சாலையிலும் சந்திலும் அப்துல்கலாம் -அழகுராஜ்

  சாலையிலும் சந்திலும் அப்துல்கலாம் -அழகுராஜ்


    மேலேயுள்ள தினத்தந்தி நாளிதழின் ஜூன் 29ஆம் நாள் செய்தி தான் இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்குரிய தொடக்கப் புள்ளி. அதில் குறிப்பிட்டு பார்க்க வேண்டிய தகவல் 2015 ஆம் ஆண்டு என்கிற காலக் குறிப்பு. டெல்லியில் உள்ள பிரதான சாலை ஒன்று ஔரங்கசீப் சாலை என்ற பெயரில் இருந்ததை பொறுக்க முடியாத அரசு 2015 ஆம் ஆண்டு அப்துல்கலாம் சாலை என்று பெயரை மாற்றியுள்ளது. இப்போது 2023ல் அப்துல் கலாம் சாலையையும் பிரித்விராஜ் சாலையையும் இணைக்கும் ஔரங்கசீப் சந்து அப்துல்கலாம் சந்தாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் டெல்லி மாநகராட்சி மூலம் முன்னெடுக்கப்பட்ட செய்தியை பின்னிணைப்பாக பார்வைக்கு கொடுத்துள்ளேன்.

     அவுரங்கசீப்பும் அப்துல் கலாமும் இஸ்லாமியர்கள் தானே ஏன் இப்படி ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்? இந்த மாற்றத்தின் தேவை என்ன? என்ற கேள்விகளை கேட்டுக் கொண்டதன் விளைவாக எனக்குக் கிடைத்த பதிலை இக்கட்டுரை வாயிலாக முன்வைக்கிறேன். அதற்கு முன் தற்போது இந்திய மக்களின் மனங்களை உலுக்கியுள்ள மணிப்பூர் வன்முறையை எதிர்க்கும் முகநூல் பதிவில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா குறிப்பிட்ட வரிகளையும் இந்த இடத்தில் சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது.

மணிப்பூர்

அவர்கள் 

ஒரு இஸ்லாமியரை

குடியரசுத்தலைவராக்கிவிட்டு

அந்தவொரு இஸ்லாமியரைத் தவிர 

மற்ற இஸ்லாமியர்கள் அனைவருக்கும் 

கேடு விளைவித்தார்கள்.

அவர்கள்

ஒரு தலித்தை குடியரசுத் தலைவர்

ஆக்கியபோதும்

அதுவேதான் நடந்தது.

அந்த வரிசையில் 

ஒரு பழங்குடியை

அதிலும்

ஒரு பழங்குடிப் பெண்ணை

அவர்கள் முன்னிறுத்தும்போதே

நாம் சுதாரித்திருக்க வேண்டும்."

      அப்துல்கலாமை 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஆக்கியது அன்றைய வாஜ்பாய் அரசு. ஏன் அன்று வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசின் மூலம் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆக்கப்பட்டார் இன்று அவுரங்கசீப்புக்கு மாற்றாக ஏன் அப்துல் கலாம் முன்னிறுத்தப்படுகிறார் போன்ற கேள்விகளுக்கான பதிலை 2016 ஆம் ஆண்டு அ‌. மார்க்ஸ் எழுதி உயிர்மெய் வெளியீடாக வந்த ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் என்ற நூலினை முதன்மைக் கருவியாகக் கொண்டு பேசலாம். 


