அரா கவிதைகள்
ஓயாமல் ஓடும் கால்களும்
எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும்
நீள் வடிவ முகமும்
திடீரென கீச்சிட்டு ஒலித்து
திருப்பும் குரலும்
இன்னும் கேட்கிறது
கேட்டலின் நிறுத்தமே
பித்துப் பிடித்து குமுறும்
மனத்தின் விடுதலை...
மாற்ற நினைக்கும் ஏகாந்தமும்
_______________________________
அகப்பாடல்களை
பேருந்தில் கேட்கும் போதும்
பேப்பரில் பார்க்கும் போதும்
எனது அந்தரங்கம் திறக்கிறது
அதற்குள் இருக்கும்
உன்னுடனான பேச்சுகள்
பேரிரைச்சலாகி
கொல்ல முந்துகிறது
எப்படி நான் அகத்தின்
உலக இருப்பை
அழிப்பது?
பரவாயில்லை ..
அகத்தின்
கதவுக்கு பின்னே இருக்கும்
அந்தரங்கத்தினை
எப்படி திறக்காமலிருப்பது?
எல்லாவற்றையும் பூட்டிவிட்டு
துறவலைத் தூக்கி
வானத்தின் கீழ்
பறந்து கொண்டிருக்கும்
கடலுக்குள்
போட்டுவிட்டு செல்
பாசமே ..
_________________________________
கருந்திராட்சை
இரண்டே இரண்டு கருந்திராட்சை பழங்கள்
வெண்மைக்குள் சுழன்று வந்து
பிழிபட்டு வழிந்த நீரின்
வைன் போதை
இன்னும் தீரவில்லை
தீரும் நொடிக்காக
கடிகாரம் நிற்குமென
நான் சாலையோர பாலத்தடியில்
உட்கார்ந்து
மின்னி மறையும் நட்சத்திரத்தை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
அதுவும் மறையட்டும்..
திராட்சை பழமும் சாறு வடியாமல்
போதை தராமல் போகட்டுமென்ற
வேண்டுதல் ஒன்றே மிச்சமாயிருக்கிறது
______________________________________
பொத்தைகளுக்குள் தூக்கம்
பொத்தைகளுக்குள் அடங்கிய
போதையை அனுபவித்து
மல்லாந்து கிடந்தபோது
அந்தரத்தில்
பழுப்பு நிறம் படர்ந்த
மின்காற்றாடி மட்டுமே
கண்ணில் படுமாறு சுற்றியது..
சுற்றித்திரிந்து வந்து
சுற்றிக்கொண்டிருந்த கண்கள்..
துல்லியமாக மையமிட்டு பார்க்க
ரெகுலேட்டர் துணையின்றி
கண்களின் பிரம்மையில்
விசிறியின் வேகம் பெருகியது..
பெருகி நின்ற வேகம்
காற்றோடு கழிபட்டு
குறைய குறைய
நானும் தூங்கிப்போனேன்..
நாளும் விழாவும்
நகர்ந்து கொண்டிருந்தது..
___________________________________
காணாமல் போனாய் -நீ
காணாமல் போனாய் என
பயங்கர சப்தமாக
அசீரிரி ஒலித்தது
ஒலி வலது காதில்
அழுந்தினாலும்
இடது பக்கமாக தான்
ஏறி இறங்கியது..
துடிதுடித்த உதடுகள் இரண்டும்
நாராசமாய் அதிர
தேடினால் தானே
காணாமல் போய் இருப்பேன்
என்ற குற்றொலி மட்டும்
நாக்கிலிருந்து சுழன்று விழுந்தது
____________________________________
உடையும் கதைகள்
துளி துளியாய் இறங்கும்
சாரலுக்குள் ஒளிந்திருக்கும்
கதைகள் எல்லாம்
டப் டப்பென பொதியில்
தவறி விழுந்து
உடைகிற எல்லா நொடியிலும்
நீர் கசிகிறது
பல நிறத்தில்
உடையும் கதைகளுக்குள்
தங்கியிருந்த கதாபாத்திரங்கள்
நிர்க்கதியாக மீண்டும் மீண்டும்
வானைப் பார்த்து
மேலே செல்ல துடித்தால்
விழுந்துடைந்த கதையில்
பொறிக்கப்பட்ட
சொற்கள் எல்லாம் ?
______________________________________
சாய குஞ்சுகள்
சாயம் பூசிய கோழிக்குஞ்சுகள்
குலுக்கிப் போட்ட
லாட்டரி சீட்டில் விழுந்தன..
லாட்டரியில் விழுந்த முதலாம்
குஞ்சினை பறந்து வந்த
காக்கை தூக்கியது..
இரண்டாம் குஞ்சினை
ஆதவனின் கதிர்கள் ஆட்டமின்றி
கல்லின் சூட்டில் காயவிட்டது..
லாட்டரிக்காரன் கூடையில்
மிச்சமிருந்த குஞ்சுகள்
கொக்கரிக்க
மிதிக்கும் வேகத்தில் வண்டியும்
ஹூம் ஹூய் என்று
ஓசை தந்து போனது..
______________________________________
Comments
Post a Comment