் அறிந்திருந்தனரா ?


அழகுராஜ்: ஆம். அயோத்திக்கு மீண்டுமொரு முறை அரசுத் திட்டத்தில் வரவேண்டும் என்று கூட சிலர் பேசிக்கொண்டனர். காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் இருக்கும் ஞானவாபி மசூதியைப் பார்த்தவுடன் உடன் பயணித்த ஒருவர் இசுலாமியர்கள் இந்து கோவில்கள் இருக்கும் இடத்தை எல்லாம் இப்படித்தான் ஆக்கிரமித்தார்கள் என்று கொந்தளித்தார். காசி விசுவநாதர் கோயில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் செய்தியை முதலில் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தை பலர் வெற்றியாகவே களித்தனர்.


தினேஷ் கண்ணன்: நீங்கள் பயணித்த சமயத்தில் நாட்டில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், முக்கியமாக பாராளுமன்ற வண்ணப் புகை குண்டு வீச்சு சம்பவம், 150 எம்.பிக்கள் சஸ்பெண்ட், அதைத்தொடர்ந்து எந்த எதிர்ப்பும்  இல்லாமல் நிறைவேற்றப்பட்ட 172 சட்ட மசோதாக்கள் ஆகிய நிகழ்வுகள் குறித்து அறிந்திருந்தீர்களா? அதைக்குறித்து குழுவினர் பேசினார்களா?


அழகுராஜ்: நான் அறியவில்லை. செய்தித்தாள் பார்க்காததும் பயணத்தில் நான் கேமராவைத் தவிர்த்து வேறு எந்த செயலியையும் அதிகம் பயன்படுத்தமாட்டேன் என்பதும் ஊடகத்தில் இருந்து நான் எதையும் தெரிந்து கொள்ள முடியாததற்கு காரணம். எனக்குத் தெரிந்தவரை குழுவினர்கள் அறிந்திருந்ததாகவும் தெரியவில்லை.


தினேஷ் கண்ணன்: மறைவாக நமக்குள்ளே எதிர்க் கருத்துகளும் நாட்டின்  பிற பிரச்சனைகளைப் பற்றிய கவலையும் இருந்தாலும் அயோத்தி ராமர் கோவில் நிர்மாணம் என்னவோ வெகு மக்களிடம் ஆளுங்கட்சி ஆதரவு அலையை உருவாக்கி வருவதைக் காணமுடிகின்றது. வெகுமக்கள் நினைத்தால் மட்டுமே எந்த மாற்றமும் நிகழும். அறிவுஜீவிகளின் அங்கொன்றும் இங்கொன்றுமான எதிர்ப்பினால் பெரும் பயன் இருப்பதாய் தெரியவில்லை. இது குறித்த கருத்தைக் கூறவும். 


அழகுராஜ்: அயோத்தியில் கட்டுமானப் பணி நிகழும் இடத்தையொட்டி போதுமான பாதுகாப்பு  கொடுக்கப்பட்டுள்ளது. அரைநாள் இருந்ததை வைத்து நாம் எதையும் முடிவாக சொல்லிவிட முடியாது. நான் பார்த்ததில் அங்கு சாதாரண நிலை தான் இருந்தது. எதிர்க்கருத்துகளால் பயன் விளைகிறதோ இல்லையோ. சில நேரங்களில் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. எதிர்கருத்துகளும் உண்டு என்பதை தெரியப்படுத்த வேண்டும் தானே. நான் அங்கு ஒதுங்கியே இருந்தேன். எதிர்ப்பவனாக இல்லை. ஜெயின் ஒருவர் வந்திருந்தார்‌. அவருக்கு இந்து என்கிற ஒரு மதமே இல்லை என்கிற தெளிவும் கூட இருந்தது. அவைதீகத்தை வைதீகம் எப்படி தன்வயப்படுத்திக் கொண்டது என்பது வரை தெரிந்த அவர் சார்புநிலை கொண்டவராக தொடர்ந்து தன் கருத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். பலர் மாயை கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இஃதோர் உதாரணம்.


தினேஷ் கண்ணன்: தமிழ்நாட்டில் அயோத்தி ராமர் கோவில் அழைப்பிதழையும் அட்டைப் படத்தையும் வீடு வீடாக கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இயல்பாகவே கொடுப்பவர்க்கும் வாங்குபவர்க்குமிடையில் மோடியைப் பற்றிய பேச்சும் தமிழ்நாட்டு அரசியல் சூழல் பற்றிய பேச்சும் உருவானது. 550ஆண்டுகால  கனவை மோடி போராடி சாதித்திருக்கிறார் என்றும் தமிழர்கள் அவர்களைப் புரிந்துகொள்ளவில்லையென்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திருடர்களென்றும், வீட்டுப் பெண்கள் தான் முதலில் இதைப் புரிந்து மோடிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றும் கூறிவிட்டுச் சென்றார். ராமர்கோவில் அரசியல், கடந்த ஆண்டுகளில் நடந்தவற்றை மறக்கச் செய்து இந்த ஆண்டின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டா? இந்த அட்டைப்படம் இனி பெரும்பாலானோரின் பூஜை அறையில் ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம். அது ஒரு அரசியல் அழுத்தத்தை காணும் பொழுதெல்லாம் கொடுக்கும் என்று சொல்ல முடியுமா?


அழகுராஜ்: அரசியலில் உணர்ச்சி, அறிவு இரண்டும் தேவைப்படும் நேரத்தில் சரியான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும். அயோத்தி விஷயத்தில் அறிவு மலுங்கடிக்கப்பட்டு உணர்ச்சி மட்டுமே அதிகம் வேலை செய்கிறது. கட்டாயம் இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும். நேரடியாக அயோத்திக்குச் சென்று வருபவர்கள் அதிக உக்கிரத்தோடு செயல்படுவார்கள். 

அரசியலில் நிகழ்வுகள் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைவது இயல்பானதே. நான் சென்று வந்த நாளின் கட்டுமான நிலையை வைத்து அனுமானித்தால் திட்மிட்டபடி கட்டுமானம் முழுமையடைய வருடங்கள் ஆகும். இப்போது நிகழும் கோயில் திறப்பை அரசியலாக மட்டுமே தான் பார்க்கிறேன். இந்த அட்டைப்படம் பூஜை அறையை அலங்கரிக்கும் என்று சொல்வதெல்லாம் அதிகப்படியானதாகத் தெரிகிறது. 


தினேஷ் கண்ணன்: புரட்சி இயக்கங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்ட இக்காலகட்டத்தில் அக்கட்சியினர் ஒரு புரட்சி இயக்கம் பரவுவதைப்போல் பரவிக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு கிராமமாக அதிலுள்ள ஒரு அபிமானியின் மூலம் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கூட்டி ஒரு கூட்டம் நடத்துகின்றனர். அதில் உணச்சிகர மத உரைகள் இடம்பெறுகின்றன. பின் அதே சூட்டில் அம்மக்கள் ஆதரவாளர்களாக இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு கிராமம் கிராமமாக பரவுகின்றனர். நேற்று கூறியதுபோல அந்த அபிமானமுடையவர்களை சங்கி என்று கூறி ஒதுக்கிவிடுவதாலேயே அவர்கள் பெருமளவில் பரவுகின்றனர். அவர்களின் மத அபிமானம் அவர்களை அதற்கு ஆதரவாக இருக்கச்செய்தாலும்  இன்னும் முழுமையாக சிந்திக்கும் உணர்வை இழந்துவிடாதவர்கள் ஆரம்பக்கட்ட தடுமாற்றத்தில் முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ளனர். இது குறித்த கருத்து. 


அழகுராஜ்: அதிகம் அரசியல் பேசுவது போல் தெரிகிறது. எனக்கு அரசியலில் அதிக பரீட்சயம் இல்லை. புரட்சி இயக்கங்கள் என்பது காலம் தோறும் மாறிக் கொண்டு தானிருக்கும். எல்லா சமூகத்தினர் மத்தியிலும் அவர்களுக்கான வளர்ச்சி இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வேலை செய்கிறார்கள். வளர்கிறார்கள். இங்கு இதுவரை இருந்த கொள்கை சார்ந்த அரசியலை இப்போது தீவிரமாக முன்னெடுப்பதிலிருக்கும் சிக்கல் அவர்களுக்கான திறப்பாக இருக்கிறது. அதற்கு எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் கொஞ்சம் மாறுவது தான் தீர்வு.


தினேஷ் கண்ணன்: இரயில் பயணத்தில் உட்புற பகுதியிலுள்ள நபர்களையும் கிராமங்களையும் பார்த்திருக்க முடியாது, ஆனால் பேருந்துப் பயணத்தில் நகர்கள் கிராமங்களினூடே சென்று இருப்பீர்கள், அப்பகுதிகள் எவ்வாறு(இயற்கைச் சூழல், கலாச்சாரம், மனிதர்கள், பொருளாதார நிலை, நகர கட்டமைப்பு ஆகியவற்றில்)இருந்தன ? 


அழகுராஜ்: காசி நகரைப்  பழைமையும் புதுமையும் கூடியதொரு இடமாகவே பார்க்கிறேன். பழைமையான கட்டிடங்கள் பல அங்குண்டு. அதேபோல புதுமையான வசதிகளும் அந்த நகருக்கு அதிகம் செய்யப்பட்டிருக்கிறது. நான் பார்த்ததில் கவர்ந்தது மூங்கில் குடிசை. அதனை ஏற்கனவே முதல் பகுதியில் கூறியுள்ளேன். நகரத்தின் உட்பகுதிக்குள் நேரம் செலவிட முடியாத நிலை இருந்தது. நாங்கள் பேருந்தில் போகும்போது எங்களை முதலில் அனுப்ப வேண்டுமென ஒட்டுமொத்த சாலையையும் நிறுத்தி வைத்தனர். உள்ளிருந்து பார்த்தவரை குறுகலான தெருக்கள் கண்ணில் பட்டன. ஓரிரு நாட்களில் பார்த்தது ஒட்டுமொத்த நகரையும் பற்றிய முழு மதிப்பீடு ஆகாது என்பதை நான் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன். காசி நகரைப் பார்த்து நம்முடைய சுற்றுலாத்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டியதும் உள்ளது. இருப்பதை பிரம்மாண்டமாகக் காட்டுவதில் அவர்கள் முன்னணியில் நிற்கின்றனர். எங்கள் பயணம் முழுக்க பெருஞ்சாலைகள் வழியே தான் இருந்தது. அயோத்தியில் பீடாக்கரை படியாத இடம் குறைவு. காசியை ஒப்பிடும்போது அயோத்தி மிகப் பின்தங்கிய நகரம்‌. மேல், கீழ் என்ற பொருளாதார பிரிவின் வகைப்பாட்டில் கீழே நசுக்கப்பட்டவர்கள் நிலை இங்குள்ளதை விட மிகமோசம் என்கிற முடிவையே எடுக்க முடியும். அங்குள்ள காவலர்களுக்கு அதீத அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை இரண்டு இடங்களில் நேரடியாக காண முடிந்தது. மக்கள் இயல்பிலேயே அரசு அதிகாரிகளை அதிக பயத்துடன் அணுகுபவர்களாகவே இருந்தனர். என்னால் அவர்களது கலாச்சாரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. அதை நான்கு நாட்களில் அறிந்து கொள்ளவும் முடியாது.  வேண்டுமானால் அனுமானிக்கலாம்.


தினேஷ் கண்ணன்: எந்த அடிப்படை முன்னேற்றமும் இல்லாத அயோத்தி நகரில் திடீரென பல கோடி மதிப்பிலான ரயில் முனையங்களும் விமான நிலையமும் என்பது அம்மக்களுக்கு சிறிதும் பயன்படாத(சுற்றுலாவின் மூலம் தெரு வியாபாரிகளுக்குக் கிடைக்கப் போகும் சொற்ப பொருளாதாரத்தைத் தவிர்த்து) அவ்வூரின் மக்களுக்கு எந்த பயனுமற்றதாக அதேவேளையில் நாடு நெடுகிலும் உள்ள பணம் படைத்தவர்கள் விமானத்தில் வந்திறங்கி  ராமர் கோவில் சென்று வர வேண்டி இதுவரை முக்கியத்துவம் அளிக்கப்படாமல் பின் தங்கியிருக்கும் அவ்வூரும் மக்களும் ராமர் கோவில் தங்களின் ஊரில் உள்ளது என்ற புதிய பெருமையை மட்டும் அறிந்த மாத்திரத்தில் தங்களுக்கு கிஞ்சித்தும் பயன்படாத தங்கள் ஊரின் புதிய பளபளப்பால் மட்டுமே முழுமையாக மகிழ்ந்தவர்களாக(அரசியல் சார்பு யூகிக்க முடிந்ததே) பெரும்பாலும் இருப்பார்கள் என்று கொள்ளளாமா?


அழகுராஜ்: மகிழ்ச்சி வரத்தானே செய்யும். அதுதானே இயல்பு. ஆனால் வசதிகள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடியதே.


தினேஷ் கண்ணன்: முற்காலத்தில் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் இல்லை. இடைக்காலத்தில் வாதாபியிலிருந்து பல்லவ மன்னனாலேயே  முதன்முதலில்  விநாயகர்  சிலை எடுத்துவரப்பட்டு பின் வழிபாடு பரவலாக்கப்பட்டது. அதுபோல பெருமாள் வழிபாடு தான் தற்போது தமிழகத்தில் உள்ளதே தவிர ராமர் வழிபாடு என்பது அந்நியமானது. தற்போது செய்யப்படும் மார்கெட்டிங்(நவீன காலத்தில் ஒரு இடத்தையும் அம் மக்களையும் ஊடுருவிக் கைப்பற்றும் போர் தந்திரம்) மூலம் ராமர் வழிபாடு என்பது தமிழகத்தில் பரவலாக்கப்படும் என்று கருத முடியுமா?


அழகுராஜ்: இப்போதே ராமர் வழிபாடு தொடங்கிவிட்டது. தமிழில் ராமர் பக்திப் பாடல்கள் வலையொளியில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரவத் தொடங்கிவிட்டன. சமய நம்பிக்கைக்குள் கருத்து தெரிவிப்பதில் எனக்கு உவப்பு இல்லை. வேதாந்தத்தை எதிர்த்த சித்தாந்திகளின் ஆகமங்களும் வடமொழியில் இருந்து வந்தவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இப்படியான கொள்ளுதல் கொடுப்பித்தல் தொடர் வினைகளாக இருக்கிறது. அங்குள்ள விநாயகர் திருமணமானவர். இங்குள்ளவர் திருமணமாகாதவர். ஒருகாலத்தில் கதைகளின் வாயிலாக கடவுளர்கள் கட்டமைக்கப்பட்டனர். அரசாளுகை மாற்றம் நிகழ்வதையொட்டி கதைகள் சில இடங்களில் மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் அரசாளுகை மாற்றம் மக்களிடையே சமய மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இது நிகழக்கூடிய ஒன்று தான். 


தினேஷ் கண்ணன்: சாரநாத் அசோகர் தொல்லியல் தளம் எவ்வகையில் நீங்கள் சென்ற மற்ற இடங்களிலிருந்து வித்தியாசப்பட்டது?


அழகுராஜ்: சாரநாத்திற்கு அவர்கள் அழைத்துச் சென்றதில் மகிழ்ச்சி. என் பார்வையில் மற்ற இடங்கள் பக்திமயப்பட்டவை. சாரநாத் தொல்லியல் ஆதாரச் சான்றுகளாலான பகுதி. சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் பூங்காவிற்கும் சென்றோம்.


தினேஷ் கண்ணன்: பனாரஸ் பல்கலை அனுபவம் எவ்வாறிருந்தது?


அழகுராஜ்: பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு நாங்கள் செல்லவில்லை. பயணத்திட்டத்தில் இருக்கும் பல இடங்களுங்கு செல்ல முடியவில்லை. பானாரஸ் பட்டு உலகப்புகழ் பெற்றது. பனாரஸ் பட்டு வகைகளை அருங்காட்சியகம் ஒன்றில் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிக தொழில்நுட்ப பயன்பாடுகள் கொண்ட அருங்காட்சியகமாக அது வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையிலும் தொடுதிரை கணினி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அந்த கணிணியில் பட்டுத் துணிகள் நெய்யப்பட்ட முறைமைகளை காணொளி வடிவில் சேமித்திருந்தார்கள். தெளிவான காணொளிகளாக அதில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. தறி இயந்திரங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. சற்று விலை அதிகமான பொருட்களாக இருந்தாலும் கலை நேர்த்தியுடன் செய்யப்பட்ட பொருட்களாக அவை இருந்தன. சங்குகள், கண்ணாடிகள் மற்றும் பாசிகளாலான பொருட்கள், கண்கவரும் வேலைப்பாடு கொண்ட துணிகள், களிமண்ணால் செய்யப்பட்ட சிற்பங்கள், விளையாட்டு பொம்மைகள் என அரங்கம் நிறைந்திருந்தது. அருங்காட்சியகத்தின் கட்டிட அமைப்பும் ஒளி வேலைப்பாடுகளும் புத்தர் சிலை உட்பட்ட சிலைகளும் சுற்றிப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அளவில் நளினமாக அமைக்கப்பட்டிருந்தது‌.


தினேஷ் கண்ணன்: பாரதியார் நிச்சயம் பயண நோக்கத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பார். அவரை எவ்வாறாக முன்னிருத்தினார்கள்? பாரதியார் வாழ்ந்த வீடு பற்றி கூறவும். பாரதியின் ஆன்மீகத்தை குழுவினர் எவ்வாறு புரிந்திருந்தனர். உண்மையில் அது எவ்வாறு புரிந்துகொள்ளப்பட வேண்டும்? 


அழகுராஜ்: பாரதி பயணத்தில் உபயோகப்படுத்தப்பட்டார் என்பது உண்மை. பிரதமர் நரேந்திர மோடியின் உரை அதற்கொரு சான்று. பாரதியை ஒருதலைபட்சமாக அணுகக்கூடிய நபர்களின் கூடாரத்தில் அவரைப் பற்றி தெரிந்திருந்தும் எதையும் முழுமையாக பேச முடியாத நிலையில் இருந்தேன். பாரதியின் ஆன்மிகம் குழு மையம் கொண்டதல்ல. தனிமனிதனை மையப்படுத்தியது என்பது என் புரிதல். கண்ணன், காளி என தெய்வங்களாக வணங்கப்படுபவற்றை எல்லாம் உறவு நிலையில் விளித்து உரிமையுடன் பேசக்கூடியது பாரதியின் கவிதைகள். குழு என்ற நிலையில் பாரதி ஆன்மிகத்தை பார்த்திருந்தால், அவர்  உரிமையோடு உறவாடும் நிலையில் தடை ஏற்பட்டு இருக்கும். பாரதியாரின் கவிதைகளில் இயேசு, அல்லா ஆகியோர் உண்டு. கவிதைகளைக் காட்டிலும் பாரதியாருடைய தத்துவக் கட்டுரைகளில் இயேசுவின் கருத்துகள், செயல்பாடுகள், உவமைகள் அதிகம் உண்டு. அல்லாவை குறிப்பிடவும் பாரதி தவறவில்லை. பாரதியாருடைய ‘சந்திரிகையின் கதை'யை வாசித்தால் அவர் இயேசுவை எவ்வளவு தூரம் உள்வாங்கி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். 


      பாரதம் என்ற ஒற்றை மையத்திற்குள் பாரதியை அணுகும் நிலை அவருடைய பரந்து விரிந்த உலகப் பார்வையை சுருக்குவதாகவே அமையும். பாரதம், பாரத மாதா என்ற நிலைக்குள் பாரதியாரை அடக்க முற்படும் போது, தமிழையும், தமிழ்நாட்டையும் பாரதத்தைவிட அதிகமாக பாடியிருக்கிறார் என்கிற வாதத்தை வைக்க பாரதியார் கவிதைகள் நமக்கு இடம் தருகிறது. 


“வாழிய செந்தமிழ்

வாழ்க நற்றமிழர்

                          வாழிய பாரத மணித் திருநாடு"

      தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அடுத்தே பாரதம் என்பதற்கு பாரதியின் இந்த மூன்று வரிகளே போதும். மேடையில்  பேசும்போது பல சமயம் பாரத மணித்திருநாடு என்பதை தமிழ்த்திருநாடு என்று கூறி நான் பேச்சை முடித்திருக்கிறேன். பாரதியின் கவிதையை மாற்றிவிட்டேன் என்று பலர் நினைத்திருக்கலாம். ஆனால் எவரும் ஒருபோதும் கேட்டதில்லை. கேட்டிருந்தால் பாரதியின் கருத்தியலை மாற்றுவதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டியிருந்திருப்பேன். இப்போதெல்லாம் பேச்சின் போது கவிதைகளைப் பயன்படுத்துவதையே தவிர்த்து விடுகிறேன்.


      பாரதியின் காசி வாழ்க்கை அவர் மொழியறிவில் செம்மைப்படுவதற்கு பேருதவியாக இருந்தது என்பதை அறிய முடிகிறது. பாரதி வாழ்ந்த வீட்டின் முன்பகுதியில் உள்ள ஒரு அறையை மட்டும் தமிழ்நாடு அரசு ஒப்பந்த அடிப்படையில் வாங்கி நினைவகம் ஆக்கியுள்ளது. பாரதியாரின் உறவினர்கள் அந்த வீட்டில் வாழ்கின்றனர். நினைவகத்தின் பொறுப்பு கூட அவர்களிடம் தான் இருக்குமென நினைக்கிறேன். அந்த வீட்டிற்குள்ளேயே கோயில் இருந்திருக்கிறது. ஹனுமன் படித்துறையை ஒட்டியிருக்கும் பாரதியின் வீட்டிற்கு செல்லும் வழியில் தான் குமரகுருபரருடைய திருப்பானந்தாள் மடமும் இருக்கிறது.


தினேஷ் கண்ணன்: அந்நகரங்களில் எவ்வயதுடையனர் அதிகம் காணப்பட்டனர். இளைஞர்கள் அதிகம் காணப்பட்டனரா? தொழில்களில் (உதாரணமாக, கடைகளில், ரிக்ஷா இழுப்பதில், தெருக்களில் காணப்படும் பிற கூலி வேலைகளில்) அதிகம் வயதானவர்கள்  இருந்தனரா அல்லது இளைஞர்களைக் காணமுடிந்ததா ? 


அழகுராஜ்: எல்லா வயதினரும் நிறைந்த நகரமாகவே காசி இருந்தது. நான் வயது அடிப்படையில் பிரித்துப் பார்க்காததால் துல்லியமான பதிலைத் தரமுடியவில்லை.


தினேஷ் கண்ணன்: இப்பயணத்திற்குப் பின் வடக்கிலுள்ளவர்களின் கலாச்சாரத்தை வாழ்வியலை இன்னும் அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளதா?


அழகுராஜ்: பொதுவாகப் பிற பகுதியினரைக் குறித்து தெரிந்தது கொள்வதில் ஆர்வம் இருக்கிறது.


தினேஷ் கண்ணன்: அங்குள்ள தமிழர்களுடனான உரையாடல் எவ்வாறாக இருந்தது? அவர்களின் வாழ்க்கைச் சூழல் எவ்வாறுள்ளது. உங்களின் உரையாடலின் சாரம் என்ன?


அழகுராஜ்: பெரிதாக அங்குள்ள தமிழர்களிடம் நான் உரையாடவில்லை. ஆனால் அவர்களிடம் தமிழுணர்வு இருப்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. தமிழர்கள் அதிலும் மாணவர்கள் குழுவாக தங்கள் பகுதிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை கண் விரிய ரசித்தனர். நான் வார்த்தைக் கோர்வைக்காக எதையும் மிகைப்படுத்தவில்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன். இன்று பலர் உரையாடல்களின் போது வார்த்தைகளை கோர்வையாகக் கட்டி பீடிகை போடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதால், அந்த கணக்கில் என்னுடைய கருத்தும் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் அழுத்திக் கூறுகிறேன். மேலும் காசி தமிழ் சங்கமம் குறித்த இந்த உரையாடலில் நான் உங்களிடம் சொன்னவை எல்லாம் நான் பார்த்ததை வைத்து மட்டுமே சொல்லப்படுபவை. நான் கூறிய கருத்துகளுக்கு எதிர்கருத்துகள் பயணத்தில் கலந்து கொண்டவர்களால் எழுப்பப்படுமாயின் அதற்குப் பதில் கூறுவதற்கான கடமை எனக்குண்டு.


தினேஷ் கண்ணன்: மிகவும் பின்தங்கிய காட்சியும் மிகவும் புதிதான முன்னேறிய காட்சியும் அருகருகே இருந்து சமமின்மை அயோத்தியில் வெளிப்படையாகத் தெரிகிறதா?


அழகுராஜ்: ஆம், ராமர் கோயில் அரசியல் என்பது ராஜீவ் காந்தி காலந்தொட்டு நடைபெற்று வருகிறது. இன்று திடீரென அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகளும் கட்டிடங்களும் மாறுகிறது. அங்குள்ள சிறு வியாபாரிகள் வைத்துள்ள கடைகள் முதலானவை அப்படியே இருக்கின்றன.


தினேஷ் கண்ணன்: அங்குள்ள முறையிலான உணவு தங்களுக்கு வழங்கப்பட்டதா? அதைப் பற்றி கூறவும்.


அழகுராஜ்: இல்லை. தென்னிந்திய உணவைத் தான் சாப்பிட்டோம். ஐ.ஆர்.சி.டி.சி ஊழியர்கள் அருமையான உணவை அளித்தார்கள். வழியில் பானிபூரி முதலானவை விற்கப்பட்டன.


தினேஷ் கண்ணன்: பெரும்பான்மையான தெரு வியாபாரம் என்னவாக இருந்தது.


அழகுராஜ்: காலைக் குளிரிலேயே தள்ளுவண்டி கடைகள் திறக்கப்பட்டிருந்ததை மட்டும் பார்த்தேன். அயோத்தியில் கோட் ஆடைகள் எல்லாம் மலிவாகக் கிடைத்தது. கை இல்லாத கோட் ஒன்று அங்கு நூற்றைம்பது ரூபாய் மட்டும் தான். வரிசைகட்டி விற்றனர்.


தினேஷ் கண்ணன்: பெண்கள் அதிகம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனரா?


அழகுராஜ்: பெண்களும் இருந்தனர். ஆண்களும் இருந்தனர்.


தினேஷ் கண்ணன்: இரயிலில் செல்லும்போது அல்லது திரும்பும்போது பல வகையான இடங்களைக் கடந்திருப்பீர்கள். இந்த இடத்தில் இறங்கிவிட வேண்டும் என்று குறிப்பிடும்படி ஏதாவது இடம் கவனத்தைக் கவர்ந்ததா?


அழகுராஜ்: பல இடங்கள் உண்டு. அங்குள்ள மேய்ச்சல் நிலங்கள், வேளாண் நிலங்கள் எல்லாம் அந்த வகையில் அடங்கும். பாறை மலைப் பகுதிகளிலும் ஏற வேண்டும் போல இருந்தது. ஏற்கனவே நாம் சென்றுள்ள சமணத் தளங்கள் இருக்கும் மலைகளை நினைவுபடுத்தும் ஒரு மலைப்பகுதியையும் பார்த்தேன். எந்த இடம் என என்னால் சரியாக குறிப்பிட முடியவில்லை.


தினேஷ் கண்ணன்: இரயில் பயணத்தின்போது குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் வியாபாரிகள், நிறுத்தங்களில் பரபரப்பாக காணப்படும் மக்கள், அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்லக் காத்திருக்கும் உள்ளூர் மக்கள்(வேலை முடிந்து செல்பவர்கள், மாணவர்கள்) , ஆள் அரவமே இல்லாத சில ரயில் நிறுத்தங்கள், நாடோடிக் குழுக்கள் என பலவற்றைக் கொண்டிருக்கக்கூடும். அதைப்பற்றிக் கூறவும்.


அழகுராஜ்: நாங்கள் சென்ற மூன்று பெட்டிகளுக்கும் காவல் அளிக்கப்பட்டிருந்தது. ஆள் இல்லாத பல நிறுத்தங்கள் வழியில் இருந்தன. நாங்கள் சென்ற தொடர்வண்டி குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும். அதேபோல தனித் தளவாடங்களில் பழைய இரயில் பெட்டிகளை பழுது பார்க்கும் வேலை சில இடங்களில் நடந்தது. பெரிய இயந்திரங்களைக் கொண்டு புதிய தளவாடங்கள் அமைக்கும் பணியும் நடந்து கொண்டிருந்தது. நாடோடிக் குழு எதையும் இந்த பயணத்தில் நான் பார்க்கவில்லை.


தினேஷ் கண்ணன்: நாடோடிக் குழுக்களை பார்க்க முடியவில்லையெனில்  உங்கள் பயணம் முழுமையடையவே இல்லை. இதே பயணத்தை தனியாகவோ, அல்லது ஒத்த ஆர்வமுடையவர்களுடனோ மேற்கொள்ள முடிந்தால் இதைவிட 100  மடங்கு அதிகம் இதே பயணத்தை இடங்களை மக்களை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளமுடியுமல்லவா? அதற்கு விருப்பமுள்ளதா? 


அழகுராஜ்: விருப்பமுண்டு. காலம் அதனைத் தீர்மானிக்கும். பயணம் முழுமையடையவில்லை என்கிறீர்கள். அதில் ஓரளவு உண்மை உண்டு. நான்கு நாட்களில் பல கட்டுப்பாடுகளுக்கு நடுவே ஒரு நிலத்தையும் அதன் கலாச்சாரத்தையும் உள்வாங்கவே முடியாது என்பது என் கருத்து. அதைத்தான் நான் மீண்டும் மீண்டும் இந்த உரையாடல் நெடுக கூறியிருக்கிறேன்.


தினேஷ் கண்ணன்: காசி நகரில் கண்ட காட்சிகள் முதன்முதலில் நேரடியாக காணும் பொழுது புது அதிர்வைத் தந்ததா அல்லது இயல்பாக இருக்க முடிந்ததா?


அழகுராஜ்: அதிர்வு என்பது அவர்கள் கொடுத்த வரவேற்பு தான். துடி இசைத்து வரவேற்றனர். மணிகர்ணிகாவை ஒட்டி சில நிமிடங்கள் நின்றிருந்தேன். அது ஒரு நல்ல அனுபவம். மற்றபடி எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. உத்திரப்பிரதேசத்தில் பக்திவயப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அதிகம். பூஜையை படித்துறையில் உட்கார்ந்தும் படகில் வந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பார்த்தனர். ஆயிரம் என்ற எண்ணிக்கையைக் கூட அது தொட்டிருக்கலாம். என்னால் சரியாகக் கணித்துச் சொல்ல முடியவில்லை.


தினேஷ் கண்ணன்: நான் ஆன்மீக அதிர்வைக் பற்றி கேட்கவில்லை. கலாச்சார அதிர்வைப் பற்றிக் கேட்கிறேன். புதிதாத வித்தியாசப்பட்ட சூழலில் மிக இயல்பாக பல உடல்கள் எரிந்துகொண்டிருக்கும் சூழலில் நீங்கள் அடைந்த அதிர்வை பற்றி,


அழகுராஜ்: கலாச்சார மாற்றம் இருந்தது. பிணங்கள் எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்கு மேல் என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சிலவற்றை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து விளக்க முடியாது என்பார்களே‌. அதுபோல தான் இதுவும்..


தினேஷ் கண்ணன்: கங்கையைப் பற்றிய நினைவுகளைக் கூறவும். கங்கை அவ்வூரின் கலாச்சாரத்திலும்  வாழ்வியலிலும் வாழ்வாதாரத்திலும் எந்த அளவு கலந்திருந்தது?


அழகுராஜ்: கங்கை நீரில் கலாச்சாரம், வாழ்வியல், வாழ்வாதாரம் கலந்திருந்ததைப் போல அழுக்குகளும் அதிகம் கலந்திருந்தது. (மணிகர்ணிகாவை ஒட்டி தலையைத் தண்ணீரில் தெளித்தனர்) எல்லா இடங்களிலும் கங்கை சுத்தமானதாக இல்லை. கங்கையில் குளித்தால் பாவம் போகும். கங்கை நீரை தலையில் தெளித்தால் பாவம் போகும் என்பார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லாததாலும் கங்கையில் குளிக்க விருப்பம் இல்லாததாலும் ஹோட்டலில் மட்டுமே குளித்தேன். அடுத்ததாக நீங்கள் கேட்ட கேள்வி ஆழமானது. அதற்கு விடையளிக்கும் அளவு நான் சுதந்திரமாக சுற்றித் திரியவில்லை. சுதந்திரமாக சுற்றியிருந்தால் ஒருவேளை இதற்கெல்லாம் பதில் அளிக்க முடிந்திருக்கலாம். அண்ணன் ஒருவருக்காக கங்கைத் தண்ணீரை பாட்டிலில் அடைத்து எடுத்து வந்தேன். சரயு நதியின் கிளை ஒன்றைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. கண்டராதித்தன் கவிதைகளில் வரும் சரயு என்ற சிறுமியின் நினைவில் இருந்தேன். திருவேணி சங்கமத்தில் படகு சவாரி செய்தது நல்ல அனுபவம்.

 

தினேஷ் கண்ணன்: பயணம் குழுவினரிடையே ஏற்படுத்த நினைத்த தாக்கத்தில் வென்றிருக்கிறது என்று கூறலாம்? திரும்பிவரும் ரயில் பயணத்தின்போது குழுவினரிடையே பயணத்தில் கண்டவற்றைப் பற்றிய உரையாடல் நிகழ்ந்ததிலிருந்து அதை அனுமானிக்கமுடிந்ததா?


அழகுராஜ்: காசிக்குப் போனால் ராமேஸ்வரமும் போக வேண்டும் என்று ஒருசிலர் அங்கு போய்விட்டனர். ஏற்கனவே சொன்னபடி அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் பெரும் வெற்றியாக அவர்களுக்குத் தெரிந்தது. கொள்கைகள் தாண்டி நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள் எனலாம்‌. ஆரம்பத்தில் கூறியபடி கண்கள் கசிய பிரிந்தவர்களை அருகில் அமர்ந்து பார்த்தேன். புதிய நபர்களோடு எட்டு நாட்கள் பயணத்தில் இருந்தது என்பது எனக்குள் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது‌. அதேசமயம் பல நினைவுகளையும் ஏற்படுத்தியது. முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே நான் பயணத்தைத் தேர்வு செய்தேன். அப்படியிருந்தும் பொதுவான வகையில் இதுவரை உரையாடும் அளவுக்கு பயணத்தில் கவனம் செலுத்தியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சி.


(ஜனவரி மாதம் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை உரையாடியதன் தொகுப்பு)

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு