உந்துதலுக்கான மூல விசை -வேலாயுதம் பொன்னுசாமி
உந்துதலுக்கான மூல விசை -வேலாயுதம் பொன்னுசாமி
எந்த ஒரு நபரும் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும்போது, அவர் அந்நியத் தன்மையை உணர்கிறார். சமூகப் படிநிலையில் பல வாழ்க்கை முறைகளைக் கொண்ட மக்கள் தங்களுக்கான ஒரு பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் இதனை ஒரு கூட்டுப் பண்பாடு என்றும், இந்த கூட்டுப் பண்பாடு ஒரு வாழ்வியல் உந்து சக்தியாகவும் , தங்கள் வாழ்வியல் விருப்பங்களைக் கோரும் “போல செய்தல்" நிகழ்வுகளாகவும் வெளிப்படுவதாக அவதானிக்கிறார். விவசாயப் பண்பாட்டில் அதிக விளைச்சல் வேண்டி அதனை பாவனையாக minitic dance செய்வதை இதற்கு உதாரணமாக குறிப்பிடுகிறார். பெரும் மதங்கள் கர்மா தான் உன்னை ஆட்டி வைக்கிறது. உனது இன்ப துன்பங்களுக்கு காரணம் கர்மா தான். இந்த கர்மா உன்னை தொடர்ந்து கொண்டே இருக்கும், எனவே பிறவிகள் தொடர்வதை தடுக்க முக்தியை நோக்கி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது. ஆனால் சிறு தெய்வ வழிபாட்டு மரபை ஆதிமனித மனநிலையின் தொடர்ச்சியைக் கொண்டதாக அறிய முடிகிறது. இயற்கையின் உற்பதம் நடத்தும் உயிர் வாழ்தல் பிரச்சனையாக பார்க்கிறது எனவே அதனை அமைதிப்படுத்த கூட்டு வேண்டுதலை பண்பாடாக கொண்டிருக்கிறது.
அம்மை போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்க, அதற்கு காரணமாக இருக்கும் சக்தியிடம் வேண்டுதல் செய்வதும் இப்படியான ஒரு பண்பாட்டு நடவடிக்கையே. அதன் சக்தியாக முத்தாரம்மனை முதல் நாள் அந்திப் பொழுதில் மண்ணால் உருவம் செய்து, அதனை ஊர் கூடி வழிபாடு செய்து, மறுநாள் அந்திப் பொழுதில் நீர் நிலைகளில் கரைத்து விடுவது ஒரு கிராமப் பண்பாடாக இன்றும் நிலவி வருகிறது. தொற்று நோய்க்கு காரணமாக சக்தியாக இருப்பதால், அதனை ஒரு நாள் மட்டும் வழிபட்டு நீர் நிலையில் கரைத்து விடுகின்றனர். எனவே முத்தாரம்மன் கோயில்களில் பீடம் மட்டுமே இருக்கும். சிலைகள் இருப்பதில்லை. விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஊரின் ஒரு சமூக மக்கள் நடத்திய முத்தாரம்மன் கொடை விழா, இதனை மையப் பண்பாட்டுக் கூறாக கொண்டு நடத்தப்படுவதாக அறியமுடிகிறது. பானை செய்யும் சமூகத்தை சார்ந்தவர் அம்மன் உருவத்தை செய்து கொடுக்க, மற்ற நாட்களில் வானம் பார்த்து இருக்கும் பீடத்திற்கு ஆட்டு பஞ்சார வடிவத்திலான மேற்கூறையை ஒரு சமூகத்தை சார்ந்தவர் செய்து கொடுக்க, இரவில் அம்மனை சப்பரத்தில் அமர்த்தி நகர்வலமாக கொண்டு வரும் பொழுது வெளிச்சத்திற்கான சுளூந்தி கொளுத்தி பிடித்து வர ஒரு சமூகத்தார் என்று பல சமூக மக்களின் பங்களிப்புடன் இத்திருவிழா நடைபெறுகிறது. (சுளூந்தி என்ற பெயரில் முத்துநாகு ஒரு நாவல் எழுதி உள்ளார்) பெண்கள் நிறை குடங்களில் மஞ்சள் நீரையும் வேப்பந்தளிர்களையும் வைத்து சுமந்து வந்து அம்மனுக்கு நீர் கடன் செலுத்தியதும் முத்தாரம்மனின் அலங்கரிக்கப்பட்ட பிரதிமை நீர்நிலைக்கு கரைப்பதற்காகக் கொண்டு செல்லப்படுகிறது. அப்போது அப்பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பிள்ளை குழி போடுதல் என்ற சடங்கையும் நடத்துகின்றனர். பிள்ளை குழி போடுங்கள் சடங்கை, முதல் நாள் இரவில் திருவிழா நடத்தும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும் செய்கிறார்கள்.
