கேலியல்ல வன்மம்
கேலியல்ல வன்மம்
இந்த வார விகடனில் -அதிரூபன்
இந்த வார விகடனில் …
‘ஒரு பிரிவு, ஒரு அணைப்பு, ஒரு ஆற்றாமை, ஒரு குளத்தாமை, ஒரு ஏக்கம், ஒரு ஏப்பம், ஒரு தும்மல், ஒரு காதல், ஒரு இச்சை, ஒரு பச்சை என மனித அகமெனும் மிதிவண்டியின் பல்சக்கரம் போல் இரவில் கச்சிதமாகப் பொருந்திச் சுழலும் தனிமையின் கொடூர கணங்களை வார்த்தையெனும் மைதா மாவில் புரட்டி, கொதிக்கும் மனமெனும் வாணலியில் பொரித்து விளையாடுபவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன்….
_____________
இப்படி மனுஷ்யபுத்திரனை வெகுஜன வாசக வட்டத்திற்கு அறிமுகப்படுத்துகிறது 'ஆனந்த விகடன்' …
வைரமுத்துவின் 'மகா கவிதை' நூல் பெரிதாக வெளியிடும் சமயத்தில், வைரமுத்து vs கவுண்டமணி என கவிதை எழுதினார்கள்.
சமீபத்தில் நகுலனின் காணொளி ஒன்று இலக்கிய உலகத்தில் பரவலாக பகிரப்பட்டு, நகுலனுக்கென்று தனியாக நூல் வெளிவந்த சமயத்தில் நகுலனின் கவிதைகளையும் கிண்டல் செய்து இதேபோல் எழுதினார்கள்.
இப்போது மனுஷ்யபுத்திரனின் 50வது நூல் வெளியான சமயத்திலும் இப்படிப்பட்ட கவிதைகளை எழுதி இழிவு செய்கிறார்கள்.
ஒரு பக்கத்தில் சொல்வனத்தில் கவிதைகளும் அடுத்தப் பக்கத்தில் கவிஞர்களின் கவிதை பற்றிய கேலியையும் ஒரே புத்தகத்தில் எப்படி இவர்களால் கொடுக்க முடிகிறது …
__________________________________
எழுதிய நபருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்....... -பெரு விஷ்ணுகுமார்
ஆனந்த விகடனில் பரோட்டா சூரியையும், கவிஞர். மனுஷ்யபுத்திரனையும் ஒன்றுசேர்த்து விகடனில் கவிதை(?) போல ஒன்று உருவாக்கப்பட்டதைக் கண்டேன். இதே விகடனில் சில நாட்களுக்கு முன்பாக நகுலனின் கவிதைகளையும் வடிவலுவின் வசனத்தைக் கொண்டு எழுதியிருந்தார்கள். எனது கணிப்பு சரியெனில் அடுத்தது இதில் வரவிருப்பவர் தேவதேவனோ அல்லது பிரமிளோ.....? ஏன் சிறுகதை ஆசிரியர்கள் கூட அடுத்தடுத்து இடம்பெறலாம்..
வரவர நகைச்சுவைக்கும் வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமல் அதைப் பயன்படுத்துகிறோமோ என்றும் தோன்றாமலில்லை. சமூகத்திற்குத் தகாத ஒன்றை, ஒரு கலையின் அலட்சியப்போக்கினை அல்லது அதிகாரத்தின் தவறுகளைக் கேலி செய்வதென்பது ஜனநாயக சுதந்திரமாகும். அதில் அனைவருக்கும் உரிமையுண்டு. மேலும் தவறுகளைக் கேலி செய்வது அதைச் சம்பந்தப்பட்டவருக்கு சுட்டிக்காட்டுவதாக அர்த்தம் கொள்ளலாம். ஆனால் ஒன்றின் இயல்பை (அது கவிதையின் இயல்போ அல்லது மனிதரின் இயல்போ) வலிந்து கேலிக்குட்படுத்துவது ஒருவித வன்முறை என்றுதான் சொல்லவேண்டும். இதனால் ஆவதென்ன...? வேடிக்கைகளா...? நமது வேடிக்கைக்காக நம்மைச்சுற்றியுள்ள எதை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயங்கமாட்டோம் போல.
கவிதைகளிலும் கதைகளிலும் சில உத்திகள் காலத்திற்கேற்ப பலவீனமடைவது உண்மைதான். இதே நகுலனின் ராமச்சந்திரன் கவிதை இதே முகப்புத்தகத்தில் நகைச்சுவையாகப் பயன்படுத்தப்படுவதையும் கண்டிருக்கிறோம். ஆனால் நகுலனின் (அல்லது ஒரு கவிஞரின்) எல்லா கவிதைகளையும் அதன் இயல்பை நசித்து இப்படி பயன்படுத்துவது சரிதானா... அப்படிப் பார்த்தால் இவ்வுலகில் நமது நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் கேலி செய்யலாம். எதை வேண்டுமானாலும் மலினப்படுத்தலாம்... அல்லவா...?
ஒரு படைப்பைக் குறித்து கடுமையான விமர்சனங்களை உருவாக்காமல் (உருவாக்கத் தெரியாமல்) வெறுமனே நகைப்புக்கு உட்படுத்துவது அதை எழுதியவருக்கே ஒருவகையான தாழ்வுணர்ச்சியையும் சந்தேகத்தையும்தான் உருவாக்கும். இதனால் பெற்றுக்கொள்ள ஒன்றுமில்லை. வேண்டுமெனில் சிரமப்பட்டு சிரிப்பை வரவழைத்துக்கொள்ளலாம்.
ஒட்டுமொத்தமாக இது நம்மிடம் வலுவடைந்திருக்கும் மேம்போக்கான தன்மையினையே சுட்டிக்காட்டுகிறது.
எழுதிய நபருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.......
__________________________________
அரவிந்த்ராஜ் ரமேஷ் - கார்த்திகேயன் மேடி, விகடன் ஆகியோருக்கு எனது கண்டனங்கள் - றாம் சந்தோஷ்
சில மாதங்கள் அல்லது வருடத்திற்கு முன்பு, வெய்யிலின் கவிதைகளை மீம்ஸ்களாக மாற்றி நண்பரும் கவிஞருமான விஜயகுமார் பகிர்ந்திருந்தார். அது பற்றி யாருக்கும் புகார் இல்லை; கவிஞருக்கு உட்பட. எனக்குமே இல்லை. ஆனால், எந்த ஒரு விசயமும் மீம்ஸிற்குள் வரும் போது பெறுவது வெறும் எள்ளல் தொனியே எனும் போது வெய்யில் கவிதைகளின் பிரதான தொனி பாழ்பட்டுவிடும் என்று சங்கடப்பட்டேன். அதை விஜயிடம் சொன்னபோது, உடனே, அவர் அவற்றை நீக்கிவிட்டார். ஏனெனில், அவருடைய நோக்கம் கிஞ்சித்தும் அவர் நேசிக்கும் கவிஞரின் கவிதைகளைச் சிறுமைபடுத்துவது அன்று.
**
இனி, அரவிந்த்ராஜ் ரமேஷ் - கார்த்திகேயன் மேடி கூட்டணி மனுஷ்ய புத்திரன் மீது வெளிப்படுத்திய வன்மம் குறித்து.
எனக்கு இலக்கிய வடிவங்களின் மீதும், இலக்கியவாதிகளின் மீது எப்போதைக்குமான அதாவது, 'நித்திய' புனித நம்பிக்கைகள் எதுவும் இல்லை. நானே, றாமானந்த சித்தர் அருளிய தினப்படி குறிப்புகள், றாமானந்த சித்தர் அருளிய குல்லா கதைகள் என்று எழுதி வருபவன் தான். என் கவிதைகளின் பிரதான தொனியும் பகடிதான்.
மேலும், இதில், ஒரு கவிஞரின் கவிதை வடிவத்தை ஒரு நகைச்சுவை நடிகரின் வசனங்களோடு குழைத்து எழுதியது, எழுதுவது பற்றிய புகார்கள் எதுவும் எனக்கு இல்லை. சொல்லப்போனால், கவிதை சார்ந்து நான் தற்போது எழுதி வரும் நெடிய கட்டுரையிலும் கூட, கடந்த முறை இதே அரவிந்த்ராஜ் ரமேஷ் எழுதிய 'தபூசங்கர் காதல் டானிக் by சந்தானம்' கட்டுரையினை அது வெளிப்படுத்திக் காட்டும் வேறுவொரு தொழில் நுட்பத்தின் முக்கியத்துவம் கருதி மேற்கோள் காட்டி இருந்தேன். (சூர்யாவிடம் தகவலாகவும் சொன்னேன். )
அப்படி இருக்க இந்தக் கட்டுரையை மட்டும் எப்படி உள்நோக்கம் கருதியது, வன்மம் கொண்டது என்று குறிப்பிடுகிறேன்..
காரணம் இல்லாமல் இல்லை...