      அப்துல்கலாம் அவர்களது அரசுக்கு ஏற்றவர். அவுரங்கசீப் மட்டும் எதிரானவரா? என்ற ஒரு கேள்வி உண்டு. அவுரங்கசீப் எதிராக முன்னிறுத்தப்படுவதில் தான் அரசியல் உள்ளது. “முன்னாள் ஒரிசா ஆளுநர் பீஷாம்பர்நாத் பாண்டே ஔரங்கசீப் வெளியிட்ட பெர்சிய மொழி ஆணைகளைத் தொகுத்துள்ளார். இந்துக் கோவிலை கட்டுவதற்கும் ஔரங்கசீப் நிலங்களை வழங்கியுள்ளதை அவர் நிறுவியுள்ளார்" என்று அ.மார்க்ஸ் குறிப்பிடும் முதல் செய்தியின் வாயிலாக அவுரங்கசீப் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல என்பது ஆவண அடிப்படையில் உறுதிப்படுகிறது. மகாராஷ்டிரா அரசியலில் சிவாஜிக்கு எதிராக ஔரங்கசீப்பையும் அப்சல்கானையும் முன்னிறுத்தி மதவாதத்தை மையப்படுத்திய அரசியலை முன்னெடுக்கின்றனர். ஆனால் நன்கு கவனித்துப் பார்த்தால் அன்று நிகழ்ந்தது மதவாத போட்டி அல்ல ஆளுகைக்கான இடங்களை பிடிப்பதற்கான போட்டி என்பது தெரியவரும். இன்று அவைகள் அப்படியே மாற்றி முன்வைக்கப்படும் கொடூரம் நிகழ்கிறது. இந்தச் செய்தியை இங்கே குறிப்பிடுவதற்கான காரணம் 2015ல் சாலை பெயர் மாற்றப்படும் போது அதனை ஆதரித்தவர்களில் இன்றும் அன்றும் டெல்லி முதல்வராக இருக்கக்கூடிய அரவிந்த் கெஜ்ரிவாலும் சிவசேனா அமைப்பும் அடக்கம். சிவசேனா அமைப்பின் அரசியலுக்குள் சிவாஜியை வைத்து ஔரங்கசீப் களமாடப்படுகிறார். அன்று பெயர் மாற்றத்தை ஆதரித்த சிவசேனா அமைப்பினர் மகாராஷ்டிராவில் ஔரங்கசீப் சமாதி இருக்கக்கூடிய ஔரங்காபாத் மாவட்டத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த எதிர்ப்போடு பாகிஸ்தானில் பிறந்த இந்திய முஸ்லிமான தாரே படாஹ் பெயர் மாற்றத்தை கொண்டாடிய செய்தியையும் அ. மார்க்ஸ் சேர்த்து கூறியுள்ளார். அதில் சூஃபி ஞானியிலிருந்து சீக்கிய குரு பகதூர் வரை பலரை கொன்றளித்தவர் ஔரங்கசீப் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஔரங்கசீப் என்ற அரசனுக்கு ஒரு சட்டம் ராஜ ராஜ சோழன், கட்டபொம்மன் போன்ற அரசர்களுக்கு மற்றொரு சட்டமா? என்ற கேள்வியை “மன்னர்களென்றாலே அப்படித்தான்" என்ற வரிகளில் அ.மார்க்ஸ் சுட்டியுள்ளார். அசோகனையும் பகதூர் ஷாவையும் அவர்கள் செய்த நற்செயல்களைக் காரணம் காட்டி விதிவிலக்கு ஆக்கியுள்ளார். இதில் வேறு சில தமிழ் மன்னர்களையும் விதிவிலக்கு அட்டவணையில் சேர்க்கலாம்.

     அப்துல்கலாம் மாற்றாக முன்வைக்கப்படும் காரணம் என்னவென்றால் பாஜக தான் அவரை குடியரசுத் தலைவராக முன்னிறுத்தியது என்கிற வரலாறு. ஔரங்கசீப் கொடுமையான ஆட்சியாளனாக இருப்பினும் அன்றைய காலத்தில் அவர் ஒரு பேரரசர் நிலையில் இருந்தவர். பின்னாளில் அவர் செய்த தவறுகளின் பலனால் தனது மதிப்பை இழந்த போதிலும் ஔரங்கசீப் என ஒருவர் இல்லை என்றாகி விடாது. ஔரங்கசீப்பும் அப்துல்கலாமும் நூலின் கடைசி கட்டுரை அப்துல்கலாமை பா.ஜ.க வைத்துக் கொண்டதன் பின்னணி. இக்கட்டுரையில் அப்துல்கலாமின் நல்லெண்ணச் செயல்பாடுகளையும் தீங்குக்கு துணைபோகிய அவருடைய தன்மையையும் குடியரசுத் தலைவர் எனும் பொறுப்பிற்கு தகுதியுடையவராக அவர் செயல்பட்டாரா? தகுதியுடையவராக இருந்தாரா? என்ற கேள்வியையும் ஒரு சேர முன்வைக்கிறார் அ. மார்க்ஸ். அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தவர்களான இஸ்லாமியரின் பக்கம் ஏன் நிற்கவில்லை என்ற கேள்வி அரசியல் தளத்தில் முக்கியமானது. இதே செயல்தான் இன்று மணிப்பூர் கலவரத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் மௌனத்திற்குள்ளும் இருக்கிறது. மேலும் அப்துல்கலாம் அதிகம் புகழப்படும் காரணங்களில் ஒன்றான பொக்ரான் அணு ஆயுத சோதனையானது வெற்றியடைந்ததா என்கிற சர்ச்சை இந்த நூலில் இடம் பெற்றுள்ள அறிவியலாளர்களின் கருத்துக்களால் எழுப்பப்படுகிறது. 

