ஜெய் ஹே ஆசையின் இரண்டு கவிதைகள்
ஜெய் ஹே ஆசையின் இரண்டு கவிதைகள்
-அழகுராஜ் ராமமூர்த்தி
______________________________________________ இரண்டு ராமராஜ்யங்கள்
இரண்டு ராமராஜ்யங்கள் உள்ளன
ஒன்று
சீதையின் கற்பைத்
தலைநகராகக் கொண்டது
இன்னொன்று
சீதையின் துயரைத்
தலைநகராகக் கொண்டது
ஒன்றில்
சீதைக்கென்று
எப்போதும் அக்னி எரிந்துகொண்டிருக்கும்
இன்னொன்றில்
சீதைக்காக ராமனே
எப்போதும் அக்னியில் இறங்குவான்
ஒன்றில்
ஒரே ஒரு ராமன்தான்
மீதமுள்ள எல்லோரும் அனுமன்கள்
நிமிடந்தோறும்
நெஞ்சைப் பிளந்து
அதன் உள்ளே சீதையற்ற ராமன்
படத்தைக் காட்ட வேண்டியவர்கள்
காட்ட மறுப்போரெல்லாம்
வாலிகள் ராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
வதம் செய்ய வேண்டியவர்கள்
இன்னொன்றில்
எல்லோருமே ராமர்கள்
அவர்களாகவே தம் நெஞ்சைப் பிளந்து காட்ட
அதில் அனுமன்கள் சீதைகள்
வாலிகள் இராவணன்கள்
கும்பகர்ணன்கள் தாடகைகள்
சூர்ப்பநகைகள்
தெரிவார்கள்
ஒன்றில்
ஒரே ஒரு சிம்மாசனம் மட்டும்
இருக்க
அதில் வீற்றிருந்து
ஆட்சி செய்யும்
ராமனின் பாதுகைகள்
இன்னொன்றில்
சிம்மாசனமே இருக்காது
இரண்டு ராமராஜ்யங்களும்
சந்தித்துக்கொண்டன
ஒன்று 'ஜெய்ஸ்ரீராம்'
என்று சொல்லிக்
கையில் வில்லெடுத்து
அம்பெய்தது
இன்னொன்று
'ஹே ராம்' என்று சொல்லி
மார்பில் அந்த அம்பை வாங்கி
மண்ணில் வீழ்ந்தது
__________________________________
ஜெய் ஹே
மிக மிக
அடிப்படையானவை
'ஜெய்'க்கும்
'ஹே'க்கும் இடையிலான
வேறுபாடுகள்
முன்னதுக்கு
வெற்றி மட்டுமே வேண்டும்
எவரையும்
எதனையும் நசுக்கியாவது
பின்னது
வெறுமனே
வலியையும்
வேதனையையும்
துயரத்தையும்
தோழமையையும்
குற்றவுணர்வையும்
அன்பையும்
களைப்பையும்
கையறுநிலையையும்
ஆதரவையும்
ஆறுதலையும்
வெளிப்படுத்தவும்
சமயத்தில்
'ஏய்' 'அடேய்' என்ற
அர்த்தத்தில்
கடவுளைக்கூட
கூப்பிடுவதற்கும்
பயன்படுத்தப்படுவது
முன்னே
நீங்கள் எதைப் போடுகிறீர்கள்
என்பதைப் பொறுத்தவன்தான்
ராம்
__________________________________
ஆசையின் இந்த இரண்டு கவிதைகளும் ராமரின் பெயரில் நடக்கும் அநீதியைச் சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு தலைவர்களையும் அவர்களது கருத்துகளையும் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்துவது அரசியலில் புதிதல்ல. ஆனால் இப்போது தோன்றியுள்ள புதிய உத்தி ஏதேனும் ஒரு கருத்தை தூக்கிக்கொண்டு ஒருவர் மீது சாயம் பூசுவதாகும். ஒருபக்கம் காந்தி ராமராஜ்யம் ஏற்பட வேண்டும் என்று கனவுகண்டார் எனப் பேசுவதும் மறுபுறம் தேசப்பிதாவாக நேதாஜியை நிறுவ முயல்வதாகச் சொல்லி சாவர்க்கரை தேசப்பிதாவாக்குவதும் தான் இங்கு நடக்கும் அரசியல். நிற்க.
காந்தியின் ‘ராமராஜ்யம்’ எப்படியானது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சமத்துவத்தையும் அகிம்சையையும் வலியுறுத்தி அனைவருக்கும் நேர்மையான முறையில் நீதியை வழங்க வேண்டும் என்பதே காந்தியின் ராமராஜ்யக் கொள்கை. அதில் அதிகாரத்தைப் (கிராமங்களுக்கு) பரவலாக்கி தன்னிறைவு அடைய செய்யும் முயற்சி கவனிக்கத்தக்க பகுதியாகும். ஆன்மிகத்தில் கூட காந்தி அன்பையும் இரக்கத்தையுமே முக்கியமானதாக முன்வைக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதமர் சொன்ன காந்தியின் ராமராஜ்யத்திலிருந்து முழுமையாக வேறுபட்டது தான் காந்தி உருவாக்க நினைத்த ராமராஜ்யம். காந்தியின் ராமராஜ்யம் என்ற ஒரு சொல் சாயம் பூசப்பட்டு தான் இன்று ஒளிர்கிறது. காந்தியின் ராஜ்யக் கொள்கையை, “கிராமராஜ்யம்” என்பதாக எடுத்துக் கொள்ளலாம். கிராமங்களின் தன்னிறைவு மீது அவருக்கு அதிக அக்கறை இருந்தது. இப்போது நிறுவப்பட்டுள்ள ராமராஜ்யம் குறை பிரசவத்தில் பிறந்த கிறுக்குப் பிடித்த பிறப்பு. இந்தக் கிறுக்குப் பிறப்பு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உலகிற்கு நடுவே மண்டியிட்டு சுருளும் நாட்கள் வரத்தான் போகிறது.
தமிழில் படைக்கப்பட்ட ராமன் ஒரு மானுடன், ஒரு அரசன். அரசன் என்ற சொல் தான் இங்கு கவனிக்கத்தக்கது. அரசனின் தலைநகர் கற்பாக இருப்பின் அதனைக் காக்க கிரயம் செலுத்தியாக வேண்டும். கற்பு என்பதன் மேல் கட்டப்பட்ட நெறி “உயிரைக் கொடுத்தாவது கற்பைக் காக்க வேண்டும் “ என்பதே. உயிரினும் உயர்ந்ததாக கற்பு கட்டமைக்கப்படுவதன் மூலம் உயிரைக் கொடுத்து கற்பைக் காக்க முன் வராத பட்சத்தில் உயிரை எடுத்தாவது கற்பை நிலைநாட்டுவோம் என்கிற செய்தி மறைந்துள்ளது. கற்பு என்ற கருத்தாக்கத்தை ஒற்றுமை என்பதாக கொள்வோம். ஒற்றுமை ஒற்றுமை எனக் கூவி அதன் பெயரில் வன்முறை நிகழும்போதும் ஒற்றுமை என்பதை ஒருமையாக மாற்ற முனைகிற நேரங்களிலும் ஒற்றுமை சிதறடிக்கப்படுகிறது. ஒற்றுமை மீதான விருப்பம் கழன்று தன்னைத் தகவமைக்க கொஞ்சம் தள்ளி நிற்க நிர்பந்தம் வருகிறது.
“ஒரே ஒரு ராமன் தான்’”
“சீதையற்ற ராமன்”
“ஆட்சி செய்யும்
ராமனின் பாதுகைகள்” என்ற இரண்டு இடங்களும் இன்றைய நிலையின் நேரடி குறியீடுகளாக பார்க்கப்பட வேண்டியன. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷமும் ‘ஹே ராம்’ கூவலும் ஒருமை பன்மைக்கான இடைவெளிக்குள் வைத்துப் பார்த்தால் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ஒலி கூட்டத்தினைச் சேர்த்து மீண்டும் மீண்டுமாக ஒலிக்கப்படுவது. ‘ஹே ராம்’ ஒரேயொரு முறை ஒருவரால் மட்டும் ஒலித்து ஓயக்கூடியது. இரண்டு சொற்களும் அழுகை வர வைக்கக்கூடியது. ஒன்று அடித்தவர்களின் ஒடுக்க வந்தவர்களின் ஆயுதங்களின் தாக்குதலால் வந்த வலியில் ஒழுகுவது. மற்றொன்று துப்பாக்கி குண்டினை வாங்கி இதயத்துக்கருகில் ஒளித்து வைத்துக்கொண்டவரின் இழப்பிற்காக சிந்தப்படுவது.
“சமயத்தில்
'ஏய்' 'அடேய்' என்ற
அர்த்தத்தில்
கடவுளைக்கூட
கூப்பிடுவதற்கும்
பயன்படுத்தப்படுவது” என்பதற்கு உதாரணமாக பாரதியாரைக் குறிப்பிடலாம். பாரதியாருடைய “கண்ணன் பாட்டு” முழுவதிலும் கண்ணன் தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, குழந்தை, விளையாட்டுப் பிள்ளை, காதலன், காந்தன், காதலி, ஆண்டான், குலதெய்வம் என்ற உறவுகளில் வருகிறான். இதில் முதலாவது தோழனாகவும் கடைசியாக குலதெய்வமாகவும் குறிப்பிடப்படுகின்றான். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்பது “ஜெய் ஸ்ரீ கிருஷ்ணன்” என்றானால் அரசன், சற்குரு, ஆண்டான், குலதெய்வம் எனும் பதங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டு “ஹே கண்ணன்” என்பதற்குரிய தோழன், சேவகன், சீடன் முதலானவை மறைக்கப்படும். இந்த மறைத்தலும் நசுக்குதலும் “ஜெய் ஸ்ரீ”. மறைக்கப்படுதலும் நசுக்கப்படுதலும் “ஹே”. இவ்விரு வார்த்தைகளுக்குப் பின் “ராம்” என்ற சொல் இருந்தது போல இனிவரும் காலங்களில் வேறொரு சொல் பயன்படுத்தப்படலாம். ஆனால் முன்னொட்டுகள் மட்டும் அப்படியே இருக்கும்.
கவிதைகளுக்கு வருவோம். முதலாவது ராம் ஒலிக்கு முன் இரண்டாவது ஒலி ஒடுங்கிப்போகும். இரண்டிற்கும் இடையில் வித்தியாசமில்லை. எதிரெதிர் நிலை இருக்கிறது என்பதை முன்னிறுத்துவதை இக்கவிதைகள் உட்கிடையாகக் கொண்டுள்ளது. அருஞ்சொல் இதழில் வெளியாகியுள்ள டிசம்பர் 6 சொல்லும் செய்தி என்ன? என்கிற ராஜன் குறை கட்டுரை, “அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு” மற்றும் “அயோத்தி: தேசத்தின் சரிவு" ஆகிய சமஸ் கட்டுரைகள், “இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்" என்ற ராமச்சந்திர குஹாவின் கட்டுரை, சீனிவாச ராமானுஜன் எழுதிய “மோடி மந்திர்" முதலானவை ஆசையின் இரண்டு கவிதைகளின் முழு விளக்கம் என்றும் கூறலாம்.
பார்வைக்கு:
ஆசையின் கவிதைகளுக்கான இணைப்பு:
அருஞ்சொல் இதழ் கட்டுரைகளின் இணையதள இணைப்பு
https://www.arunchol.com/rajan-kurai-krishnan-on-babri-masjid-demolition
https://www.arunchol.com/arunchol-editorial-on-ayodhya-ram-temple-and-congress-decision
https://www.arunchol.com/editorial-on-ram-mandir
https://www.arunchol.com/ramachandra-guha-article-on-hindu-raj-the-descent-of-india
https://www.arunchol.com/srinivasa-ramanujam-article-on-ayodhi-ram-temple
Comments
Post a Comment