எனது புகார் இவர் சுவீகரித்து எழுதிக் காட்டும் கவிஞர்களின் கவிதை வடிவத்தினைப் பற்றினது அல்ல. கார்டூன்கள் மீது பெரிய ஆர்வம் கொண்ட, மீம்ஸ், ட்ரோல் உலகம் குறித்த அவதானிப்புகளை மேற்கொண்டு வரும் எனக்கு இது சாதாரணமாகத் தான்பட்டது. ஆனால், தபூ சங்கர் பற்றின கட்டுரைக்கும் மனுஷ்யபுத்திரன் குறித்த கட்டுரைக்கும் இடையில் பாரதூரமான வித்தியாசம் வெளிப்படுகிறது. இவற்றையே நான் உள்நோக்கம், அல்லது வன்மம் என்கிறேன்.
ஆய்வுக்காக வேண்டி, அவற்றை மூன்று தலைப்புகளாக பிரித்துக் கொள்கிறேன்...
தலைப்பு:
தபூசங்கர் காதல் டானிக் by சந்தானம் பரோட்டோ புத்திரனின் முரட்டுக் கவிதைகள்
இரண்டிற்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள் முதல் தலைப்பில் இருவருடைய பெயர்களுமே அவ்வளவு அடக்கமாக வெளிப்படுகிறது (சட்டல்) ஆனால், இரண்டாவது தலைப்பில் நகைச்சுவை நடிகரின் பெயருக்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. ஆனால், மனுஷ்ய புத்திரனின் பெயர் எப்படி எழுதப்பட்டிருக்கிறது பாருங்கள்! அவருடைய கவிதைகள் எப்படி சிறுமைபடுத்தப் பட்டிருக்கிறது பாருங்கள்! 'பரோட்டோ' புத்திரனின் 'முரட்டுக்' கவிதைகள்-
அடுத்து, கவிஞர் பற்றிய குறிப்பு:
தபூசங்கர் பற்றின குறிப்பினை இப்படி எழுதுகிறார் அரவிந்த்ராஜ் ரமேஷ்:
காதல் கவிதை என்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டினால் கிடைக்கக்கூடிய அபூர்வ வஸ்து என்ற மாயையை உடைத்தவர்... காதலும் தமிழும் மட்டுமே போதும் ஒருவன் கவிஞராகலாம் என நம்பிக்கையூட்டி, பல இளைஞர்களின் கைகளில் எழுதுகோலை ஏற்றி வைத்தவர் 'காதல் கவிஞர்' தபூ சங்கர்!
(இதைப் படிக்கும் போது சிரிப்பு வந்தாலும், அது எழுதியவரின் எழுத்தின் பொருட்டு வரவில்லை; எனது விமரிசன நுண்ணறிவிலிருந்தே வெளிப்படுகிறது என நான் கருதுகிறேன்.)
ஆனால், மனுஷ்யபுத்திரன் பற்றின அவருடைய குறிப்பினைப் பாருங்கள்!
ஒரு பிரிவு, ஒரு அணைப்பு, ஒரு ஆற்றாமை, ஒரு குளத்தாமை, ஒரு ஏக்கம், ஒரு ஏப்பம், ஒரு தும்மல், ஒரு காதல், ஒரு இச்சை, ஒரு பச்சை என மனித அகமெனும் மிதிவண்டியின் பல்சக்கரம் போல் இரவில் கச்சிதமாகப் பொருந்திச் சுழலும் தனிமையின் கொடூர கணங்களை வார்த்தையெனும் மைதா மாவில் புரட்டி, கொதிக்கும் மனமெனும் வாணலியில் பொரித்து விளையாடுபவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.
வெகுசனப் பரப்பில் தபூவுக்கு ஒரு முக்கியத்துவம் இருப்பதாகக் கொள்ளும் கட்டுரையாளருக்கு எப்படி நவீனக் கவிதையின் வாசகப் பரப்பினை கவிதையின் மேன்மேலும் பெருக்கிய மனுஷுக்கு இருக்கும் முக்கியத்துவத்தினையும், மதிப்பினையும் (மட்டும்) கீழ்மைப்படுத்த எங்ஙனம் துணிவு ஏற்படுகிறது???
**
கார்டூன் (இவர்கள் அவற்றை ஓவியம் எனக் குறிப்பிடுகிறார்கள்)
தபூசங்கர் - சந்தானம் கட்டுரையில் சந்தானம் பற்றின கார்டூன்களே உள்ளன -தபூசங்கரின் புகைப்படம் ஒன்று மட்டுமே உள்ளது.
