கண்ணிவெடிகளின் தேசம் -கி.தினேஷ்கண்ணன்

 கண்ணிவெடிகளின் தேசம்

               -கி.தினேஷ்கண்ணன்


“உலகில், வாழ்ந்து கொண்டிருப்பவர் என்று எவருமில்லை, அனைவரும் செத்துக்கொண்டிருப்பவரே”


      இந்தக் கட்டுரை சினிமாவைப் பற்றியதா போரைப்பற்றியதா என்று கூறமுடியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில், காஸாவிலுள்ள குழந்தைகளுக்கு உங்களின் கிறிஸ்துமஸ் செய்தி என்ன என்று அதிகாரத்திலுள்ளவரிடம்  கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதில் மறதியாகவோ மொளனமாகவோ இருக்கலாம். அதிகாரத்தின் மொளனத்தைப் புரிந்துகொள்ள முற்படும் ஒரு நேர்கோட்டிலில்லாத எண்ணச் சிதறல்களாக இக்கட்டுரை இருக்கக்கூடும் என்றே கருதுகிறேன்.

 

தாயாகிய பாலஸ்தீனத்திற்கு, 


       பூமியில் மனிதன் இன்னும்  அழியாமல் இருப்பதற்கான ஒரே காரணம் கதைகள். கதைகள் இல்லையேல் தொன்றுதொட்ட என்றோ  ஒரு காலகட்டத்தில் மனித இனம் என்பது மண்ணோடு மண்ணாகியிருக்கும். அவ்வாதி காலத்திலிருந்தே கதைகள் உருவாகத் தொடங்கின. அதனாலயே மனித இனம் இத்தனை காலங்களும் உயிர்ப்போடு இருந்து வந்திருக்கிறது.


   கதைகள், செவ்வியலென்றும்  இலக்கியம் என்றும் தன்னை வனைந்து கொண்டு உலகம் முழுவதிலும் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் உணரப்பட்டும் காலந்தோரும் மனிதன் வாழ்வதற்கான அந்த வாழ்க்கைப் பசையை உயிர்ப் பிசுபிசுப்பை  மனிதனின் உணர்வடுக்குகளிலும் கண்களின் ஜீவ சிடுக்குகளிலும் தேய்த்து வளர்த்து வந்திருக்கின்றது. தாய் தனது குழந்தையை வளர்ப்பதுபோல. 


      அந்தத் தாய் சென்ற நூற்றாண்டில் ஒரு புது வடிவத்தைப் பிரசவிக்கிறாள் அதுவே சினிமா. கதைகள் காட்சிகளை கற்பனை செய்து துய்ப்பதற்கான இடத்தைத் தருகிறது ஆனால் சினிமா அந்த அகக்  காட்சிப்படுத்தலுக்கான இடத்தைத் தருவதில்லை என்றும் அதனால் கதைகளே இலக்கியமே சினிமாவை விட மேம்பட்டது என்றும் சினிமா வளரத் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு வாதம் கருத்துநிலை, உலகந்தோறும் அறிவு ஜீவிகளிடையே புழங்கி வந்திருக்கின்றது. தற்போதும் அக்கருத்துடையோர் உளர். ஆனால் இந்த ஒப்பிடலும் வாதமுமே சினிமாவை உணர்வுநிலையிலன்றி ஒரு தொழில்நுட்பக் கதை சொல்லலாக மட்டுமே பார்ப்பதனால் ஏற்படும் அறியாமையே. 


      கதைகள் நமக்கு ஏற்படுத்தும் காட்சிகள்- காட்சிகள் ஏற்படுத்தும் கதைகள் என இலக்கியமும் சினிமாவும் வெவ்வேறு வழிகளில் எதிரெதிர் திசைகளில் இருந்து ஒத்த புள்ளியை வந்தடைகின்றன. வெறும் கதை சொல்லலாக மட்டுமின்றி சினிமாவின் காட்சிகள் நமக்குள் ஏற்படுத்தும் சலனம் தனித்துவமானது. அதை இலக்கியத்தோடு ஒப்பிட முடியாது. காட்சிகள் உருவாக்கும் தொடர்பு நிலையில் இருந்து உணர்வுகள் பிறக்கின்றன. உணர்வுகளிலிருந்து கதைகளையும் செவ்வியலையும் வாழ்க்கையையும் எதையும் நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடியும். பிரக்ஞையை எண்ணங்களை அசைவின்றி நிற்கச் செய்யும் நமது உட்கிலேசங்களை உணர்வுநிலையைச் சிறைப்படுத்தி அது எடுத்துகொண்ட கதையை நமக்குச் சொல்ல முற்படும் மாயாஜாலமே சினிமா. இயற்கை நமக்கு ஒரே ஒரு வாழ்க்கையை; ஒரே ஒரு காலத்தை; ஒரே ஒரு மனிதக் குழுவை நமக்குச் சபித்திருக்கின்றது. கதைகளும் சினிமாவும் ஆயிரமாயிரம் வாழ்க்கையை வெவ்வேறு காலத்தின் வெளியை உலகின் அனைத்து மூலைகளிலும் ஜீவித்திருக்கும் மனிதக்குழுவை நாம் கொண்டிருக்க நமது  அடையாளத்தோடு மனதளவிலாவது அவற்றை இணைத்துக்கொள்ள அருளியிருக்கின்றது.


          உலகம் ஒரு பூவனமாக  பாரதியின் கற்பனையூடாக அனைவராலும் நேசிக்கப்படுபவர்களாக மனிதர்கள் உலகம் முழுவதிலும் அன்பினால் பிணைந்தவர்களாக இருந்திருந்தால் இந்தக் கதைகளும் சினிமாவும் கலைத்தன்மை செறிந்த வாழ்வின்பங்களை  மனிதர்களுக்குக்  காலங்காலமாக கூறியபடி இருந்திருக்கும். ஆனால் உலகமும் மனிதர்களும் குருதியினால் நனைந்தும் வெறுப்பினால் தூண்டாடப்பட்டும்  ஒருவர் மீது ஒருவர் மலத்தைப் பூசிக்கொள்ளும் இழிநிலையில்  காலந்தோறும்  வாழ்ந்து வருவதால் இந்தக்  கதைகளும் சினிமாவும் தனது செறிந்த கலைத்தன்மையை இந்த வாழ்க்கைப்பாடுகளின் கதைகளைச் சொல்வதற்கேற்ப தன்னைப் பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. 


       இந்தக்  கதைகளே தொடக்கத்தில் கூறியபடி மனித இனத்தை அழியாது சிறிதேனும் மனிதன் என்பவனின்  உண்மையான இயல்பை உணர்த்த பெரு முயற்சி எடுத்தபடி இருக்கின்றன. இதையே நூற்றாண்டுகாலமாக மனிதர்கள்  உள்ளாகிவரும் பெருந்துன்பத்தை எடுத்துரைக்கும் ஆறுதல்படுத்தும் சிந்திக்கவைக்கும் கோபப்படுத்தும் காட்சிச் சலனங்களும் கதைப்புலன்களும் செய்து வருகின்றன. 


       இந்த நிமிடத்தின் மனிதர்களும் உலகம் அனைத்திலும் ஏற்பட்டிருக்கும் வாழ்வியலும் பாடுகளுமே  முக்கியமானவை. அதைத்  தவிர எந்த வரலாறும் அதற்கான இன்றைய வெறியாட்டங்களும் மடமை, மலம் மூடிய சிந்தனை. ஆனால் அதையே உலகம் சிந்திக்கின்றது கீழ்மைப்படுகின்றது. இந்தக் கீழ்மையினால் அடக்குமுறைகள் உண்டாகின்றன, போர்கள் உண்டாகின்றன, அழிவுகளும் சுரண்டல்களும் உண்டாகின்றன. மனிதர்களின் வாழ்க்கை இதற்கிடையே நிகழ்ந்தழிகின்றது. 


      இவர்களின் கதைகளே எழுத்தாகவும் காட்சியாகவும் எங்கும் பயணிக்கின்றது. உலகின் இந்த எல்லைக்கும் அந்த எல்லைக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கின்றது என்ற அறிதலை  இந்தக் கதைகளும் காட்சிகளும் தருகின்றன. துடிதுடித்துச்  சாகும் காட்சிகளைப்  பலர் காண விரும்புகின்றனர், இவை துடிதுடித்து வாழும் காட்சிகள். துயர்க் குளிரில் விரைத்துச் செத்துக் கொண்டிருக்கும் உடலின் ஏதோ ஒரு பகுதியில் ஒளி பட்டு தான் இன்னும் உயிரோடு இருப்பதற்கான நம்பிக்கையை தராதா என்ற ஏக்கம். என்றும் திறந்துகிடக்கும்  நரகவாசல் சிறிதேனும் மூடப்படாதா என்ற தவிப்பு. இந்த ஏக்கமும் தவிக்கும் வெடிகுண்டுகளுக்கு பயந்து ஒளிந்து கொள்ளும் பாதாள அறைகளோடும் தனது உடலையும் வாழ்வையும் ஆன்மாவையும் உறிஞ்சித் தின்னும் உறிஞ்சித்  தின்றுக் கொண்டிருக்கும் இந்தப் பணவயப் பன்றிகளின் சுரண்டலிலிருந்து மீள முடியாதென்ற அறிதலில் மெதுவாகச் செத்துக் கொண்டிருக்கும் மனிதனின் ஆழ்மன சுயங்களோடும் அழிந்துபடுகின்றன. 


