சத்யா (தொடர்கதை) - விசித்திரன்
சத்யா
-விசித்திரன்
அத்தியாயம் 2
சத்யா தன்னையொரு கேளிக்கைப் பொருளாகவே மாற்றி வாழப் பழகி விட்டான். அதற்கு அவனுடைய உருவமும் துணை புரிந்தது. மற்றவர்களைக் காட்டிலும் ஒல்லியான தேகம் மற்றும் கருத்த நிறம் இது போதாதா? நகைக்கக்கூடியப் பொருளாக இந்த சமூகத்தில் மாற்றப்பட,. அவன் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களில் இவனே சற்று உயரம் என்றாலும், பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாணவர்கள் சேர்ந்தாலும் சரி பழையவர்கள் வெளியேறினாலும் சரி “ஹைட் ஆடர்ல நில்லுங்க” என்ற பீ. டி சார் சொல்ல சத்யாவே முதலிடம் வகிப்பான்.காலங்கள் மாறினாலும் இவனுடைய இடத்தில் வேறொருவர் வருவதேயில்லை. இதனால் உருவக்கேலி என்பது சத்யாவுக்கு பழகிப்போன ஒன்றாகும். இதுமட்டுமல்ல அரசின் சலுகை சார்ந்த படிவங்களில் புகைப்படம் இல்லாமல் வரும் போது சத்யா என்று பார்த்தவுடன் பெண் என்று இரண்டு மூன்று முறை தவறுதலாக வந்துள்ளது. இது அவனை மேலும் பேசு பொருளாக மாற்றியது. இதற்கு முதற் காரணம் அவன் பெற்றோர் தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை இது போன்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருந்தான் சத்தியராஜ். ஆமாம்! முதலில் அவன் பெயர் சத்தியராஜ் என்றே இருந்தது. சத்யாவின் பெற்றோர் ஜோசியக்காரனை பார்த்து சத்யாவின் ஜாதகத்தைக் காட்ட “பையன் நல்லா வருவான் என்ன ஒன்னு சின்ன கண்டம் இருக்கு ஆம்பள பசங்க பேரு வச்சது தப்பு ரெண்டுத்துக்கு பொதுவான பேரை வச்சீங்கன புள்ள ஷேமமா இருக்கும். ஆயுளும் கெட்டி ஆயிடும்” என்ற பொல்லாத அறிவுரைப் பேரில் சத்தியராஜ் என்பது சத்யாவாக மாற்றமடைந்து போனது. அவனுக்கு இந்த பெயரில் மேல் எந்த கோபமும் வருத்தமும் இல்லை. பெயர் மாற்றினால் எல்லாம் மாறும் என்று நம்பி மாற்றிய தன் பெற்றோர் மீது தான் அதீத கோபம். ஜோசியக்காரன் “அவன் பாவம் வயிற்றுப் பொழப்புக்கு ஏதோ சொல்றான்” என்ற சொல்லோடு முடித்து விடுகிறான் சத்யா. தன்னைப் பார்த்து சிரிக்கிறார்கள் தன்னிடம் ஏதோ ஒன்று உள்ளது என்பது மட்டும் புரிந்தது. எனவே, அதுவாகவே தன்னை மாற்றிக்கொள்ள ஆயத்தமானான். ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் அது அவ்வளவு எளிதாக ஒன்றும் இல்லை. அரசு பள்ளி மாணவர் கணக்கெடுப்பின்படி போது வழக்கம் போல் பெண்கள் பெயரில் எழுதிவிட பெண்கள் சீருடை மற்றும் ரிப்பன் என்று வந்துவிட அதிர்ச்சி அடைந்தான் சத்யா. அவசர அவசரமாக அதனை பைக்குள் திணித்துக் கொண்டான். யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணி இருக்க எதிர்பாராத விதமாய் மதிய உணவு இடைவேளையின் போது யாரோ ஒருவன் சத்யாவின் பேக்கை பிரித்துக் கொட்ட, எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. அவனை ஒரேயடியாக கலாய்த்து தள்ளி விடுகின்றனர். அடுத்த முறை இதேபோல் நடக்க பழகிக் கொண்டு விட்டான் சத்யா. ரிப்பனை அவனே எடுத்து “எனக்கு இந்த கலர் வந்திருக்கு” கூறி மற்றவர்களுக்கு ஏற்றாற்போல் பழக்கி கொண்டான். எல்லாவற்றையும் அவ்வாறு ஏற்க முடியுமா ? என்றால் அது சவால் தான். நாய்க்கு உணவு வைக்கும் போது தவறுதலாக கையினைச் சேர்த்து கவ்வுவது போல் பல முறை சத்யா காயப்பட்டு இருக்கிறான். எல்லையை நிர்ணயிக்கும் பிரச்சனை என்பது உலகளவில் நாடுகளுக்கிடையேயும் சரி உறவுகளுக்கு இடையியேயும் சரி தீர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