ஆனால், மனுஷ் - சூரி பற்றின கட்டுரையில், நகைச்சுவை நடிகரான சூரியன் படம் எந்தவிதக் கார்டூன் தன்மையில்லாமலும் - ஆனால், மனுஷ்யபுத்திரனின் படமானது ஒரு பரோட்டாவினை முக அமைப்பாகக் கொண்டு அவரையே ஒரு கார்டூனாக்கி இருக்கிறார்கள். நான் மீண்டும் சொல்கிறேன் - மனுஷ்யபுத்திரனை கார்டூனாக வரைவதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை (என்னை யாராவது கார்டூனாக வரைந்து கொடுத்தாலும், எனது அறையில் சட்டகமிட்டு மாட்டிக் கொள்வேன்) - அந்த கார்டூன், அதன் தொழில் நுட்ப ரீதியில் நன்றாகவே உள்ளது. ஆனால்... அது எந்த இடத்தில், எதன் பொருட்டு வரையப்பட்டுள்ளது. எடுத்தாளப்பட்டுள்ளது என்பதும் தானே ‘கார்ட்டூனியலில்' அர்த்தம் தரும் முக்கிய அம்சம்???
அந்தவகையில்தான் சொல்லிறேன்: அவர்களும், அந்தப் பத்திரிக்கையும், ஆசிரியர்களும் வெளிப்படுத்தியது ஒரு அப்பட்டமான வன்மமும் வன்முறையுமாகும். அதற்கு எனது கண்டனங்கள்!!
கு:
1. எப்படி இப்படியான ஒரு கட்டுரையை ஆசிரியர்கள் அனுமதித்தார்கள்.. பூமணியும், பட்டிமன்றத் தலைவர்களும் அவர்களுக்கு ஒரே தரத்திலான 'தமிழறிஞர்கள்' எனும் போதே அவர்களின் அறிவுத் தளம் பற்றின புரிதல் நமக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவா!!
2. மனுஷ்யபுத்திரன் தலைமையில் புத்தகக் கண்காட்சியில் கவிதை வாசித்த 'சென்னை வாழ்' கவிஞர்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்....
-றாம் சந்தோஷ்
19.01.2024
நான் சந்தா கட்டி இணையத்தில் விகடன் படிக்கிறேன். அவற்றிலிருந்து படங்களை எடுக்க முடியவில்லை. நண்பர்கள் மேற்சுட்டிய தரவுகளைப் படமாகத் தந்தால் இணைக்க வசதியாக இருக்கும். உதவுக. நன்றி.
__________________________________
கவிதையை ஒரு கேலிப் பொருளாகப் பார்க்கும் பன்னாடைகளுக்கு - பூவிதழ் உமேஷ்
கவிதையை ஒரு கேலிப் பொருளாகப் பார்க்கும் பன்னாடைகளுக்கு கவிதையினால் ஒருவன் அடைந்த புகழை பொறுக்க முடியாத வயிற்றெரிச்சல் மனுஷ்யபுத்திரன் மீதான வன்மமாக வெளிப்பட்டிருக்கிறது.
கேலியும் கிண்டலும் சமூத்தில் அன்றாடங்களில் ஒன்றுதான் அது உள்நோக்கம் இல்லாததாக இருக்க வேண்டும். ஆனால் அவரோட பெயரை சுட்டுவதிலிருந்து கடைசி வரை வன்மமாகவும் அயோக்யத்தனமாகவும் வெளிப்பட்டிருக்கிறது.
ஆனந்த விடகடனுக்கும் அதை எழுதியவர்களுக்கும் என் கண்டனங்கள்.
__________________________________
அதிரூபனின் பதிவு விகடன் மீதான விமர்சனமாக அவர்கள் இதற்கு முன் நகுலன் மற்றும் வைரமுத்து ஆகியோரை வைத்து செய்த தவறைத் தொட்டுக்காட்டுவதோடு விகடனின் பத்திரிகை அமைப்பு மீதும் கேள்வி கேட்கிறது. கடைசியாக முன்வைக்கப்படும் கேள்வி என்பது சாதாரணமானதல்ல. அதனை எவ்வித பிரக்ஞையும் இன்றி பக்கத்தை நிரப்பும் பத்திரிகையின் செயல்பாட்டை சுட்டிக் காட்டக்கூடியதாகவே பார்க்க வேண்டும்.
