‘தமிழ் சைவம்’ எனும் நெறி காவிவேட்டிகளுக்கும் கருப்புச்சட்டைகளுக்கும் இடையில்
‘தமிழ் சைவம்’ எனும் நெறி காவிவேட்டிகளுக்கும் கருப்புச்சட்டைகளுக்கும் இடையில்
-ப.தினேஷ்குமார்
தமிழ்ச் சமூக வரலாற்றில் சமயமும் அரசியலும் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதை வரலாற்றின் பக்கங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. சமயத்தால் அரசியலும்; அரசியலால் சமயமும் என இவ்விரட்டைகள் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டத் தாக்கங்களும் மிக அதிகம். இன்றைய காலச் சூழலில் தமிழரின் பழமையான சமய நெறி என மூதறிஞர்களால் முன்னிறுத்தப்படும் சைவம் என்னும் சிவனிய நெறிக்கும் தற்கால அரசியலுக்கும் உள்ள தொடர்பையும் ஓர்மையையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, சமயம் சார்ந்த ஆய்வுகள் தமிழியல் சூழலில் அதிகம் கவனம் பெறாத நிலையில், சமயம் சார்ந்த நிகழ்ந்த; நிகழும் இயக்க அரசியல்களையும் இன்றியமையாது புரிந்துணர்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை எழுகிறது. இக்கட்டுரை, சைவம் எனும் வைதீக சமயம் தனித்தமிழ் இயக்கத்தால் எங்ஙனம் தனக்குரிய தனித்த அடையாளத்தை தேடிக் கொள்ள விளைகிறது என்பதையும் தமிழ்ச்சமூகத்தில் தனித்தமிழியக்கம் நிலைத்திருக்க சைவ சமயம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது அல்லது பயன்பட்டு வருகிறது என்பதையும் விவாதிப்பதாக அமைகிறது.
தமிழ்ச் சைவ ஞானமரபு - சூளை சோமசுந்தர நாயக்கர்
மறைமலையடிகள் - தனித்தமிழ் இயக்கம்
அழகரடிகள் - திருக்குறள்பீடம்
குருகுல இயக்கம் - ஒளியகம் ந. ரா. ஆடலரசு
தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைவ சமயம்:
தமிழகத்தில் சைவ ஆதீனங்களால் பேணப்பட்டு வந்த பேணப்பட்டு வரும் ’சம்பிரதாய சைவம்’ காலனிய தாக்கத்தாலும் அச்சு ஊடகத்தின் பரவலாலும் வெகுஜனம் ஆக்கப்பட்டது. ஒரு சில சாதியினரால் பல நூற்றாண்டுகளாக நிறுவனமயமாக்கப்பட்ட வைதீக சமயமான சித்தாந்த சைவத்தை வெகுஜனமாக்குவதில், தமிழகத்தின் தலைநகர் சார்ந்த சீர்திருத்தவாத சைவ அமைப்புகளும் அவ்வமைப்புகளை மையமிட்டு இயங்கிய 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க கால தமிழ் ஆளுமைகளும் முதன்மையான காரணங்களாக அல்லது ஊக்கிகளாக இருந்தார்கள். இவர்களுள் தனித்தமிழ் இயக்கம் கண்ட அறிவுக்கடல் மறைமலை அடிகளார் தொடங்கி கா.சுப்பிரமணிய பிள்ளை, கே. எம். பாலசுப்பிரமணியம் பிள்ளை, ஜெ. எம். நல்லசாமி பிள்ளை, திரு.வி.க., அழகரடிகள், கி. இராமலிங்கனார் போன்ற ஏராளமான ஆளுமைகளையும் அறிஞர்களையும் பட்டியலிடலாம். சைவ சித்தாந்த பெருமன்றம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சைவப் பேரவை, தெய்வீக சிந்தாந்த இலக்கிய மன்றம், திருக்குறள் பீடம், குருகுல இயக்கம் மற்றும் சன்மார்க்க கழகம் ஆகிய இயக்கங்கள் (அல்லது நிறுவனங்கள்) அச்சு ஊடகம் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக சென்னையின் பேட்டை மக்களுக்கு சைவம் என்னும் சமயத்தை அறிமுகப்படுத்தி பரப்பக்கூடிய நிலையில் தொடர்ந்து இயங்கி வந்ததை காண முடிகின்றது. இந்த பரவலாக்கும் முயற்சியில் வைதீக சமயமான சைவம் தன்னைத்தானே மாற்றிக்கொள்ள அல்லது மாற்றப்பட்ட ஒரு நிலையை எய்தியதை புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. இச்சமயத்தினுடைய பிரமாண நூல்களாக கருதப்பட்ட ரிக், யசூர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள், 28 ஆகமங்கள், புராண இதிகாசங்கள் என்ற வடமொழி நூல்களுக்கு மாற்றாக அறம், பொருள், இன்பம், வீடு, சைவ சமயத்தினுடைய மூலம் என்றும் மூவர் முதலிகள் தேவாரங்களும் திருவாசகம் முதலிய பன்னிரு திருமுறைகள் முன்மொழியப்பட்டன; அவையே பிரமாண நூல்கள் என்ற அளவிலே பிரகடனப்படுத்தப்பட்டன. இவ்வாறு, ஒரு வைதீக சமயத்தை தமிழ் நிலம் சார்ந்த ஒரு சமயமாக கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சைவ சமயத்தை வைதீகத்திலிருந்து தமிழ் மூலங்களுக்கு முதன்மை தரக்கூடிய சமயமாக கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்து ஆளுமைகளாக இருக்கக்கூடிய மறைமலை அடிகள் முதலானோர். 1916ஆம் ஆண்டு மறைமலை அடிகளார் கண்ட தனித்தமிழ் இயக்கம் வடமொழி ஆதிக்கத்தை மொழி, பண்பாடு, நாகரிகம் மற்றும் சமயம் ஆகியவற்றிலிருந்து நீக்க முற்பட்டது.
ஆட்சி மொழி, மொழி சீர்திருத்தம் ஆகியவற்றில் வெற்றி கண்ட தனித்தமிழ் இயக்கம் நாளடைவில் சென்று தேய்ந்திறுதல் என்பதாக காணாமல் போன ஒரு இயக்கமாக கருதப்பட்டாலும் உண்மையில் அது இன்று உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை சிவனிய நெறியில் செலுத்தி வரக்கூடிய தாக்கங்களிலிருந்து உணர முடிகின்றது. காரணம் மறைமலையடிகளார் தொடங்கிவைத்த தமிழ் வழிபாடு, வைதீகத்திற்கு ’சமயத்தில் உள்ளாக இருந்து ஆற்றும் மாற்றாக’ இருந்தது. அவரை பின்தொடர்ந்து அவருடைய தலை மாணாக்கர் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை என்ற அழகரடிகள் திருக்குறளின் ஒரு அதிகாரத்திற்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் திருக்குறள் பீடத்தை 133 ஏக்கரில் நிறுவி, அதை திருவள்ளுவர் திருமடம் என்று குருகுல இயக்கமாகவும் கட்டமைக்க முற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் ஈட்டினார். மறைமலையடிகளின் மாணாக்கரும், இறுதி காலத்தில் அவருடன் நெருக்கமாக பழகிய ஒளியகம் ந.ரா. ஆடலரசு அவர்கள் இதை அதிகமாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் முனைந்து செயல்பட்டார். ஆடலரசு அவர்கள், மறைமலை அடிகளார் பெரியாரைச் சந்திப்பதற்கு முதன்மை காரணியாக இருந்தவர் என்பதை அடிகளாரினுடைய நாட்குறிப்பு மூலம் அறிய முடிகிறது. மேலும் இந்தி பொது மொழியா? என்ற நூலை அடிகளாரை எழுத வைத்து ஹிந்தி போராட்ட காலகட்டங்களில் வெளியிட்டதும் கா. அப்பாதுரையாரை சார்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முனைந்து செயல்பட்டவை ஆகிய நகர்வுகள் திராவிட கழகங்களோடு இணைந்து சமயத்தை காணக்கூடிய ஒரு பங்கை நமக்கு வெளிப்படுத்துகின்றன.
ஆனால், தொடக்க காலத்தில் அழகரடிகளார் சென்னையில் பேசத் தொடங்கிய முதல் பொழிவை இராஜாஜி அவர்கள் ஆடலரசு ஐயா அழைப்பின் பேரில் வந்து தொடங்கி வைத்ததும் மதுராந்தகத்தில் அழகரடிகள் தொடங்கிய குருகுல இயக்கத்தை அன்றைய தமிழக முதல்வர் காங்கிரஸ்சை சார்ந்த ஓமாந்தூரார் வந்து திறந்து வைத்து சிறப்பித்தமை போன்றவை எல்லாம் தொடக்க காலத்தில் இந்த தமிழ்ச்சைவம் என்ற நெறி வைதீகத்தை போற்றக்கூடிய ராஜாஜி போன்ற தலைவர்களோடு ஒருங்கிணைந்து சென்றதையும் நாளடைவில் வைதீக எதிர்ப்பு வலு பெற்று தமிழ் மூலங்களுக்கு முதன்மை தரக்கூடிய திராவிட சித்தாந்தத்தோடு ஒத்துப் போவதையும் காணமுடிகின்றது. இப்படி இரு பக்கத்திற்கும் ஒரு பக்க சமரசம் கொண்டு இயங்கக்கூடிய ஒரு நெறியாக, வைதீகத்தை எதிர்க்கக் கூடிய ஒரு சமயமாக உரு கொண்டிருப்பதை காண முடிகின்றது.
தமிழ் சைவ ஞானமரபு:
இந்நெறிக்குரிய மூலங்கள் அல்லது மரபு என்ற கேள்வி எழும்பொழுது, தங்களுக்கென ஒரு ஞான மரபு இருப்பதாக கட்டமைத்துக் கொள்ளக்கூடிய தமிழ் சைவர்கள், மறைமலைகளின் ஆசிரியர் சூளை சோமசுந்தர நாயக்கர் முதலாக நால்வரை தமிழ்ச்சைவ ஞான மரபு என்ற வகையிலே அடைவு படுத்துகின்றனர். இப்படி சூளை சோமசுந்தர நாயக்கர், தமிழ்க்கடல் மறைமலை அடிகள், குருகுல இயக்கம் தவத்திரு. அழகரடிகள், ஒளியகம் ந. ரா. ஆடலரசு என்ற நால்வரை குரு சிஷ்யர் அல்லது ஆசிரிய மாணாக்கர் என்ற வகையிலே தங்களுக்குரிய மரபினராகவும் இவர்களோடு திருக்கழுக்குன்றம் என்ற தளத்தை பெரிதும் தொடர்பு படுத்தி வழிபாட்டு முறைகளையும் அண்ணவாறு தகவமைத்துக் கொண்டு தமிழ் வழிபாட்டையும் தமிழ் சைவம் என்ற அந்த நெறியையும் முன்னெடுத்து செல்கின்றனர்.
ஒரு கோளினுடைய இரு துருவங்களாக இதை நாம் நோக்க வேண்டியுள்ளது; கடவுள் மறுப்பு கொள்கையாளர்களாக இருக்கக்கூடிய திராவிட சித்தாந்திகளிடமிருந்து தமிழ் மூலத்தினை ஏற்கக் கூடிய, தமிழருக்கும் திராவிடருக்கும் இருக்கக்கூடிய தனித்தன்மையை ஏற்றுக் கொள்வதும் ஆனால் அவர்கள் முன்மொழிவுக்குரிய கடவுள் மறுப்புக் கொள்கையை பெரிதும் சாடுவதுமாக அமைந்து; இன்னொரு புறம் வைதீக சமயத்தை கட்டமைத்த சனாதன தர்மத்தை முன்மொழியக் கூடிய இந்துத்துவ அரசியல் இயக்கங்களுக்கான கடவுள் இருப்புக் கொள்கையும் கருத்து முதல் வாதத்தையும் கோவில் முதலிய சமய நிறுவனங்களை பேணவேண்டிய அவசியமாகிய கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு வடமொழி மூலங்களுக்கு அவர்கள் தரும் முதன்மையை தகர்த்தெறியக்கூடிய வகையிலும் தமிழ் சைவம் என்ற நெறி தன்னைத்தான் தகவமைத்துக்கொண்டு பரவிக் கொண்டிருப்பதை நாம் தமிழகத்தில் காண முடிகின்றது.
தமிழகத்தை தாண்டி அயல்நாடுகளில் சைவத்தினுடைய நிலைமையை எண்ணிப் பார்க்கும் பொழுது, அயல்நாடுகளில் அதிகமாக இந்த தமிழ்ச் சைவ நெறி தான் பரவி இருக்கிறது; அது வெகுஜனம் அடைந்து இப்படி ஒரு உருவில் தான் மேலும் பரவலாக்கி கொண்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
அக்காலத்து முதல்வர்களாக இருந்த ஓமந்தூரார் இராஜாஜி அவர்களுக்கும் அழகரடிகள், ந.ரா. ஆடலரசு ஆகியோருக்கும் இருந்த தொடர்பும்; இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் பெரியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் இருந்த நெருக்கத்தையும்; நிறுவனமயமாக்கப்பட்ட வைதீக அமைப்பான ஆதீனத்தினுடைய தலைவராக இருந்த குன்றக்குடி அடிகள் தமிழ்ச் சைவ வழிபாட்டை முன்மொழிந்ததும், அடிகளாருக்கும் தன்னை சுயமரியாதை இயக்கத்தினுடைய முன்னோடியாக பிரகடனப்படுத்தி பல சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட நாத்திகரான தந்தை பெரியாருக்கும் இருந்த தொடர்பும் ந. ரா. ஆடலரசு ஐயா அவர்கள் இதற்கெல்லாம் மிகப்பெரிய காரணியாக இருந்ததையும்; இவர்களுடைய இந்த இயக்கம் திருக்கழுக்குன்றம் என்ற தலத்தை மையமிட்டு வைதீக சமயம் கட்டமைத்திருக்கக்கூடிய வழிபாட்டு முறைகளில் பெருமளவு மாற்றங்களை செய்திருப்பது ஆகிய பல செய்திகளை நாம் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டி இருக்கிறது.
இந்த வகையிலே காவி வேட்டிகளுக்கும் கருப்பு சட்டைகளுக்கும் இடையே ஒரு புது நெறியாக தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டு தமிழ்ச் சைவம் என்ற நெறி பயணித்துக் கொண்டிருப்பது நாம் பொருளாதார ரீதியாக அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய சமய அரசியல் ஆகும்.
விவாதங்கள் விரிவாக தொடரும்……………
Comments
Post a Comment