       துயரத்தை உணராதவரை துயரத்திற்கான முழுமையான அர்த்தம் உங்களுக்குப்  புரியப்போவதில்லை. கதைகளாலும் காட்சிகளாலும் மனித மனத்தின் அறிதலை  உங்களுக்கு ஓரளவேனும் கடத்த முடியும் என்பதாலேயே  அவை கலைத்தன்மை கொண்டவை. எனவே கலை கலைக்கானது சமூகத்திற்கானது என்று பிரித்துப்  பார்க்கும் அறியாமை நிற்க. 

ஒருவரின் அழுகையும் வலியும் நமக்கு ஏற்படுத்தும் துக்கத்தை விட அதற்கு முன்னதான  அவர்களின் சிரிப்பும்  இன்பமும் எப்படி இருந்ததென்ற தரிசனம் நமக்குள் அதிகப்படியான  துக்கத்தைக் கிளர்த்தும். 


       ஒரு சமூகக் குழுவிற்குள் நாம் சிறைப்பட்டுள்ளோம். அது நாடோ, மொழியோ, மதமோ, இனமோ, எதுவாயினும் அது சிறை. சினிமா அந்த சிறைகளிலிருந்து நமது கைகளைப் பற்றிக்கொண்டு நம்மை சமூகத்திடம் இருந்து களவாகக் காப்பாற்றி வந்து உலகின் வெவ்வேறு மனித வாழ்க்கையின் அவர்களின் வாழ்வியலின் அகப்போராட்டங்களில் தரிசனத்தை நமக்குத் தருகின்றது. அணுகுண்டுகளின்  மத்தியில் தனது தங்கையின் சிறிய கரத்தினைப் பற்றியபடியும் முதுகில் தூக்கியபடியும் பல வாரங்களின் பசியை அடிவயிற்றில் தேக்கிக்கொண்டு புகலிடம் தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு யப்பானிய  சிறுவனாகவும், ராணுவ வீரர்களால் வன்புணர்வு செய்யப்பட்டதில் பிறந்த குழந்தையை கல்லைக்கட்டி நீரில்  மூழ்கடிக்கும் குழந்தையின் தாயான அந்தப்  10 வயது  சிறுமியாகவும், படையெடுப்புத் தாக்குதலுக்கிடையில் தொலைந்துபோன தனது மகனைத் தேடிக் கண்டடையும்  ஒரு லத்தீன் அமெரிக்கத்  தாயாகவும், போரின் மீதான கவர்ச்சியில் முதுகில் துப்பாக்கியை மாட்டிக் கொண்டு கிளம்பியபின் அப்போரின் பேரிரைச்சலிலிருந்து  தப்பிக்க தனது காதுகளில் சகதியை வைத்து அடைத்துக் கொள்ளும் ரஸ்யச்  சிறுவனாகவும், ஜெர்மானிய நாசிப்படைகளால் சிதைக்கப்படும் ஒரு விளையாட்டுச் சிறுமியாகவும் நம்மால் உணர முடிகிறது. நம்மால் அவர்களாக, அவர்களின் உயிர்வாதையை அகநரகத்தை உணர முடிகிறது. இதுவே ஒரு புரட்சிகரமான மனிதப் பரிணாமம் என்று கருதுவதற்கு இடமுண்டு.


          சினிமா ஒரு புரட்சிகரமான செயல். அது அவ்வாறு ஆகிவிடக்கூடாது என்பதற்காக பெரும்பாலும் காணப்படும் காண்பிக்கப்படும் அதிகாரத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் சினிமா இயங்கி வருகின்றது .  அந்த மடமையில் இருந்து வெளிவருவதால் ஒரு முழுமையான அப்பட்டமான உலகம், மனிதர்கள், வாழ்வியற்பாடுகள் அனைத்தும் நம்முள் விரியும். அவை உய்த்துணரத்தக்கவை. கொண்டாடப்பட வேண்டியவை என்று கூறுவது வெற்று பிரஸ்தாபம். உணரப்பட வேண்டியவை அவ்வளவே. அவ்வளவே நமக்கும் புரட்சிக்குமான தூரம். அது  ஏற்படுத்தும் கருத்தியற்  தாக்கங்களும் எண்ண ஓட்டங்களும் பெரும் மாறுதலை தனி மனிதனிலும்  சமூகத்திலும் ஏற்படுத்தும். 


         சினிமா வளர்ந்து வந்த அதே கடந்த நூற்றாண்டில் தான் போர்களும்  நிகழ்ந்து வந்திருக்கின்றன. மனிதனின்  உணர்ச்சிகளையும் வாழ்க்கைப் பாடுகளையும்  கூறமுனைந்த சினிமா இயல்பாகவே போரைப் பற்றிய படங்களை அதிகம் உருவாக்கிக் குவித்திருப்பது இயல்பே. போர் எதிர்ப்புப் படங்கள் உலகின் அனைத்து மொழிகளிலும் அம்மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளோடு கூறப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றது. ஏகாதிபத்திய அமெரிக்காவாகினும் சரி, எல்லாவற்றையும் பறிகொடுத்த ஜப்பான் ஆனாலும் சரி, மனிதர்களுக்கு போரின் அறிவீனத்தை உணர்த்த முயன்ற கலைஞர்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றனர். அமெரிக்காவில் இது வியட்நாம் போரில் ஈடுபட்டதால் தங்களின்  இயல்பு வாழ்வை இழந்த ஒரு தலைமுறையினது  வாழ்க்கைக்  கோணல்களை கூற முற்பட்ட இயக்குனர்கள் ஏராளம். இரண்டாம் உலகப் போரில் உருக்குலைந்த ஜப்பானிலும் போர் எதிர்ப்புக் கருத்தோட்டப் படங்களின் தனி ரகமே உருவாகி அதன் வலியை எடுத்துரைத்தபடி இருந்திருக்கின்றது. இவ்வாறே  ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் தென் கிழக்கிலும் போர் எதிர்ப்புப் படங்கள் உருவாகியபடி இருக்கின்றன. 


        போரின் பைத்தியத்தன்மையை உணர்த்தியபடி இருக்கின்றன. அதிகாரத்தால் கூறுபோடப்பட்ட நிலத் துண்டங்களையும் மனிதத் துண்டங்களின்  கதைகளையும் தனது கைகளில் ஏந்தித்  தூக்கியுயர்த்திக்  காண்பித்து, இதோ இதுவே போர், நீங்கள் போரை விரும்புபவராகவும், அது ஏற்படுத்தும் வன்முறையை விரும்புபவராகவும், அதை ஆதரிப்பவராகவும், மறைமுகமாக அதை வரவேற்பவராகவும் அல்லது அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கடந்து செல்பவராகவும் என எதுவாகவும் இருந்தாலும் உங்களிடம் இந்தத் திரைப்படங்கள் உரத்து அழுகின்றது. இதோ இதுவே போர், இப்படித்தான் இது இருக்கும் என்று ரத்தம் கலந்த  எச்சிலை நம் முகத்தில் உமிழ்கின்றது. 


       அதுவே அக்கதைகள் அப்போரிற்கிடையில் சிக்குண்ட குழந்தைகளின் மூலம் சொல்லப்படுமேயானால் அதன் மென்மையின் தீவிரம் ஆன்மாவின் நரம்புகளை பிடுங்கி எரியும் வலியை ஒருவருக்குள் ஏற்படுத்தும். அவ்வாறான கதைகளும்  காட்சிகளும் சினிமாவென்ற ஊடகத்தின் மூலம் வெகுவாகவே கடந்த நூற்றாண்டு முதல் கூறப்பட்டுவருகின்றன. ஆக  அழுத்தமான கருத்தைப் போர் எதிர்ப்பு  சினிமாக்கள் கூறுவதில் ஓரளவு வெற்றியடைந்திருக்கின்றது. போரும்  குழந்தைகளும் என்பது அருகருகில் வரக்கூடாத இரு பதங்கள். ஆனால் அவ்வாறே அது அதிகப்படியாக  அருகில் இருக்க நேர்ந்திருப்பது மனிதர்களில் சாபம் அல்லது அவர்கள் வணங்கும் கடவுளர்களின் குரூரம்.nஎன்றும் இக்குழந்தைகளின் மனிதர்களின் தலைகளுக்குமேல் போர் விமானங்கள் வட்டமிட்டமடி இருக்கின்றன. அவற்றின் சஞ்சரிப்பு கிறுக்குத்தனத்தைப் பரப்புகின்றது. அதன் குண்டுகளிலிருந்து  தப்பித்துப் பதுங்க, ஓடி ஒழிய அது எப்போது தாக்குதலைத் தொடங்கும் என்ற செயலற்ற, உயிரை இழுக்கும் பயத்தில் அவர்கள் வாழ்ந்துவிட முற்படுகின்றனர். 


போர் என்பது வளர்ந்தவர்களுக்கே புதிரான அதிர்ச்சி நிறைந்த  உள்மனப்  போராட்டங்களையும் இன்னும் அதற்குத்  தயாராகாத மனநிலையையும் ஏற்படுத்தும். அதுவே  எந்தக் கருத்தும் வளராத குழந்தைகளிடம் அதற்கு தயாராகாத என்பதைவிட அது என்னவென்றே முழுதாக அறிந்துணர முடியாத பிஞ்சுப் பிரக்ஞையில்  எந்த மாதிரியான எண்ண மோதல்களை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். 


       இந்தச்சூழலில்  சிறுவர்கள் வரம்பு மீறிய  இயற்கைக்கு எதிரான முதிர்ச்சியை அடைகிறார்கள். ஆயுதம் சுமக்கும் அளவிற்கு உறுதியில்லாத கைகளில் அவை திணிக்கப்படுகின்றன. போர்வைகளுக்குள் புதைந்து தாயின், அண்ணனின் முதுகையொட்டிப் படுத்திருந்த தூக்கத்தில் கிரங்கிய குழந்தையின் விழிகளில் தற்போது மிஞ்சி இருப்பது மிரண்ட பார்வையும் தூக்கத்திலிருந்து கத்தும்போது அருகிலிருத்து  ஆறுதல் படுத்தி நெஞ்சோடு அனைத்து அரவணைத்து தூங்க வைக்க யாரும் இல்லாத சூனிய வாழ்வும் வெறுமையின் இருப்பும். 


       குண்டுகளால் துளைக்கப்பட்டு  சரிந்து கிடக்கும் தாயின் உடலில் இருந்து சூடாகக் கசிந்து கொண்டிருக்கும் இரத்தத்தை தன் கைகளால் அலைந்து அதன் கதகதப்பில் விளையாடிச் சிரிக்கிறது ஒரு குழந்தை. தனது அண்ணனின் பின் தலையில் துப்பாக்கி ரவையினால் ஏற்படுத்தப்பட்ட துவாரத்திலிருந்து  குமிழியிடும் இரத்தத்தில் நனைந்த ரோமங்களின் குளிர்ந்த  நீர்மையில் தனது முகத்தைத் தேய்த்து முருவலிக்கிறது ஒரு குழந்தை. இந்த மிரள் விழிகளின் மொக்குத்தன்மையில் கிழிக்கப்பட்ட சீர்மையை, குலைந்துபோன நேர்கோட்டை பதுங்கு குழிகளிலும் சுரங்கங்களிலும் இருளின் அடர்த்தியில் ஒடுங்கியமர்ந்திருக்கும் இளந் தோலின் கன்னச் சிராய்புகளிலிருந்து கோடிட்டுத் துளிர்க்கும் ரோஸ் நிறக் குருதியில் நம்மால் நக்கி அறியமுடியும். 


        நம்மால் உணர முடியும், ஆம் நாம் உணர முடியும், தங்கையின் நெஞ்சுக்குரலை, வாயில் மிட்டாயை ஒதுக்கியபடி சிரிக்கும் குழந்தையை,  மண்டியிட்டு நெற்றியில் வாங்கிக் கொள்ளும் சிறிய உதடுகளின் முத்தத் தகிப்பை  நம்மால் உணர முடியுமென்றால் பிணக்குவியலின் சிதை மௌனத்தை, துப்பாக்கி முளைத்த  குழந்தைகளின் மென் முதுகுகளை, நம்மேல் கணக்கும் உறுப்புகள் திறந்துகிடக்கும் உடல்களை உதறிவிட்டு எழும் சக்தியில்லாதது  போன்ற பளுவை, கதகதப்பான ரத்தத்தை, சதைக்குள் ஆன்மாவை எங்கென்று  தேடவென்ற  பரிதவிப்பை, குண்டுகளால் நாடு கற்பழிக்கப்படுவதை, நடுங்கும் பற்களில் இருந்து நெற்றிக்கிழுக்கும் நரம்பின் குத்தலை, சில்லிடும் பின் தலையை நம்மால் உணர முடியும். 