     அப்துல்கலாம் லட்சிய இந்திய இயக்கம் என்ற அமைப்பு அப்துல் கலாமின் மறைவிற்குப் பிறகு தோன்றி பலவித மாற்று செயல்பாடுகளை முன்வைக்க தொடங்கியுள்ளது. அதில் பணமதிப்பேற்றம் முதலானவை பொருளாதார ரீதியில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள். அதே நேரம் நதிநீர் இணைப்பு முதலான அம்சங்கள் இயற்கைக்கு பாதகமானது என்ற கருத்து இயற்கையியல் ஆய்வாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மூலம் முன்வைக்கப்படுகிறது. இத்தகைய திட்டங்கள் எல்லாம் வளர்ச்சியை மட்டுமே பெரும்பாலும் கவனத்தில் கொள்ளும் திட்டங்களாக இருக்கின்றன. இதில் கலாமின் சிந்தனை எந்த பக்கம் இருக்கிறது என்பதை அனுமானிப்பது தேவையான செயல்பாடு. ஒரு கம்யூனிஸ்ட்டின் ஆட்சி நடந்தால் அவர்கள் தொழிலாளர் பிரச்சினைகளை தீர்த்து தொழிலாளர் நலன் மீது அதிக அக்கறை காட்டுவார்கள்‌. தலித் பகுஜன் அமைப்பு ஆட்சி பீடத்தில் இருந்தால் தலித் விடுதலைக்கான தற்போதைய முன்னெடுப்பாக இருக்கும் இட ஒதுக்கீடு முதலானவற்றில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள். திராவிட கொள்கைகள் கொண்ட கட்சிகள் மொழி, மாநில சுயாட்சி போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து தங்கள் ஆட்சியை நடத்துவார்கள். இவையெல்லாம் அடிப்படையான உரிமைகளை பெறுவதிலும் அதனை தக்க வைப்பதிலும் காட்டும் கவனம் ஈர்க்கும் செயல்முறைகள். பாஜக ஆட்சியில் இருந்தால் அவர்கள் ஒன்றை மட்டுமே முன் நிறுத்துவார்கள் அது ஒற்றைத் தன்மையை வலியுறுத்தும் மாற்றம். அதற்குள் இங்கு சரியானது என அறிஞர்களாலும் விஞ்ஞானிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு புதுமை, நவீனம், வளர்ச்சி என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்ட பழைமையை கல்வி முதலான தளங்களுக்குள் புகுத்துவர். இந்நூல் இதற்கு தீர்வாக தருவது ஒரு அமைப்பின் கொள்கை குறிப்பாக அரசியல் அமைப்பின் கொள்கையில் வளர்ச்சியோடு உரிமைக்கான பங்கும் இருக்க வேண்டும் என்பதே.

     குடியரசுத் தலைவரான பின் அப்துல்கலாம் எப்படியான சேவைகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்ததோடு அவருடைய மரணம் நிகழ்ந்த இடம் முதலானவை அவர் மீதான மதிப்பையும் அபிமானத்தையும் அதிகப்படுத்தி இருப்பினும் மத அடையாளங்களை சுமந்து கொண்டு திரியாதவராக அவர் இருந்திருப்பினும் அவர் ஒரு அரசியலமைப்பு சட்டத்தின் உயரிய பொறுப்பான குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்தபோது பொம்மையாக இருந்தது தன்னளவில் அவரே மாற்றியிருக்க வேண்டிய ஒன்று ஆனால் அது செய்யப்படவில்லை. அவரால் எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் தன்னம்பிக்கையும் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் பேசினாலும் சமூகப் பொறுப்புணர்வு குறித்து பேச தவறியுள்ளது. அரசியல் ரீதியாக வழிநடத்தக் கூடிய அல்லது வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள தலைவர் சமூகப் பொறுப்பையும் சேர்த்து பேசி இருக்க வேண்டும். ஒருவேளை சமூகப் பொறுப்புணர்வு குறித்து ஏற்கனவே இங்கு பரவியுள்ள கொள்கைகளின் வழியே அவர் தனது சிந்தனை முறையை வெளிப்படுத்தி இருந்தால் இந்த அளவிற்கு அவர் பெற்றுள்ள மக்கள் அபிமானத்தில் ஏதேனும் குறை ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

     இஸ்லாமிய பிரிவினை அரசியலில் பெயரைத் தவிர்த்து காணப்படும் பிரதானமான என்றைக்குமான வெறுப்பு அரசியல் பசுவை உயர்வுக்குரிய புனித குறியீடாக்கும் அரசியல். “ பசு அப்படி ஒன்றும் புனிதமான ஒன்றாக பழங்காலத்தில் கருதப்பட்டதில்லை." என்ற வரலாற்றறிஞர் டி‌.என்‌.ஜாவின் கருத்தோடு வலிமைமிக்க கட்டுரையை மார்க்ஸ் எழுதியுள்ளார். அதில் பசுவை வைத்து செய்யப்படும் பெரிய அளவிலான பீஃப் வியாபாரத்தையும் பசுவதை சட்டங்களையும் பசுக்கள் கடத்தப்படுவதையும் வெளிப்படுத்த கட்டுரை தவறவில்லை. 

     இம்மியளவு கருத்திலும் பண்பாட்டிலும் பழக்கவழக்கத்திலும் மாறுபட்டு நின்று கேள்வி கேட்பவர்களுக்கு தேசத்துரோகி என முத்திரை குத்தி மாற்று கருத்தை மழுங்கடிக்கும் வேலையைச் செய்யும் அரசுக்கெதிராக எது தேசத்ரோகம் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. “ஒரு ஜனநாயக அரசமைவில் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு இடமில்லை" என்ற அகில் பில்கிராமியின் தர்க்கபூர்வ கருத்தோடு நின்று உரிமையை கேட்பது எப்படி குற்றமாகும்? அதுவும் தேசத்துரோக குற்றமாக எப்படி அமையும் என்று எடுத்துக்காட்டுகளை முன்வைக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் வாதத்தின் போது முன் நிற்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன. 

     ஊடகங்களும் பத்திரிகைகளும் மக்களாட்சி நாட்டின் நான்காவது தூண் என்பர். அதனை முடக்குவதையும் தனக்காக பயன்படுத்த அச்சுறுத்தி மாற்றத் துணிவதிலும் உள்ள சிக்கல்கள் நுண்மையாக இந்த நூலில் பேசப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறையிலும் கூட அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் இப்படியான சம்பவங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் இணையத்தை முடக்கி வைத்திருந்தோம் என ஊடகத்தில் பகிரங்கமாக தெரிவிக்கும் போக்கு ஒரு பக்கமும் மற்றொரு பக்கம் Niti Central Board and Right, Central Right India, Central Right perspective போன்ற ஊடக அமைப்புகளின் பெயர்களில் Right என்பது அகராதியின் பொருள் அடிப்படையில் வலது சாரிய உரிமை என்று குறிப்பிடப்படும் வகையில் பெயர்களை சூட்டி இருப்பதை குறிப்பிட்டு, அத்தகைய ஊடகங்கள் தங்கள் விஷம கருத்துக்களை விதைப்பதை ராமச்சந்திர குஹா, அமர்த்தியா சென் முதலான அறிஞர்கள் எதிர்த்துள்ள செய்தியையும் பதிவு செய்துள்ளார் மார்க்ஸ். இப்படியான ஊடகங்களில் பரப்பப்படும் பரப்புரை விடுதலைப் போராட்டத்தில் பங்கு செலுத்திய தேசிய தலைவர்களை தங்களுக்கானவர்களாக பா.ஜ.க மாற்றக்கூடிய பரப்புரையே ஆகும். அம்பேத்கர் முதற்கொண்டு நேதாஜி வரை இதில் அடக்கம். அம்பேத்கரை அவர்கள் பயன்படுத்தக்கூடிய விதத்தை அனைவரும் அறிவர். நேதாஜியையும் அப்படியே பயன்படுத்த முனைந்துள்ளனர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இஸ்லாமியர்கள் முன்னணி வீரர்களாக இருந்ததை அழுத்தமாக நாம் பதிவு செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறோம். 