ஒருநாள் எதார்த்தமாய் வகுப்பறையில் நுழைந்த சத்யாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சத்யாவின் அருகில் அமர்ந்த தமிழரசு அவனின் காதோரமாய் “டேய் உனக்கு முக்கால் தா இருக்காமே” என்று கேட்டு முடிப்பதற்குள் டேவிட் சத்தமிட்டு சத்யாவுக்கு “முக்கால் பூல் டா” என்று மொத்த வகுப்பறைக்கு கேட்கிற மாதிரி தம்பட்டம் அடித்தான். சத்யாவுக்கு தூக்கி வாரிப் போட்டது அடி வயிறு கலக்கிறது, நெஞ்சு பகீர் பகீர் என்று துடித்தது. எல்லோருடைய கிண்டல் மொழியும் அவனுக்கு ஓலங்கள் போல் இருந்தது. தன்னை எவ்வளவு தூரம் கிண்டல் செய்தாலும் பொருட்படுத்தாத சத்யா அன்றைய மதிய உணவு முடிக்கும் முன்பே வீட்டை நோக்கி ஒரே ஓட்டம். வீட்டிற்கு செல்லும் வழியில் யார் இதை பரப்பி இருப்பார்கள் என தனக்குள்ளே பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே போனான். தேரடி வீதியில் திரும்பும் முன் நேற்று கரணுடன் விளையாடியது நினைவுக்கு வந்தது.
கூவாத்தங்கரையின் சுற்றுசுவர் மீது ஏறி நின்று யார் அதிக தூரம் மூத்திரம் பேய்கிறார்கள் என்பதே அந்த விளையாட்டு. இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு விட்டது, இப்போது கூவாறு பக்கம் யாரும் செல்வதில்லை. ஆகையால் போட்டியின் வடிவமைப்பில் மாற்றம் செய்து, யார்? உயரமாக மூத்திரம் பேய்கிறார்கள் என்பதின் அடிப்படையில் வெற்றியாளர்கள் நிர்ணயம் செய்யப்படுகிறார்கள். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் படித்த ஒருவன் அடித்த உயரம் தான் இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது. ஒருமுறை அவன் தன்னுடைய ஆண்குறியினை உயர்த்தி மூத்திரத்தினை மேல் நோக்கி பாய்ச்ச அது கழிவறையின் மேற்கூரையைத் தொட்டு உள்ளே நுழைந்த இருவரின் உதடுகளை நனைத்து விட, தூ...... தூ…. என்று துப்பிக் கொண்டு அவர்கள் வாய் கொப்பளிக்க குழாய்களைத் தேடியது யாராலும் மறக்க முடியாது. அவனை இதுவரை யாரும் வென்றதில்லை. அந்த போட்டிக்கென சில நேர்த்திகளை அவன் பின் பற்றுவான்.
நிறைய தண்ணீர்க் குடித்து மூத்திரப்பையினை நிரப்பிக் கொள்வது எல்லோரும் செய்யக்கூடிய பொதுவான உத்தி. ஆயினும் இதன் பின் அவன் தன்னுடைய தனித்தன்மையைக் காண்பித்தான். ஆண் குறியினை அரை விறைப்பு ஆகும் படி செய்து, நடுவர் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொன்னவுடன் கணநொடியில் குறியை மேல் நோக்கி உயரத்தி ஆள்காட்டி விரல் மற்றும் பெரு விரல்களினால் ஒரு சேர ஆண்குறியின் மேல் உள்ள முன் தோலினை லாவகமாக சீரான வேகத்தில் பின்னிழுப்பான். இங்கு தான் அந்த சூட்சுமம் அடங்கியுள்ளது. முன்னாள் குறிப்பிட்ட பலவும் நிறையபேர் பார்த்து அறிந்து கொண்டனர். ஆனால் இந்த முன்தோலை வலிக்கும் வித்தை மட்டும் யாரும் அறியமுடியவில்லை.
இதே விளையாட்டினை நேற்று சத்யாவும் கரணும் விளையாடினர். நடுவர் யாரும் இல்லாததால் இருவருமே நீதிமான்கள் ஆயினர். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வாகவே இருந்தது. கரண் முதலில் தொடங்கினான். சுவரில் அளவு குறித்து வைத்துக் கொண்டனர். எவ்வளவு நீளம் பாய்ச்சப்படுகிறது என்பது மூத்திரம் சுவரை நனைப்பதில்லை தான் உள்ளது. ஈரச்சுவர் இப்போட்டிக்கு இலாயிக்குப்படாது. மேற்கூரையில் இருந்து மூன்று ஜான் கீழே கரண் பதிவு செய்தான். அடுத்து சத்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது, முழு முயற்சி செய்து ஆண் குறியினை மேனிக்கு உயர்த்தி மூத்திரத்தினை வாள் போல் பாய்ச்சினான். கரண் எட்டிய உயரத்தில் பாதி தூரம் தான் சத்யாவால் எட்ட முடிந்தது. குபீர் சிரிப்பு… வெகுண்டெழுந்த சத்யா இன்னுமொரு தடவை முயற்சித்தான். முந்தியது விட குறைந்த உயரம் “என்டா ஜோபி அவ்வளவு தான உன்னோட குஞ்சி” அன்று கேலி செய்தான். கரண் மெதுவாக தன் கண்களைக் கூர்ந்து சத்யாவின் ஆண்குறியை நோட்டமிட்டான். பிறகுதான் அவன் கவனித்தான், சத்யாவின் ஆண்குறியில் உள்ள மேல் தோல் ஆனது நீக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தான். உடனே உஸ்தானக்குரலில் “என்னடா முக்கால் தான் இருக்கு முழுசு எங்கடா” என்று கேலி செய்தான். கழிவறை விட்டு துள்ளி ஓடி வகுப்பறையின் வரண்டாவில் “சத்யா முக்கா பூல்” என்று கத்திக் கொண்டே போனான். அவன் தான் இன்று வகுப்பறையில் எல்லோரிடமும் பரப்பி இருப்பான் என்ற முடிவுக்கு வந்தான். விசும்பலுடன் தலைத் தெறிக்க மீண்டும் ஓட்ட்ம் பிடித்தான். வீட்டில் சொல்லி அழுவதற்கும் ஆள் இல்லை மனதிற்குள் அதையே போட்டு புழுங்கல் கொண்டு இருந்தான். அடுப்பங்கரையை நெங்கியவுடன் “நைனா! அம்மா மாங்கா வாங்கி அடுப்பாண்ட வச்சி இருக்க, போகும் போது எடுத்துட்டுப் போ” என காலையில் சொன்னது நினைவுக்கு வந்தது. அங்கிருந்து அந்த மாங்காய்களை எடுக்க அடுப்பில் அனலில் அவை வெதுப்பி போயி இருந்தது. சத்யா அதை எடுத்து ஒரு கடி கடித்தான். இந்த பழம் இப்படியும் சுவைக்கும் என்பதை அறிந்தான். அம்மா வந்தவுடன் தன்னுடைய ஆண்குறி பற்றிய தகவலை கேட்டார் வேண்டும் என சத்யா ஆயத்தமானான். வீட்டில் அவன் அம்மா நுழைந்தவுடன் சத்யா அவளை நோக்கி “அம்மோவ் ! என்னோட குஞ்சிக்கு என்ன ஆச்சுமா?” என்று நடந்தவற்றைக் கூறாமல் மறைத்து அளவாக வார்த்தைகளை மட்டும் வெளியிட்டான். “நைனா சின்ன வயசு என்ன ஒரு ஒன்றர வயசு இருக்கும் அப்போ உனக்கு திடீர்னு குஞ்சி வீங்கிடுச்சி ஒன்னுக்கும் போல , டாக்டர் கிட்ட கேட்டதுக்கு முன்தோல வெட்டினா சரியாயிடும் சொன்னாரு, அதான் வெட்டிட்டோம்” என்று அவள் சொல்ல சத்யா வகுப்பில் நடந்தவைகளை மீண்டும் ஒருமுறை ஓட்டிப் பார்த்தான். நல்ல வேளை இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் முழாண்டு பரிச்சை தொடங்கி விட்டது. சத்யாவும் அடுத்த ஆண்டு புது பள்ளியில் சேர்ந்து கொண்டான்.
(நீளும்...)
Comments
Post a Comment