அம்மனுக்கு நீர் கடன் செலுத்திய குடங்களில் உள்ள மஞ்சள் நீரை உறவுகள் மீதும் வீடுகளிலும் தெளிக்கின்றனர். இளைஞர்கள் சிலம்பாம்ஆடியும், முகங்களில் பல வண்ணக் கலவைகளால் பூசியும், சாக்குகளால் உடலை போர்த்தியும் தங்களை அகோரப்படுத்திக் கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இதற்குப் பின் உள்ள அர்த்தம் என்னவென்று அறிய முடியவில்லை. சொந்த பந்தங்களையும், தங்கள் வயல்வெளிகளில் பணி செய்யும் மக்களை அழைத்து பெரும்பாலும் மாமிச உணவு விருந்தளிக்கின்றனர். எனது மூத்த மகளை கொடுத்த சம்பந்தக்காரர் வருடம் வருடம் எங்களை அழைத்து புத்தாடைகள் எடுத்துக் கொடுத்து இரண்டு நாள்கள் இருக்கச் செய்து அனுப்பி வைப்பர். இரத்தப் பொறியல், சுவரொட்டி, ஈரல், ஆட்டிறைச்சி வருவல், எலும்பு குழம்பு என்று வருடம் முழுவதும் சைவம் சாப்பிடும் எங்களை மிக சிறப்பாகக் கவனித்து, பனங்கிழங்குகளையும், ஓலைக் கொழுக்கட்டைகளையும் கொடுத்து அனுப்புவார்கள். இப்படியான அன்யோன்யத் தன்மை கிராமப்புறங்களில் இன்றும் தொடர்வதால், மானுட உறவு அந்நிய மாதலில் இருந்து சற்று விடுபட்டு இளைப் பாருகிறது என்பதாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பண்பாட்டு மார்க்ஸியத்தை வலியுறுத்தும், இத்தாலிய நாட்டைச் சார்ந்த அந்தோனியோ கிராம்ஷி “விளிம்பு நிலை மக்கள் பண்பாட்டில் பொதிந்துள்ள சமூக நடவடிக்கையை புரிந்து கொண்டால் தான், மக்களிடம் ஆதிக்கத்திற்கான ஒப்புதலை அதிகாரம் எவ்வாறு நயமாகப் பெற்று தன்னை நிலைப்படுத்திக் கொள்கிறது என்பதை அறிய முடியும்" என்கிறார். நம் தமிழ் பேராசிரியர் தொ.பரமசிவன் பெரு மதங்களின் ஆதிக்கத்தைக்கொண்டு மக்களின் ஒப்புதலை பெற்று தங்களின் கொடுங்கோன்மையை, மக்களை வஞ்சிப்படுவதை மறைத்து அதிகாரத்தை தக்க வைக்க முனைவதை சுட்டிக்காட்டுகிறார். இதற்கு மாற்று சிறு தெய்வ பண்பாடு எப்படி மக்கள் பண்பாடாக பங்காற்றி அதிகாரத்தை கேள்வி கேட்கின்றது என்பதையும் கர்மா, முக்தி, ஆன்ம விடுதலை போன்ற பெரும் மதங்களின் கருத்தியலில் பொதிந்துள்ள ஆதிக்க சக்திக்கு ஆதரவான உளவியல் மாறுவேடங்களையும் அம்பலப்படுத்துகிறார். பல வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ள நம் இந்தியாவில் ஒரு கடவுள் ஒரு கோயில் ஒருஅரசு அதிகாரம் என்பதை நிலைநிறுத்தி வழிபாட்டுத் தலங்களை எப்படி வியாபார யுத்திக்கான மையமாக மாற்ற முடியும் என்பதை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அரசு பணத்தில் ரயில்வே நிலையங்கள் விமான நிலையங்கள் விசாலமான சாலைகள் அமைத்துக் கொடுக்க, பட கார்ப்பரேட் நிறுவனங்கள் கோயில் பகுதியைச் சுற்றி பல நட்சத்திர விடுதிகளையும் கேளிக்கைகளையும் உணவு கூடங்களையும் அமைப்பு ஒரு சுற்றுலா தளத்தை நிர்மாணித்து வருகிறது. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்க சிறு தெய்வ வழிபாட்டு பண்பாட்டிலுள்ள மக்களின் உந்துதலுக்கான மூல விசையை உரையாடலாக முன் வைப்போம்...
Comments
Post a Comment