      புரட்சிகர பயங்கரவாதியாக இடதுசாரிய கருத்தை பகத்சிங் கொண்டிருந்ததால் அவரைப் பற்றிய வரலாறை மறைக்க பா.ஜ.க முயன்றுள்ளது. தனக்கு ஏற்றவர்களாக மாற்றக்கூடிய தலைவர்களை மாற்ற முயற்சிப்பதும் மாற்றக்கூடிய நிலையில் இல்லாத தலைவர்களை மறைக்க முயல்வதும் தான் இவர்களது நிலைப்பாடு. ஹே ராம் எனச் சொல்லி இறந்த காந்தியை கொன்றவர்கள் அவருக்கான ராமரை மறைத்து வேறு ஒரு ராமரை அவர் தன்னளவில் கொண்டிருந்தார் என்ற வியாக்கியானங்களை புகுத்துகின்றனர். பகத்சிங் எழுதியுள்ள நேதாஜி மற்றும் நேருவின் சிந்தனையும் உலகப் பார்வையும் : ஓர் ஒப்பீடு என்ற நூலை மேற்கோளாக்கியுள்ள கட்டுரையில் இந்திய சுதந்திரத்தின் போது போஸ் செய்த முயற்சிகளும் அதிலிருந்து மாறுபட்ட நேரு காந்தி முதலானவரின் கருத்துகளும் சுருக்கமான முறையில் பேசப்படுகிறது. தேச தலைவர்களை குறித்து பேசும்போது அப்துல்கலாம் நாடாளுமன்ற வளாகத்தில் சாவர்க்கர் படம் மாட்ட ஒப்புதல் அளித்த வரலாற்று தவறையும் குறிப்பிட வேண்டும். போஸ் முசோலினியை சந்தித்ததை மறைமுகமாக குறிப்பிட்டு நேருவின் பெருமைகளில் ஒன்று அவர் முசோலினியையும் கோல்வால்கரையும் சந்திக்க மறுத்தது என்கிறார் அ.மார்க்ஸ். ஏ பி வி பி அமைப்பின் வடிவம் முசோலினியின் பள்ளில வடிவத்தோடு குறிக்கோள் மற்றும் செயல் வடிவ அடிப்படையில் ஒற்றுமை படுவதையும் மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். 

      டீஸ்டா செடல்வாட் போராளியாக மாறியபின் அவர் சந்தித்த இடர்பாடுகளை பேசும் இடத்தில் மோடியின் அதிகாரத்துவம் வெளிப்படுகிறது. மதவாத அரசியலைத் தாண்டி மோடி செய்யக்கூடியது தனியார்மயமாக்கலும் அணு ஆயுத ஒப்பந்த மாற்றங்களும் என்கிற உலகளாவிய பார்வையையும் இந்நூல் சேர்த்து காட்டுகிறது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக நிற்கக்கூடிய பார்வையில் இந்த அரசு நிற்கும் போது அதற்கு துணை நிற்கக்கூடாது என்பதையும் ஒரு இஸ்லாமியர் தங்களுக்குள் சீர்திருத்தத்தை முன்னிறுத்தும் போது அவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்பதையும் பெரியாரின் வழியில் பேசக்கூடிய இந்த நூல் பொது சிவில் சட்டம் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ள இந்நாட்களில் வாசிக்கத்தக்க நூலாகும்.


பார்வைக்கு:

https://www-indiatoday-in.translate.goog/education-today/gk-and-current-affairs/story/aurangzeb-road-delhi-renamed-dr-apj-abdul-kalam-road-290854-2015-08-29?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc


https://m-timesofindia-com.translate.goog/city/delhi/delhis-aurangzeb-lane-renamed-apj-abdul-kalam-lane-ndmc/articleshow/101343661.cms?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc


https://tamil.oneindia.com/news/delhi/in-delhi-at-lutyens-aurangzeb-lane-renamed-with-dr-apj-abdul-kalam-lane-518888.html



Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு