கருவை ந.ஸ்டாலின் கவிதைகள் [பருவம் -1]
தாகம்
எல்லாருக்குள்ளுமிருக்கிறது
உடல் நிறைய விசம்
எல்லாருக்குள்ளுமிருக்கிறது
மனதளவு அமிழ்தம்
எல்லாருக்குள்ளும் இருக்கிறது
மிடறு வரை தாகம்
யார் கைகளில் இருக்கிறது
கைப்பிடி தண்ணீர்.
**************************************
உடன் முத்தம்
உன் மெளனத்தின்
உரையாடலை
என் காத்திரமான கத்தல்களுக்கு
பின் உறைய வைத்திருக்கிறாய்
கோபக் கங்குகளின்
சிதறல்களில் உருகியோடும்
அதீத அன்பை
அரவணைப்பில் அலாதிக்கிறாய்
அதே மெளனம் சூழ்ந்துவிட்டது
மீண்டும்,
இந்த முறை உரையாடலுடன்
உடன் முத்தம் தொற்றிக் கொண்டது.
**************************************
சுய சூனியத்தின் முற்றுப்புள்ளி
கோடிட்ட இடத்தை
நிரப்புவதால் என்ன பயன்
வெற்றிடத்தை நிரப்பும் ஒளியை
கண்டடைவது தான் தேடலின்
உச்சம்
இப்பாதை வழியாக தான் சென்றேன்
யார் உருவாக்கியதும் இல்லை
யார் பழக்கப்படுத்தியதும் இல்லை
சுய சூனியத்தின் வீரியத்தில்
கண்டடைந்தது
உங்களுக்கு ஒன்று தெரியுமா
நானும் கோடு போட கற்றுக் கொண்டேன்
அப்படியே முற்றுப்புள்ளி
வைக்கவும்…
**************************************
மனிதர்கள்
ஒவ்வொரு நாள் இரவிலும்
பேர் சொல்லத் தெரியாத
மிருகம் பறவையெல்லாம்
வந்த வண்ணம் தான் இருக்கின்றன
ஒரு நாளும் மறந்தும் கூட
வந்ததாக இல்லை
மனிதர்கள்…
**************************************
பூப்பதற்கும் தான் அது
பூத்திருக்கும் பூக்கள்
பறிப்பதற்கும்
தொடுப்பதற்கும்
கசக்கி காயமாக்குவதற்கும்
காய்வதற்குமட்டுமல்லஅது....
பூப்பதற்கும்..
**************************************
(படங்கள் -கூகுள்)
அன்பும் மகிழ்வும்...
ReplyDeleteமகிழ்ச்சி
Delete