பெரு விஷ்ணுகுமாரின் பதிவு அதிரூபனின் தொடர்ச்சியாக தெரிந்தாலும் அவர் கவனம் செலுத்துமிடம் விகடனைத் தாண்டி கவிதை என்றாகிறது. முகநூலில் வரும் கேலியைக் குறிப்பிட்டு சொல்லுமிடத்தில் கவிஞர்களும் அல்லது ஒரு கவிஞரின் எல்லாக் கவிதைகளும் ஒரே மாதிரியானதல்ல என்பதை கேலி செய்பவர்களாக கவனிக்கத் தவறுவதைக் குறிப்பிடுகிறார். நகைச்சுவை என்ற பெயரில் நிகழும் இலக்கிய படைப்புகள் மீது நிகழும் வன்முறையைத் தொட்டுக்காட்டுவதே அவர் பதிவின் முக்கியப் பகுதியாக வெளிப்படுகிறது.
நவீன கவிதைகளை ஊடகப் பரப்பில் கொண்டு சேர்த்ததில் மனுஷ்யபுத்திரனுக்கு முக்கியப் பங்குண்டு. ஒருவர் அதிகமான கவிதைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருவதால் எதில் எந்தவொரு இலக்கியத்தன்மையும் இல்லை என்று ஒதுக்குவது முழுமையாக முன் முடிவின் விளைவு தான். மேலும் புரோட்டாபுத்திரன் எனக்கூறுவதால் மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு பாதிப்புமில்லை. தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்பவர் என்பதால் இதையும் அவர் கவிதையாக்கி கடந்து தான் செல்லப் போகிறார். நான் பகிர்ந்துள்ள கண்டனப் பதிவில் றாம் தனது குல்லா கவிதையை விகடனின் எழுத்தோடு ஒப்பிடுகிறார் அல்லது குறிப்பிடுகிறார். உதாரணத்திற்கான சுட்டலாக றாம், குல்லா கவிதைகளைக் குறிப்பிட்டாலும் அதனைத் தவிர்த்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.
எத்தனையோ கவிஞர்கள் தனக்கு முந்தைய கவிஞர்களை அவர்களது கவிதைகளை பகடியாக்கி எழுதியதுண்டு. அவற்றுள் ஏதோவொரு விமர்சன நோக்குடனான பகடி மட்டுமே இருக்கும் (கிண்டலும் இருப்பதுண்டு). ஆனால் கொச்சைப்படுத்துதல் இருப்பதில்லை. புரோட்டா புத்திரனின் முரட்டுக் கவிதைகள் என்ற பகுதியில் கொச்சைப்படுத்துதல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. றாம் சந்தோஷின் பதிவை மனுஷ்யபுத்திரனுக்கான ஆதரவாக மட்டுமே கருதாமல் மெய்நிகரின் பொதுத்தளம் இலக்கியத்தை அணுகுவதிலுள்ள குறைகளுக்கான எதிர்வினையாகவும் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது. பகடியைத் தன் கவிதை மொழியாகக் கொண்டவர் என்ற அடிப்படையிலும் தொடர்ந்து நவீன கவிதைகள் குறித்து எழுதி வருபவர் என்கிற வகையிலும் றாம் சந்தோஷின் மூன்று தலைப்புகளாக அமைந்துள்ள ஒப்பீட்டு ஆய்வுப் பதிவு முக்கியமானது.
கவிஞர் ஒருவர் தனது கவிதையால் அடையும் உயரத்தை பொறுத்துக் கொள்ள முடியாது வன்மத்தைக் கக்குபவர்களுக்கும் அதற்கு ஆதரவளிக்கும் பத்திரிகைக்குமான உள்நோக்கத்தைக் குறிப்பிடும் பதிவு பூவிதழ் உமேஷ் உடையது.
24.1.24 -ஆனந்த விகடனின் 74,75 ஆம் பக்கத்தில் வெளியான பரோட்டாபுத்திரனின் முரட்டுக் கவிதைகள் என்ற பகுதியில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் மட்டுமல்லாது அவருடைய கவிதைப் பாணியும் கேலி செய்யப்படுகிறது. ஒருவருடைய கவிதைப் பாணியை பகடியாக்குவதில் எனக்கு விமர்சனமேதும் இல்லை. எதிர்காலத்தில் எழுதப்படும் அவருடைய கவிதைகளும் அதே பாணியை மட்டுமே கொண்டிருக்கும் என்று காலக் குறிப்பு மூலம் அரவிந்த்ராஜ் ரமேஷ் சுட்டுவதை எத்தன்மையில் சேர்ப்பதெனத் தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து பல கண்டனப் பதிவுகள் முகநூலில் வந்திருக்கிறது. அதில் நான்கு கவிஞர்களுடைய பதிவு மட்டும் இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-அழகுராஜ்
Comments
Post a Comment