       ஆயுதங்கள் என்பது முதலாளித்துவத்தின் மலம். போர் என்பது அதன் வெற்றிகரமான லாபம் கொழிக்கும் பிஸ்னஸ் மாடல். பொதுவாகவே வியாபார உலகம்  குழந்தைந்தைத்தனத்தை அறவே விரும்புவதில்லை. குழந்தைமை வெகுளித்தனம் innocence இந்தச் சந்தைக் கலாச்சாரத்திற்கு ஆபத்தானது என்று கருதப்படுகிறது. இதுவே அச்சந்தை  அரக்கர்களால் உருவாக்கப்படும், சற்றே பெரிய, உலகின் அதிக பணம்கொழிக்கும் வியாபாரமான  போரினில்  அப்பட்டமான, குழந்தைகள் மீதான உளவியல் தாக்குதலாக அவர்களின் குழந்தைப் பருவத்தையும் குழந்தைமையையும் அவர்களிடமிருந்து பறிக்கிறது. இது எல்லாக் காலங்களிலும் நடக்கிறதென்றாலும் போரின்போது அப்பட்டமாக நேரிடையாக வெளியில் தெரிகிறது. 


       ஆனால், இது சாதாரணமாகவே உலகின் அனைத்து இடங்களிலும் மறைமுகமாக திணிக்கப்படும் நிலையே. இதுவே வளர்ந்த வளரும் நாடுகளில் குழந்தைகளின் மனதில் சந்தைப் போக்கை விதைத்து அவர்களை தனது சந்தைக்கான விளம்பர மற்றும் முதலீட்டு கச்சாப் பொருளாக கல்வியின் மூலமும் சமூகப் பொதுப்போக்கு மூலமாகவும் ஏற்படுத்திக்கொள்கிறது.  இதை வங்காள இயக்குனர் சத்யஜித் ரேயின் two என்ற குறும்படம் தெளிவாக  விளக்கியிருக்கும். 


அவர்களின் குழந்தைமையை அழிப்பதே இந்தச்  சந்தைகளின் முக்கியப் பணி. குழந்தைமை என்பது உலகத்தின், மனிதனின் இயற்கையான ஆன்மாவின் இயல்பை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மூல சக்தி. இந்தச்  சீர்மை உள்ளவரை சந்தைகளால் கொளுக்க முடியாது.  ஆகவே குழந்தைமையே இவற்றின் முதல் தடங்கள். ஆக அதை ஒழிப்பதும் அதற்கு பதிலாக வளர்ந்த சீரழிந்த சந்தை மனப்பான்மையை புகுத்துவதும் அதற்கு முக்கியப் பணி.  குழந்தைகள் வளர்ந்து சீரழியும்வரை ஏன் காத்திருக்க வேண்டும். அவர்களின் குழந்தைமையைக் கற்பழிப்பதால் அவர்களையும் சந்தையின் கச்சாப் பொருளாக மாற்றிக்கொண்டு பயன்படுத்த  முடியுமே என்பதே இன்றைய பொதுப்போக்கு. 


       இது குழந்தைகளுக்கான அவர்களைச் சார்ந்த பிரச்சனை என்று பார்ப்பது மிகவும் தவறுபட்ட பார்வை. இது அனைத்து மனிதர்களின் ஒட்டுமொத்த மனித இனத்தின் பிரச்சனை. அனைத்து மனிதரும் குழந்தையாகவிருந்தே வளருகின்றனர். இது அந்த வளர்ச்சியில் புகுத்தப்பட்ட நஞ்சு. குழந்தை இந்த சந்தைக்கேற்றவாறு எவ்வாறு வளரவேண்டும் என்று  மறைமுகமாக  மெதுமெதுவாக உள்ளேற்றப்படும் நஞ்சு. 


வெறும் கல்வி அறிவுரைகளும் ஒரு காலக்கட்ட மனிதர்கள் அடுத்த காலக்கட்ட  மனிதர்களைப் பார்த்து சலித்துக்கொள்வதும் வெற்றுப் பேச்சும் எதற்கும் உதவாததுமாகும். வேலைசெய்ய தயார் செய்யப்படுபவர்கள்  குழந்தைகள். அவர்களுக்கு குழந்தைமை தேவையற்றது. அவர்களுக்குத் தேவை ஆசை- என்றும் அடைந்து விடக்கூடாத ஆசை. அதுவே முதலீடு.   சந்தையை ஊதிப்பெருக்குவதற்குத் தேவையான அடிமைகளை அதற்கு உருவாக்கித் தரும் வழிமுறை. திணிக்கப்பட்ட வாழ்க்கைமுறை. 


       மனிதத்தன்மையை கூடாது என்று அவை நேரடியாகச் சொல்வதில்லை. மாறாக அது மனிதத்தத்தன்மைக்கான தன்மைகளை மாற்றுகிறது. எது மனிதத்தன்மை என்று நிர்ணயிக்கிறது. இது மனிதத்தன்மையை மறுப்பதினும் ஆபத்தானது. மறுப்பது என்றேனும் ஒரு தலைமுறையினால் எதிர்ப்பை  எதிர்கொள்ள வேண்டிவரும். ஆனால் மாற்றுவதே அந்த எதிர்ப்பு எந்த தலைமுறைக்கும்  ஏற்படாதவாறு அந்தந்தத் தலைமுறைக்கு ஏற்றவாறான ஏமாற்று ஆசைகளையும் அறிவீனங்களையும் அதற்கு வழங்கியபடியிருக்கும். 


சிந்திக்கக்கூடாது என்ற அடக்குமுறை பழையதாகி விட்டது. மக்கள் வரலாற்றுப் பரிணாமத்தில் அதை அறிந்து எதிர்க்கக் கற்றுக்கொண்டனர். எனவே அடக்குமுறையும் பரிணாமமடைந்து எதை சிந்திக்க வேண்டும் என்ற புதிய அடக்குமுறையைக் கையிலெடுத்துள்ளது . இதுவே இந்த யுகத்தின் புதிய அடக்குமுறை.

இது மனிதனின் கூட்டு ஆன்மாவின் மீதான தாக்குதல். 


       அவர்கள் விரும்பியபடி உன்னைச் சிந்திக்க வைத்துவிட்டால் ஒரு கன்னத்தில் உன்னை அறைய வேண்டிய அவசியமே இல்லை. எனவே மறுகன்னத்தைக் காட்டுவதா அல்ல திருப்பி அரைவதா  என்ற தத்துவச் சிக்கலுக்கும் இடமிருக்காதல்லவா ! இதுவே இந்த நூற்றாண்டின் புதிய சூழல். கருத்தைக் கொண்டிருப்பதே உலகின் அனைத்து சண்டைகளுக்கும் காரணம். எனவே கருத்தை ஒழிப்பது ஒரு கருத்து இல்லாதிருப்பதே கீழ்மையான மனித வாழ்வை முழுதும் வாழ்ந்து முடிப்பதற்கு நமது கருத்தை அடக்குபவர்கள் நமக்குப் போடும் பிச்சை , ஒரு சாதாரண எதுவுமற்ற வாய்க்கும் வயிற்றுக்குமான வாழ்க்கை.


      தனது சீல் கண்களினோடு அதிகாரம் தான் காணும் அனைத்தையும் நரகமாக்குகின்றது. மனிதன் மனிதனாக வாழ்வதை நிராகரிக்கின்றது . அது விரும்பி உண்பது பெண்கறியும் பிள்ளைக் கறியும். உணர்வுகளுக்கு இருளை விதிக்கின்றது. அதனைப்  பொருத்தவரை உயிர்த்துடிப்பு என்பது வியாபாரச் சரக்கு, அதனை அதன் இயல்பிலேயே விடுவது உண்மைப் பேயை வாழவிடுவதென்பதாகிறது. எனவே உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில் மனிதர்கள் உழன்றழிய வேண்டும். அதையும் மீறிய உண்மையைத் தேடுகின்ற சிந்தனை வெளி ஒரு சிறு எதிர்ப்பு அந்த இழிபிறவிகளாக்கப்பட்டவர்களிடமிருந்து வெளிப்படுமாயின் உயிர்பிழைப்பதற்கான பதைபதைப்பில்  அவர்களின் உடலும் ஆன்மாவும் துடிதுடித்து தான் சுயமாக உண்மையின் மகத்துவத்தை சிந்தித்திருக்கவே கூடாது என்ற நிலைக்குத் தள்ளப் படவேண்டும் இதுவே அதிகாரத்தின் நிலைப்பாடு. 


       போர், இந்த அதிகார நிலைப்பாட்டின் கோரத்தை அப்பட்டமானதாக வெளிக்காட்டுகின்றது . குழந்தைகளும் பெண்களும் அதிகாரத்தைப் பொருத்தவரை ஒரு இறைச்சி. அது உலகப் போர்களிலிருந்து இன்றைய போர்கள் வரை திண்ணமாகவே தெரிகின்றது. ஆறடி சவக்குழிகளைவிட மூன்றிச் சவக்குழிகளே இதுவரை அதிகம் தோண்டப்பட்டிருக்கக்கூடும் 

இந்த மரணத்தின் மீதான உறக்கமும் ரத்தத்தின் கொச்சை நெடியும் இன்றுவரை நம்மைவிட்டகலாமல் தொடர்கின்றது. அதனோடே  நாம் வாழ வேண்டியிருக்கும். 


   ரோமங்களை மழித்து  தனது ஆண்குறியை பறைசாற்றிக்கொள்ளும்  காட்சிப்படுத்தும் அதிகார மந்தை. தனது அதிகாரப் புட்டத்தை அப்பாவிகளின் ரத்தத்தில் அலங்கரித்து சர்வதேச நாடுகள் வீதிகளில் நெழித்துக்காட்டிக்கொண்டிருக்கின்றது. 


       கேளிக்கைப் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க ஊர்களும் நகரங்களும் நாடுகளும் சூரையாடப்பட்டு கொண்டாட்டங்கள் கலியாட்டங்களுடன் எரிக்கப்படுகின்றது. ராணுவத்தின் சாதனைகளை  மெச்சும்  நாடுகளின் முகத்தின் மீது காரி உமிழும் அழிக்கப்பட்ட மக்களின் ஆன்மா . 


      ஒலி அழுகையொலி மரணத்தின் ஒலி வெடிகுண்டுகளின் ஒலி விமாங்களின் ஒலி.  சத்த்திலிருந்து தப்பிக்க சகதியை அள்ளிக் காதுகளில் அடைத்துக் கொள்ளும் உயிரை ஈஞ்சும்  நிணமுண்ணும் கொடுங் கனவுகளின் மொக்கு. இன்னொரு கோர இருள். இருப்பின் நரநரப்பு. 


கண்ணிவெடிகளின் தேசம் 


கெரசின் வாசம் வீசும் வன்புணர்வு 

கீழுக்கும் மேலுக்குமான உயிர் வாதை

வெறுப்பின் சதைத் துண்டம் 

உயிரின் கசப்பு ருசி 

ஆன்மாவைக் குதறும் பனிமூட்டம்

தலைக்குள்  முளைத்த கட்டி 

மேல் மூச்சில் கலந்த ரத்த நெடி

உட் கண்டையில்  கவியும் கூர் இருள் 

வெறிக்கிறுக்கு

காதுகளிலிருந்து வழியும் அடர்க் கருப்புக் குருதி  

செவ்விருள் புணர்வுக்குரோதம் 

உறுப்புகளை ஈஞ்சும் உயிர் ரோகம்

செயலின்மையின் வெடிச்சத்தம்

நெஞ்சுக்குழியில் சூல் கொண்ட மொந்தைக் குளரல்

தேம்பும் குழந்தையின் சாக்குரல்

கண்ணிவெடிகளின் தேசம்



சில போர் எதிர்ப்புத் திரைப்படங்கள் :


சோவியத் யூனியன்(ரஸ்யா) 

                           COME AND SEE (1985) 


ஜப்பான் 

                           GRAVE OF FIREFLIES (1988) 


குர்திஸ்தான்(4 நாடுகளில் பிய்ந்துகிடக்கும் பிரதேசம்) -

                          

       TURTLES CAN FLY (2004) , 

                            TIME FOR DRUNKEN HORSES (2000) 


லத்தீன் அமெரிக்கா (மெக்சிகோ)

                           INNOCENT VOICES (2004) 


பிரான்சு

                        AU REVOIR LES INFANTS (1987) 

                           FORBIDDEN GAMES (1952) 


Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு